செய்திகள்

அவதூறு கருத்துகளை தொடர்ந்து பரப்பி வந்த பாஜக பிரமுகருக்கு 163 நாள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்

சென்னை, மார்ச் 9–

நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர் பாஜக நிர்வாகி கல்யாணராமன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, திமுக தலைவர்கள் மற்றும் திராவிட சித்தாந்தத்தை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்வது இவரது பாணி. அதேபோல் பெண் பத்திரிகையாளர்கள் சிறுபான்மையினரான முஸ்லிம், கிருத்துவ மக்களுக்கு எதிராக இழிவான அருவறுக்கத்தக்க கருத்துக்களை கல்யாணராமன் தொடர்ந்து பேசியும், சமூக வலைதளங்களில் எழுதியும் வந்தார்.

இது தொடர்பாக, சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையம் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2017, 2018 ஆம் ஆண்டுகளில் வழக்கு பதிவு செய்தனர். 2021ஆம் ஆண்டு ஜனவரியில் கோவை மேட்டுப்பாளையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த வழக்கில், பிற மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து பதிவிட மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

163 நாட்கள் தண்டனை

உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தை மீறி, இரு மதத்தினர் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக தண்டையார் பேட்டையைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவிலும், பொதுச் செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கிரிஜா ராணி முன்பு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் காவல்துறை தரப்பில், கல்யாணராமன் டுவிட்டர் பக்கத்தில் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களை புண்படுத்தும் வகையிலும், மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் 18 பதிவுகளை பதிவிட்டதாக வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *