செய்திகள்

ஆக.10-–ம் தேதி கடையடைப்பு ஒத்திவைப்பு: வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா பேட்டி

சென்னை, ஆக.7–

கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க ஏற்பாடு செய்வதாக அரசு உறுதியளித்ததால் தமிழகத்தில் வரும் 10–ந்தேதி நடக்க இருந்த கடையடைப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:–

“கோயம்பேடு காய்கறி, பழச் சந்தையைத் திறக்க வலியுறுத்தி வரும் 10–-ம் தேதி அறிவித்திருந்த முழு கடையடைப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. போராட்டம் அறிவித்த தேதியின்போது முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் அவர்களுடன் உடனடி ஆலோசனையில் ஈடுபட இயலாது என்பதாலும், 12-–ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி காரணமாக அரசு விடுமுறை என்பதாலும் 10–-ம் தேதி போராட்டம் அறிவித்தால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைப் பேரமைப்பு எடுத்துரைத்ததன் பேரில் கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் பூ சங்க வியாபாரிகள் இம்முடிவினை எடுத்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையை முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறப்பது வியாபாரிகளுக்கு அவசியமான ஒன்று. திருமழிசையில் அமைத்த தற்காலிக சந்தை மழைக்காலத்தில் தாக்குப்பிடிக்க வாய்ப்பில்லை. மேலும், வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் அரிசிக்குக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு விரைவாக நல்ல முடிவினை அறிவிக்கவேண்டும். கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தைக்கு வார விடுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்”.

இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *