சிறுகதை

உறவை மறந்த பறவை | கரூர் அ.செல்வராஜ்

கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்புக் காலத்தில் மென்பொறியாளர்களுக்கு ‘வீடே அலுவலகம்’ என்ற புதிய வேலைத் திட்ட முறை அறிமுகம் செய்யப்பட்டது. அந்த முறை இன்றும் தொடர்கிறது.

மென்பொறியாளர் அருண்குமார் தனது அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து விருப்பத்தோடு செய்து வந்தான். வழக்கமான வேலைத் திட்டத்தில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் அம்மா செய்திருந்த சமையலில் மதிய உணவைச் சாப்பிட்டான். சற்று ஓய்வெடுக்க நினைத்தான்.

அந்த நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி இன்னிசை பாடிக் கொண்டு அடித்தது. அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து சென்று வீட்டுக் கதவை திறந்தான். கதவுக்கு வெளியே நின்று கொண்டிருந்த தன் தாய்மாமா சிவக்குமாரைப் பார்த்து மலர்ந்த முகத்தோடு பேசினான்.

‘மாமா! வாங்க மாமா!!’’ என்று அன்போடு அழைத்து வந்து கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர வைத்தான். நலம் விசாரித்து மகிழ்ந்தான்.

அண்ணனின் பேச்சு சத்தம் கேட்டதும் சமையல் அறையிலிருந்து அவசரமாக வந்து தங்கை ஜெயலட்சுமி ‘அண்ணே! வாங்க அண்ணே! நீங்க மட்டும் தான் வந்தீங்களா? அண்ணியை அழைச்சிட்டு வரலியா? அண்ணியை நேரில் பார்த்து பேசி 6 மாசத்துக்கு மேலே ஆச்சு. சரிங்க அண்ணா, அண்ணி நல்லா இருக்காங்களா? நீங்க எப்படி இருக்கீங்க? வீட்லே எல்லோரும் கவுக்கியமா இருக்கீங்களா? உங்க எல்லோருடைய சவுக்கியத்துக்காகவும் ஆண்டவனிடம் அடிக்கடி வேண்டிக்கிட்டு இருக்கிறேன். சரிங்க அண்ணா! நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன். ஊரிலே இருந்து பசியோடு வந்திருப்பீங்க, முதல்லே சாப்பிட வாங்க, மத்த விஷயங்களை அப்புறமா நிதானமாப் பேசுவோம் வாங்க’ என்று அழைத்துச் சென்று அண்ணனுக்கு மதிய உணவைப் பாசம் கலந்து பரிமாறினாள் தங்கை ஜெயலட்சுமி.

மதிய உணவைச் சாப்பிட்டதும் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தார் சிவக்குமார். மாலை நேரத்தில் தங்கை ஜெயலட்சுமி போட்டுத் தந்த சூடான, சுவையான, இஞ்சி டீயை மெல்ல உறிஞ்சிக் குடித்து முடித்தார். காலியான டம்ளரைத் தங்கையிடம் கொடுத்து விட்டு தனது பேச்சை மெதுவாக ஆரம்பித்தார்.

‘ஜெயா!’

‘சொல்லுங்க அண்ணே!’

‘ஒரு முக்கியமான விஷயம் பேசணும்’

‘பேசுங்க அண்ணே!’

‘முக்கியமான விஷயத்தை உங்கிட்ட மட்டும் பேச முடியாதும்மா. அந்த விஷயத்தைப் பத்தி உன்னோட வீட்டுக்காரர்கிட்டேயும் பேசணும். அது தான் கொஞ்சம் யோசிக்கிறேன். அது சரி, உங்க வீட்டுக்காரர் எங்கே? அவரு எப்ப இங்க வருவாரும்மா’?

‘அண்ணா! அவரு அவசர வேலையா பேங்குக்குப் போயிருக்காரு. பேங்க வேலையை முடிச்சுட்டு 10 நிமிஷத்திலே வீட்டுக்கு வந்திருவேன்னு போன் பேசினாரு. அவரு இப்ப வர்ற நேரம் தான் அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்குங்க’ என்றாள் ஜெயலட்சுமி.

கால் மணி நேரம் கழித்து ஜெயலட்சுமியின் கணவர் ஜெயராமன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவசர கதியில் குளியல் அறைக்குச் சென்று முகம், கை கால் கழுவிச் சுத்தம் செய்து கொண்டு கொஞ்சமாக மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு மனைவி ஜெயலட்சுமியின் அண்ணன் பேச்சைக் கேட்கத் தயார் ஆனார். ஜெயலட்சுமியின் அண்ணன் சிவக்குமார் தனது பேச்சை மீண்டும் தொடங்கினார்.

‘ஜெயா!’

‘சொல்லுங்க அண்ணே!’

‘முக்கியமான விஷயம் பேச வந்திருக்கிறேன். அந்த விஷயத்தைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க’

‘சரிங்க அண்ணே! சொல்லுங்க’

‘என் மகள் பிரியாவை உங்க மகன் அருணுக்குப் பொண்ணு கேட்டு வந்தீங்க. அந்த நேரத்திலே நாங்க முடியாதுன்னு சொல்லிட்டோம்.

‘ஆமாம். அது மட்டுமா சொன்னீங்க? அருண் கறுப்பா இருக்கிறான். பட்டிக்காட்டுத் தனமா நடந்துகிறான். அவனைப் பிரியாவுக்கு சுத்தமாப் பிடிக்கலேன்னு சொன்னீங்க. அது மட்டுமா சொன்னீங்க, என் மகள் பிரியா பெங்களூர் வேலையை விட்டுட்டு வேற எந்த ஊருக்கும் வர மாட்டாள். கட்டிக்கிற மாப்பிள்ளைதான் கட்டாயமா பெங்களூர் வந்து வாழுணும்னு கண்டிஷன் போட்டீங்களே’

‘ஜெயா! அந்தநேரத்திலே என் மகள் பிரியாவும் அவளின் அம்மாவும் கண்டிஷன் மேலே கண்டிஷன் போட்டாங்க இப்ப அதிலிருந்து சுத்தமா மாறிட்டாங்க. எப்படி மாறுனாங்க தெரியுமா? பிரியா வேலை செஞ்ச பெங்களூர் கம்பெனியிலிருந்து கொஞ்சம் பேரை ஆள் குறைப்பு செஞ்சாங்க. அதிலே ஒரே ஒரு வருஷம் மட்டும் வேலையிலிருந்து பிரியாவையும் வேலையிலிருந்து நீக்கிட்டாங்க இப்ப அவள் வேற வேலைக்கு முயற்சி செஞ்சுகிட்டிருக்காள். அது மட்டுமில்லே. மாப்பிளை விஷயத்திலே பழைய கண்டிஷனை எல்லாம் அப்படியே மாத்திகிட்டா.

‘அண்ணா! இப்ப என்ன சொல்ல வர்றீங்க? அதைக் கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க அண்ணே. பிரியாவின் கல்யாண விஷயத்திலே முடிவ எடுக்க வேண்டியது நீங்க தானே’.

‘ஜெயா! நான் இப்படி நேரடியா விஷயத்துக்கு வற்றேன். என் மகள் பிரியாவை உங்க வீட்டு மருமகளா ஏத்துக்க சம்மதமா!’’.

‘அண்ணா! காலம் கடந்த முயற்சியிலே நீங்க இறங்கி இருக்கீங்க. என் மகன் அருணுக்கு கோயம்புத்தூரிலே ஒரு பொண்ணைப் பார்த்து நிச்சயம் பண்ணிட்டோம். வர்ற பொங்கல் பண்டிகைக்கு பிறகு வருகிற முகூர்த்த நாளில் கல்யாணம் நடக்கப் போகுது அண்ணே!’

‘ஜெயா! நீங்க எடுத்த முடிவு தப்புன்னு நான் சொல்ல வரலே. ஆனாலும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்து முடிவு எடுத்திருக்கலாமே’’

‘அண்ணே! நீங்க அந்தஸ்து, அழகு, பணம் இதெல்லாம் நிரந்தரம்ணு நினைச்சீங்க. உங்கள் நிலைமை உறவை மறந்த பறவை போலிருந்தது. நாங்க அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை. எங்க குடும்பத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு மருமகளைத் தேடிக் கண்டுபிடிச்சிட்டோம். அது மாதிரி நீங்களும் உங்க குடும்பத்துக்கு ஏற்ற மாதிரியான ஒரு மருமகனைத் தேடிக் கண்டுபிடிங்க. பாலத்திலே சிறந்த பாலம் உறவுப்பாலம் அதை நீங்க உடைச்சாலும் நாங்க உடைக்க மாட்டோம். நீங்க சந்தோஷமா ஊருக்குப் போங்க. என் மகன் அருணின் கல்யாணத்துக்குப் பதிரிக்கை வைக்கிறேன். கண்டிப்பா நீங்க உங்கள் குடும்பத்தோடு வந்து கலந்துக்கணும். தை பிறந்தா வழி பிறக்கும் அப்படீன்னு பெரியவங்க சொல்லி இருக்கிறது உங்களுக்கும் தெரிந்சது தான். பிரியாவுக்கும் நல்ல வழி பிறக்கும். நான் நம்பறேன். நீங்களும் நம்புங்க’’

‘ஜெயா! சரிம்மா, எந்த விதமான மன வருத்தமும் எனக்கு இல்லேம்மா. நான் போயிட்டு வர்றேம்மா’ என்று சொல்லி விடை பெற்றார் அந்த உறவை மறந்த பறவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *