செய்திகள்

ஆதவபாக்கம் கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: காஞ்சீபுரம் கலெக்டர் பங்கேற்பு

காஞ்சீபுரம், மார்ச் 18-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் ஆதவபாக்கம் கிராமத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட பணியாளர்களுடனும் மற்றும் கிராம மக்களுடனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடந்தது.

மேலும் கிராம மக்களால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலியை கலெக்டர் பார்வையிட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கி, கிராம மக்களுடன் வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

முன்னதாக, பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் 3 எல்இடி வாகனங்களை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இவ்வாகனங்களின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு, தபால் வாக்களிப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குறும்படங்கள் அதிக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், கிராம சந்தைகள், ஊரகப் பகுதிகள் போன்ற பல்வேறு இடங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர் செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *