செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து இன்றோடு அமெரிக்க படைகள் முற்றாக வாபஸ்

தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்

காபூல், ஆக. 31–

ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் இன்றுடன் முற்றாக திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, தாலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய நேரப்படி இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

“ஆப்கானிஸ்தானில் இருந்து திட்டமிட்டபடி வெளியேற்றத்தை நிகழ்த்திய எங்கள் தளபதிகளுக்கும் அவர்களின் கீழ் பணியாற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன் . ஆகஸ்டு 15 முதல் 31 வரையில், கடந்த 17 நாட்களில் அமெரிக்க துருப்புக்கள் 1 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க குடிமக்கள், நமது கூட்டாளி நாடுகளின் குடிமக்கள் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிய கூட்டாளிகளை பாதுகாப்பாக வெளியேற்றி, அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைச் செய்திருக்கிறார்கள்.

அவர்கள் நிகரற்ற தைரியம், தொழில்முறை மற்றும் உறுதியுடன் இதைச் செய்துள்ளனர். இப்போது, ​​ஆப்கானிஸ்தானில் எங்கள் 20 ஆண்டு இராணுவ இருப்பு முடிந்து விட்டது. நாளை பிற்பகல் இதுபற்றி நான் அமெரிக்க மக்களிடம் உரையாற்றுகிறேன்.

வெளியேற்றம்–கொண்டாட்டம்

பல்லாயிரக்கணக்கானவர்களைக் காப்பாற்ற ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் தங்கள் உயிரைக் கொடுத்த 13 அமெரிக்கர்களின் தியாகத்திற்கு நன்றி தெரிவித்து முடிக்க விரும்புகிறேன் என்றும் ஜோ பிடன் கூறினார். ஆப்கனை விட்டு அமெரிக்கா 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகாரபூர்வமான முழுமையாக வெளியேறிவிட்டது.

நேற்று நள்ளிரவில் ஆப்கான் வானில் இருந்து பிரம்மாண்டமாகப் புறப்பட்டு வெளிச்சப் புள்ளியாக தேய்ந்து மறைந்த அமெரிக்க விமானங்கள் தலிபான்களிடையே கொண்டாடப்பட்டு வருகின்றன. இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை பிடித்திருந்த அமெரிக்காவின் கடைசி விமானம் அப்போதுதான் ஆப்கன் மண்ணில் இருந்து புறப்பட்டு மேலே கிளம்பி வெளிச்சப் புள்ளியாக தெரிந்தது. அதைப் பார்த்த தாலிபான்கள் அந்த நள்ளிரவில் தங்கள் இயந்திரத் துப்பாக்கிகளால் முதல் முறையாக வானத்தை நோக்கிச் சுட்டு தங்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

அமெரிக்கா முழுமையாக வெளியேறிவிட்டதாகச் சொன்னாலும் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இன்னமும் ஆப்கன் மண்ணில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *