சிறுகதை

இடைவெளி…. | ராஜா செல்லமுத்து

இன்று தான் இனியாவிற்குக் கடைசி நாள். அவள் அலுவலகம் இடம் மாறுதல் பெறப் போகிறது. இதுவரையில் அவளுடனான அன்பின் நட்பு இன்றோடு முறிந்து விழப் போகிறது என்பதை நினைத்த முகிலுக்கு அவனையறியாமலே இமைகளை விட்டு இறங்கின இதயத்தில் முகிழ்த்த கண்ணீர் மொட்டுகள்.
வழியும் நீரை புறங்கையால் துடைத்து விட்டு சோகத்தின் சுவடுகள் கொஞ்சங்கூடத் தெரியாமலே இனியாவுடன் அளவளாவிக் கொண்டிருந்தான்
“என்ன முகில் வருத்தமா?
“இல்லையே”
“பொய் சொல்ற”
“நிஜம்”
“ம்”
“டீ சாப்பிடுவமா?”
“ஓ.கே” இரண்டு பேரின் உதடுகள் உண்மை சொன்னாலும் உள்ளம் இரண்டும் அழுது கொண்டே இருந்தன.
அலுவலக வெளியை விட்டு இரண்டு பறவைகளும் கேண்டின் எனும் காபிக் கூண்டுக்குள் அடைக்கலமாக ஓடின. நடந்து போகும் போது இனியாவின் துப்பட்டாத் தென்றல் முகிலின் முகத்தில் காதல் முகாமிட்டு உயிரில் உணர்வுக் கூடு கட்டியது.
இனியா
“ம்”
முகிலின் வார்த்தை இடை வெளியை மெளனம் நிரம்பிக் கொண்டு இருவரிடமிருந்த வெறுமையே நிறைய நிரம்பி வழிந்தது. இரண்டு பேரும் நடக்கும் போது அவர்களின் சுண்டு விரல் கூட உரசிக் கொள்ள வில்லை. நாகரீகம் இரண்டும் பேரிடமும் மேடை போட்டு முன்மொழிந்தது.
“முகில்”
“ம்”
“இன்னைக்கு எனக்கு டிரான்ஸ்பர்”
“ம்”
“உன்னைய எப்படி இனிமே பாக்கப் போறேனோ. வருத்தமா இருக்கு
“ம்”
“நீ இங்கயே தான் வேல செய்வியா?
“ம்”
“என்ன எல்லாத்துக்கும் ” ம்” தானா?
“ம்”
“ஏய்… லூசு ….. “ம்” க்கு
“என்னடா அர்த்தம்னா”
அதுக்கும் “ம்” ன்னு தான் பதில் சொல்ற?
“என்ன என்ன பண்ண சொல்ற? ”
“விதி”
“விதியுமில்ல; விளையாட்டுமில்ல. இது இடமாறுதல் வாழ்க்கை பசி வலியைப் பொறுத்துத் தான் ஆகனும்
“ம்”
“இப்ப நீ மட்டும் “ம்” ங்கிற ஆமா
உயிரில் ஊறும் கண்ணீரை இமைகளுக்குள் இறக்காமல் உள் நெஞ்சில் ஊற வைத்துக் கொண்டு உதட்டின் வழியே “ம்” என்று மட்டும் பதில் சொன்ன இனியாவின் முகத்தைப் பார்த்தான் முகில் அவள் விழிகள் ஊற வைத்த கொடிக்காச் சுளையைப் போல கறுப்பு வெள்ளை நிறத்தில் அழகாய் இருந்தன
“என்ன அப்படிப் பாக்குற”
“இச்” என்று தோள்களை மேலே தூக்கினாள் இரண்டு பேரும் நடந்து போன தூரங்கள் குறைந்து குறைந்து காபிக்கடைக்குள் காலடி வைத்தனர்.
“என்ன சாப்பிடுற?”
“காபி”
“உனக்கு”
“எனக்கும் காபி”
“ம்” ரெண்டு பேரு உணர்வும் ஒண்ணாத் தானிருக்கு. ஆனா ரெண்டு பேரையும் பிரிக்கப் போறாங்க. என்ன
செய்ய .சம்பளம் குடுக்கிற மேலிடத்துக்கு தெரியுமா ரெண்டு பேரோட பாசம் – காதல் .அவங்களுக்கு வேலை செய்ற இடத்தில் ஆள் பற்றாக் குறை. அவ்வளவு தான் ; மத்தபடி மனுச உணர்வெல்லாம் இங்க வெறும் மண்ணு தான்.
“முகில்”
“ம்”
“இனி நாம பாக்க முடியாதில்லை
“ஏன்?”
நான் தான் உன்னைவிட்டுட்டு போகப் போறேனே
“ம்”
“என்ன கிண்டல் பண்ண முடியாது . தூரமா இருந்து என்னைய சைட் அடிக்க முடியாது. சைகையிலயே என்ன சொக்க வைக்க முடியாதுல்ல’’ என்று சொல்லும் அவள் உதடுகள் தந்தியடித்தன.
“இல்ல”
“ஏய்” ஏன் இப்படி சொல்ற?
“உண்மைய சொன்னேன்”
“முகில்”
“ம்”
என் கூட பேசுவியா?
“ம்”
“எப்படி?”
“போன்ல”
“ம்”
“இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆவிபறக்கும் காபி அவர்கள் முன்னால் வந்து சேர்ந்தது.
இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும் இடைவெளியை காபியிலிருந்து பறக்கும் ஆவி இடைமறித்து விட்டு சென்றது.
“இனியா”
“ம்”
“காபி சாப்பிடு”
“ம்”
“இன்னைக்கு நாம அதிகம் பேசுன வார்த்தை எது தெரியுமா?
“ம்”
“ம்” தான் நாம அதிகம் பேசுன வார்த்தை
“ஆமா”
“முகில்”
“ம்”
“இந்த டிரான்ஸ்பர நான் ஏத்துக்கிறனுமா?
ஏன் இப்படி சொல்ற?
எனக்கு இந்த ஆபிஸல உன்ன விட்டுப் போறதில விருப்பமே இல்ல முகில்.
“இப்ப என்ன பண்ணலாம்?
“நீயே சொல்லு…. ’’பேசிக் கொண்டே இருவரும் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“என்ன பண்ணப் போற?’’
என்னோட வேலைய ராஜனாமா பண்ணப் போறேன்.
என்ன முட்டாள் மாதிரி பேசுற?
‘‘இல்ல உன்ன விட்டுட்டு என்னால எங்கயும் போக முடியாது . எனக்கு இந்த வேலையே வேணாம்’’.
முட்டாள் மாதிரி பேசாத ”
“ஆமா உன்னைய மறக்காம திண்டாடுற நான் முட்டாள் தான் .
கடைசியா என்ன தான் பண்ணப் போற .
நீ இல்லாத இந்த வேல எனக்கு வேணாம்.
இனியா தெரிஞ்சு தான் பேசுறியா?
“ஆமா”
ஆபீஸ் போறோம் ; இந்த வேல வேணான்னு நான் எழுதிக் குடுக்கப் போறேன்
“இனியா”
“ஆமா….. ஆமா …. ஆமா. நீயில்லாம என்னால இருக்க முடியாது முகில்”
ஓ” வென வாய் விட்டு அழுதாள். காபி கேண்டீனிலிருந்த ஆட்கள் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.
“ஏய் சும்மா இரு. எல்லாரும் வேடிக்கை பாருங்க”
“உர் ” என நாசி வழியே உறிஞ்சினாள்.
“வா” போகலாம் சிறிது நேரத்தில் இருவரும் அலுவலகம் நுழைந்தனர்.
இனியா, ‘‘ கண்டிப்பா நான் சொன்னத செய்வேன் ’’என கடகடவென தன் ராஜினாமா கடிதத்தை எழுதி அலுவலக மேலாளரிடம் நீட்டினாள்.
“என்ன இது? மேலாளர் கொஞ்சம் முறைப்பாகவே கேட்டார்.
என்னோட ராஜினாமா கடிதம்
“ஓ” அப்ப முகில் கூட போகலயா?
“வாட்” அவள் பேச்சில் ஆச்சர்யம் நிறைந்திருந்தது.
“முகில நீ வேல பாக்குற ஆபீஸ்க்கே இடமாற்றம் செஞ்சிருக்கேன்.
அப்படியா? விழிகளிரண்டும் இமைக்கு மேலே ஏறின.
“ஆமா”
“ராஜினாமா கடிதம்” என்று மேலாளர் இழுத்த போது அதைப் பட்டெனப் பிடுங்கி சர்சர் ரெனக் கிழித்து ஏறிந்தாள்.
அலுவலக நேரமென்று கூடப் பார்க்காமல் ஓடிப் போய் முகிலைக் கட்டிப் பிடித்தாள்.
இரண்டு பேருக்கும் இப்போது இடைவெளியே இல்லாமல் இருந்தது.
இணைந்த இதயங்களை இடைவெளிகளால் துண்டாட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *