செய்திகள் முழு தகவல்

இன்று – உலக பூமி நாள்!


–ஆர்.கிருஷ்ணமூர்த்தி


கலிபோர்னியா கடலில் எண்ணெய் பெரிய அளவில் கொட்டியது. இதையடுத்து அந்த நாளை சுற்றுச்சூழலை அமைதியான வழியில் பாதுகாக்கும் நாளாக கொண்டாட அமெரிக்கா அறிவித்து இருந்தது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை பூமியை பாதுகாக்கும் நாளாக உலகமே கொண்டாடி வருகிறது. கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு பூமி நாள் கொண்டாடப்பட்டது. . விழிப்புணர்வு நாட்கள் பலவும் அமெரிக்காவில் துவங்கும் கொண்டாட்டமாகவே இருக்கும். அதுபோலவே இன்று மீண்டும் அந்த பூமி நாளை நினைவு கூறுவோம்

அதே 52 ஆண்டுகள் கழித்து இதே நாளில் உலகமே பெரிய அளவில் கொரோனா நோய் தொற்றில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நாளில் பூமியுடன் நம்முடைய தொடர்பு எந்த மாதிரியானது, பூமியுடன் இருக்கும் அனைத்து நமது உறவுகளையும் தொடர்புபடுத்தி என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பூமி என்பது இயற்கை. அந்த பூமியில் எந்த இயற்கை அழிவுகளும் நடக்கலாம். மக்களுக்கு சாதகமான செயல்களும் நிகழலாம். மிகவும் உள்நோக்கிப் பார்த்தால், பூமி தான் மக்களுக்கு சாதகமானவற்றை அதிகமாக செய்துள்ளது. அதன் இயற்கை அழகை பல வழிகளிலும் கெடுத்துக் கொண்டு இருப்பது மனித இனம்தான் என்பதை மிகவும் வெட்கத்துடன் ஒப்புக்கொண் டே ஆக வேண்டும்.

தட்ப வெட்ப நிலையை எவ்வாறு காப்பாற்றுவது என்பது மனிதனின் கையில் இருக்கிறது. இயற்கையுடன் ஒத்து சீதோஷண நிலையுடன் கைகோர்த்து செல்லும்போது மனிதகுலமும் பூமியில் சிறந்த ஆக்சிஜனை சுவாசிக்கலாம். ஆனால், இன்று நாம் விலைக்கு ஆக்சிஜனையம், எரி சக்தியையும் வாங்கி சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

இயற்கையோடு நாம் எந்த அளவுக்கு ஒன்றி இருக்கிறோமோ அந்த அளவுக்கு நம் உடல் நலமும் மன ஆரோக்கியமும் செம்மையாக இருக்கும். எனவேதான் கூடுமானவரை இயற்கையான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்று ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.. வெளிநாடுகளில் வார இறுதி நாட்களில் பல மணி நேர பிரயாணமானாலும் சரி, காரை ஒட்டிக்கொண்டு இயற்கை சூழல் கொண்ட பண்ணை வீடு போன்றவற்றிக்கு சென்று இயற்கையோடு உறவாடுகிறார்கள்.

இன்று உலக அளவில் எஞ்சி இருக்கும் இயற்கைச்சூழ் சில கிராமங்களையும் நகர்ப்புறமாக்கி, தினசரி .மனித வாழ்க்கை ஒலி மாசு, காற்றுமாசு உள்ளிட்டவற்றால் சிதைத்து சின்னா பின்னமாக்கி வருகிறது மனித இனம். பூமித்தாய் படைத்த விலங்குகள், பறவைகளையும் சுதந்திரமாக நடக்க, பறக்க, ஓட விடாமல் அவற்றில் சிலவற்றை மனிதத் தீனிக்கு இரையாக்க தலைப்பட்டு விட்டோம். இயற்கைக்கு முரணான செயல்பாடுகள் மிகுந்து வருவதாலேயே புதிது புதிதாக நோய்கள் ஏற்படுகின்றன. நாம் அழிந்து போகக் கூடிய கால கட்டத்தில் இருக்கிறோமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்டை நாட்களில் முனிவர்களும் ரிஷிகளும் காடுகளில் பர்ணசாலை அமைத்து பவித்திரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். நம் முன்னோர்கள் கூட இயற்கைசால் படைப்புக்களை நிந்திக்காமல், அவற்றை தொந்தரவு செய்யாமல் பாதுகாக்க முயற்சித்தார்கள். இயற்கையைப் பல வடிவங்களில் தெய்வமாகவே வணங்கினார்கள். கிராமங்களில் எல்லைச்சாமி போன்ற வணங்கும் தத்துவங்கள் இப்படித்தான் தோன்றியது. ஒவ்வொரு கோயிலுக்கும் பிரத்யேக விருக்ஷங்கள் அமைந்திருத்தல் இயற்கைக்கு துணை போக வழிவகைகள் செய்தன. இறைசக்திக்கு பயந்தேனும், இயற்கைக்கு ஊறு செய்யாமல் நல்லதே செய்யத் தலைப்பட்டனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கினார். மதுரை சேதுபதி பள்ளி போன்ற கல்விச்சாலைகளில் ஆல மரம், அத்தி மரம் போன்றவை பல கிளைகளோடு நிழல் கொடுப்பது மட்டுமின்றி, நூற்றுக்கண வவ்வால்கள் அம்மர பழங்களை தினசரி உண்டு மகிழ்கின்றன என்பது கண்கூடு. இதனால், இயற்கை சூழல் மாணவமணிகளுக்கு கிடைக்கின்றது. காற்று மாசு படாமல் உள்ளது. இறை படைப்புக்களான பறவைகளும் பயன் பெறுகின்றன.

காடுகளை வளர்க்க வேண்டும். பல் உயிரினங்களுக்கும், சீதோஷண நிலைக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். சதுப்பு நிலக் காடுகளை உருவாக்க வேண்டும். இதுதான் இயற்கைக்கு நாம் செய்யும் நன்றியாக இருக்க முடியும்.

உலகில் 193 நாடுகளுக்கும் அதிகமாக பூமி நாள் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் நியூயார்க்கில் மக்கள் பொது இடத்தில் கூடி இந்த பொன்னான நாளை கொண்டாடுவார்கள்.

ஜப்பானின் தலைநகர் டோக்யோவிலுள்ள நிப்பான் மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், “சிறிது காலம் வனத்துக்குச் சென்று இயற்கையோடு ஒருங்கிணைந்த வாழ்க்கை வாழ்ந்தால் ரத்த அழுத்தம் போன்றவை தணிகின்றன. வியாதி எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. நினைவாற்றல் மேலோங்குகிறது ,” எனப் பல்வேறு நன்மைகளை பட்டியலிட்ட்டுள்ளனர்.

நாமும் இந்நன்னாளைக் கொண்டாடுவோம். மக்கள் அனைவரும் இந்த நாளில் பூமித் தாய்க்கு நன்றி தெரிவித்து, சுற்றுச்சூழலை காக்க, அதிக மரங்களை நடுவதற்கும், நீர் நிலைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும், மரங்களை வெட்டாமல் அவற்றை பாதுகாக்கவும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.