நடைப்பயணத்தில் ராகுல்காந்தி மரியாதை
டெல்லி, நவ. 19–
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105 வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
‘இந்தியாவின் இரும்புப் பெண்மணி’ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தியின் சிலை மற்றும் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ராகுல் மரியாதை
இதையடுத்து, டெல்லியில் சக்தி ஸ்தலாவில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அசோக் கெலாட், பூபேந்தர் ஹூடா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்திரா காந்திக்கு மரியாதை செய்தனர்.
மராட்டிய மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தனது நடைபயணத்தின் போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.