செய்திகள்

இயற்கை மரணமா– கொடூரக் கொலையா? நீதிமன்றத்துக்கே புரியாத புதிர்; 20 ஆண்டு சிறைவாசம் முடித்து ‘‘விடுதலையாகும்’’ தாய்

* 19 நாளில் முதல் குழந்தை மரணம் * 4 மாதத்தில் 2வது குழந்தை பலி

* 10 மாதத்தில் 3வது பெண் குழந்தை சாவு * 18 மாதத்தில், இன்னொரு பெண் குழந்தையும் மரணம்

நியூ சவுத்வேல்ஸ், மார்ச் 22–

பெற்ற 4 பிஞ்சுக் குழந்தைகளையும் கொன்றார் என்று பழி சுமத்தப்பட்டு, கோர்ட் தீர்ப்பி்ன்படி 18 ஆண்டுகளாய் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தாய், விரைவில் விடுதலை செய்யப்படவிருக்கிறார்.

4 குழந்தைகள் விஷயத்தில் நடந்திருப்பது கொலை அல்ல, பரம்பரை –மரபணு நோய் காரணமாகத் தான் பச்சிளம் குழந்தைள் இறந்து விட்டன என்று பல்வேறு விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அந்தத் தாய், விரைவில் விடுதலை செய்யப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

உலகத்தையே– அதிலும், குறிப்பாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள் என்று மூன்று தரப்பினரையும் அதிசயத்தோடும், ஆர்வத்தோடும் உற்று நோக்கி வைத்திருக்கும் இந்த வழக்கு ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

செய்யாத ஒரு குற்றத்துக்காக– சங்கிலித் தொடராக 20 ஆண்டுகள் சிறைக் கம்பியின் பின்னால் இருந்து, ஒவ்வொரு நாளும் மன உலைச்சலில் செத்து செத்துப் பிழைத்திருக்கும் அந்தத் தாயின் பெயர் காத்லீன் ஃபோல்பிக்.

காத்லீனின் வாழ்க்கை இளமையிலேயே சோகம் நிறைந்ததான ஓர் வாழ்க்கை. 18 மாத கைக் குழந்தையாக இருந்தபோது, இவளது தந்தை, மனைவியைக் கொன்று விட்டு, 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டார். காத்லீன், பிஞ்சுக் குழந்தையிலேயே அனாதையானார். அடுத்தவர் பராமரிப்பில் வளர்ந்தார். வயது வந்தது. திருமணம் நடந்தது. கணவன் பெயர்: ஃபோல்பிக்.

முதல் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை, பிறந்த 19 நாட்களிலேயே இறந்தது.

பெயர்: காலேப். அடுத்து கர்ப்பம் தரித்தார். 1990–ல் 2 வயது குழந்தை பிறந்தது. அதுவும் ஆண். பெயர்: பாட்ரிக். ஆரம்பத்தில் மற்ற குழந்தைகளைப் போல ஆரோக்கியத்தோடு இருந்த குழந்தை, 4வது மாதத்தில் திடீரென இறந்தது.

20 மாதம் தாண்டும் முன்னால்…

அடுத்து 3வது குழந்தையும் பிறந்தது. அது பெண். பெயர்:சாரா. 10 மாதக் கைக் குழந்தையாக இருந்தபோது இக்குழந்தையும் உயிரிழந்தது. அடுத்து 4 வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெயர்: லாரா. இக்குழந்தையும் 1991, மார்ச் 1–ந் தேதி, 18 மாதக் கைக் குழந்தையாக இருந்த போது இறந்தது.

பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அதிகபட்சம் 20 மாதம் தாண்டுவதற்குள்ளாகவே உயிரிழந்தது. குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உற்றாரும், உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

4 குழந்தைகளின் மரணமும் புரியாத புதிராக இருந்தது. இந்நிலையில் காத்லீனை விவாகரத்து செய்துவிட்டு கணவர் பிரிந்து போனார். ஒரு நாள் காத்லீனின் டைரியை கணவர் படித்திருக்கிறார். அதில் காத்தலீன் எழுதியிருந்த ஒரு குறிப்பில் சந்தேகம் அடைந்த ஃபோல்பிக், போலீசில் புகார் கொடுத்தார்.

தனக்குப் பிறந்த 4 குழந்தைகளின் மரணத்துக்கு மனைவி காத்லீன் காரணம் என்று புகார் சொல்லியிருந்தார். இந்நிலையில் காத்லீனை போலீசார் 2001–ம் ஆண்டு ஏப்ரல் 19–ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காத்லீனின் தோழி– பால்ய சிநேகிதி ட்ரேசி சாப்மேன் இந்த வழக்கில் சாட்சி சொல்லும் போது, ‘‘எந்த ஒரு ஜீவராசிக்கும் கனவிலும் தீங்கு இழைக்க நினைக்காதவர் காத்லீன். அவர், மீது இப்படியொரு வீண் பழி அபாண்டம்’’ என்று கூறினார்.

முதல் குழந்தை இறந்தது– எதிர்பாராததாக இருக்கலாம். அது வேதனை. அடுத்து 2 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். இது சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. அடுத்து 4வது குழந்தையும் இறந்திருக்கிறது என்றால் சந்தேகம் இன்னும் வலுக்கிறது. கொலையாக இருக்கலாம் என்று எதிர்தரப்பு வாதிட்ட சூழ்நிலையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டே வந்திருக்கிறது. இந்நிலையில் கோர்ட் படிக்கட்டு ஏறிய இந்த விசித்திர வழக்கு விஞ்ஞானிகளின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்திழுத்த நிலையில் பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகள் அனுபவசாலி மூத்த டாக்டர்கள் பிறந்த கைக் குழந்தைகள்– ஒவ்வொன்றும் மரணமடைந்ததன் மர்மம் என்ன என்று தீவிரமாக ஆராய்ச்சியில் இறங்கினார்கள்.

பச்சைக் குழந்தை திடீர் மரணம் ஏற்படுத்தும் நோய் அதாவது சட்டன் இன்பான்ட் டெத் சின்ட்ரோம் என்னும் நோய்க்கு குழந்தைகள் பலியாகி இருப்பதையும், இருதய செல்களுக்கு உள்ளும்– புறமும் கால்சியம் கலந்ததன் காரணமாக உயிரிழந்திருப்பதையும் ஆய்வில் கண்டறிந்து அதை வெளியிட்டுள்ளனர்.

இப்படி கால்சியம் கலப்பதும், சட்டன் இன்பான்ட் டெத் சின்ட்ரோம் என்னும் சிட்ஸ் நோய் தாக்குவதற்கும் பரம்பரை பரம்பரையான மரபணு மாற்றமே அடிப்படை காரணம் என்று மருத்துவ அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது, விசாரணை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பச்சிளம் குழந்தைகள் 4–ம், மடிந்ததற்கு காரணம் பரம்பரை மரபணு மாற்றமே என்று உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காத்லீன் விரைவில் விடுதலையாவார் என்ற நம்பிக்கை மலர்ந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நீதிமன்ற வரலாற்றில் நீதிமன்றங்களையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஒரு வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *