சிறுகதை

இல்லாதது பொல்லாதது | ராஜா செல்லமுத்து

அண்ணே, இன்னைக்கு நீங்க எங்க வீட்ல தான் சாப்பிடணும் என்று கதிரவனை கூப்பிட்டார் தம்பி சிவா.

‘‘என்ன தம்பி, இன்னைக்கு வீட்ல விசேஷமா? ’’என்று சிவாவை கொஞ்சம் இளக்காரமா கேட்டான் கதிரவன்.

அப்படி இல்லண்ணே ஏதோ உங்களை சாப்பிட கூப்பிட தோணுச்சு. அதான் கூப்பிட்டேன் என்று சிவா சொல்ல

சரி எப்ப வரலாம்? என்று கதிரவன் கேட்டான்.

இன்னைக்கு மதியம் வாங்கண்ணே என்று சிவா சொன்னான்.

தன் வீட்டில் சாப்பிட வேண்டிய மதிய சாப்பாட்டை கட் செய்யச் சொன்னார் கதிரவன்.

இதைக் கேட்ட மனைவி

என்ன உங்க தம்பி வீட்டில இன்னைக்கு பெரிய விருந்தோ? என்று கதிரவனின் மனைவி நக்கலாக கேட்டாள்.

என்னவோ தெரியல. தம்பி சாப்பிட கூப்பிட்டான். நான் சாப்பிட்டு வந்துடுறேன் என்று சொல்லி நான் கதிரவன் சிவா வீட்டுக்கு சென்றான்.

அன்று மதியம் கதிரவனை வீட்டுக்கு அழைத்துப் போனான் சிவா. சிவாவின் மனைவி முகம் மலர்ந்த புன்னகையோடு கதிரவனை வரவேற்றாள். தன்னை விட வசதிகள் குறைந்தவன் தான் சிவா; என்றாலும் மனது முழுக்க அன்பு நிறைந்தவன் . அவனின் அன்பிற்கு முன்னால் கதிரவனின் அன்பும் அவன் குடும்பத்தாரின் அன்பு அலாதியாக இருந்தது.

அன்று என்னவோ தெரியவில்லை?தன் அண்ணன் அவன் வீட்டில் சாப்பிட வேண்டும் என்று சொன்னதற்காக மனைவியும் என் முகத்தோடு மச்சானை வரவேற்று சாப்பாடு பரிமாறினாள்.

அந்த வீட்டில் விலை உயர்ந்த சோபா, கட்டில் திரைச்சீலை மூடும் ஜன்னல்கள், அலங்கார விளக்குகளும் ஓசைகளும், பளிங்கு கற்கள் எதுவுமில்லை. சின்னவீடு அதுவும் ஏழ்மை நிறைந்த வீடு, அந்த வீட்டை ஒரு முறைக்கு 10 முறை சுற்றிப் பார்த்தார் கதிரவன்

என்ன தம்பி இன்னும் இப்படியே எவ்வளவு நாளைக்கு இருக்கிறது நல்லா சம்பாதிச்சு, முன்னாடி வரணும்பா என்று சொன்னான்.

தொட்டதெல்லாம் இப்ப சரியா விளங்க மாட்டேங்குது சரியா வரல. அடுத்த வருஷம் எப்படியும் வீடு வாங்கிடுவேன் என்றான் சிவா

ஆமப்பா வாங்கிர்னும். எவ்வளவு நாளைக்கு வாடகை வீட்டில் குடியிருக்கிறது என்று கதிரவன் சொல்ல சிவாவின் மனைவி பாயைப் போட்டாள்.தரையில் அமர்ந்த கதிரவன் சாப்பிட ஆரம்பித்தார்

இலையைக் கொண்டு வந்து மச்சானின் முன்னால் வைத்தாள். தண்ணியை தெளித்தார். ஆவி பறக்கும் சோற்றை அள்ளி போட்டாள்.

சரி போதும் போதும் சாப்பிட்டு வாங்கிக்கிறேன் என்று கதிரவன் சொன்னான்.

சிவாவின் மனைவி, சாம்பார் கூட்டு, அப்பளம் என்று மிக எளிமையான சாப்பாடாக இருந்தது அந்த மதிய உணவு

என்ன தம்பி, இந்த சாப்பாட சாப்பிடுவதற்காகவா என்ன கூப்பிட்ட ., நான் கூட ஏதோ அசைவ சாப்பாடு நினைச்சேன் . நீ என்னடான்னா சாம்பாரை ஊத்துர என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டான் கதிரவன்.

அப்போது அவன் போன் ரிங் ஆனது .எதிர்முனையில் இருந்தாள் மனைவி,

என்ன சாப்பிட்டு இருக்கீங்களா? என்று கேட்டாள்.

ஆமா சாப்பிட்டுட்டு தான் இருக்கேன் என்று கதிரவன் சொன்னான்.

என்ன சாப்பாடு? என்ன குழம்பு? என்று கதிரவன் மனைவி கேட்டாள்.

சிக்கன், மட்டன், மீன் வருவல் எல்லாம் ஒரே அசத்தலா இருக்கு என்று சொன்னான்.

இந்த வார்த்தையை கேட்ட சிவாவின் மனைவி முகம் சுருங்கிப் போனது . சிவாவை கூப்பிட்டாள் என்ன உங்க அண்ணன் இப்படி சொல்லிட்டு இருக்கிறாரு.

உள்ளதை சொல்ல வேண்டியதுதானே? எனக்கு என்னமோ மனசு கஷ்டமா இருக்கு. என்ன கிண்டல் பண்றாரா? நாம கஷ்டப்படுறோம்? அப்படின்னு குத்திக் காட்டுகிறாரா? என்று சிவாவின் மனைவி சொன்னாள்.

இல்லம்மா எங்க அண்ணன் அப்படி எல்லாம் சொல்லாது. ஏதோ ஒரு நல்லதுக்கு தான் சொல்லி இருக்கும்னு நினைக்கிறேன் என்று சிவா மனைவியை சமாதானப்படுத்தினான்

அப்போதும் தன் மனைவியிடம் கோழி குருமா, நண்டு வறுவல் என்று அசைவம் ஆகவே பேசிக்கொண்டிருந்தார்.

இது சிவாவிற்கு எரிச்சலை தரவில்லை. மனைவிக்கு எரிச்சலை தந்தது. மனைவியிடம் பேசி முடித்த கதிரவன்.

தம்பி, நீ எதும் தப்பா நினைக்கிறாயா? என்று கேட்க

அப்படி எல்லாம் இல்லைன்னு என்று சிவா சொன்னான்.

‘‘இல்லப்பா எப்பவுமே பொம்பளைங்க ஒரு மாதிரி தப்பா தான் நினைப்பாங்க. இப்ப நான் சாம்பார் சாப்பிடுகிறேன்; ரசம் சாப்பிட அப்படின்னா; அவங்க ஒன்ன பத்தி தப்பா நினைப்பாங்க. அண்ணன இந்த சாப்பாட வா சாப்பிட கூப்பிட்டாங்க. அப்படின்னு உன்ன லேசா எடை போடக் கூடாதுல்ல. அதுக்காகத்தான் நான் அப்படி சொன்னேன். நீ நல்லா இருப்பய்யா, உன்னுடைய மரியாதையையும் கௌரவத்தையும் நான் எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நான், இப்ப சொன்னது உனக்கு பொய்யா தவறாத் தோணலாம். ஆனா, உனக்காகத்தான் நான் அந்த பொய்யை சொன்னேன். நீ என் தம்பி டா. வந்த பொம்பளைங்களுக்கு வேணும்னா நீயும் நானும் வேற ஆளா இருக்கலாம். நீயும் நானும் உடன்பிறந்தவங்க. அதுக்கு தான் நான் அந்த பொய்யைச் சொன்னேன். தப்பா நினைச்சுக்காதே என்று இலையை விட்டு எழுந்தான் கதிரவன்.

அதுவரையில் சிவா மனைவியின் மனதில் வேரூன்றி இருந்த வேதனை இப்போது அடியோடு அறுந்து விழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *