சிறுகதை

அலட்சியப் பொய் – ராஜா செல்லமுத்து

தனக்கு ஒரு தேவை என்றால் அது எவ்வளவு நேரம் ஆனாலும் போன் செய்து தொந்தரவு செய்வார் குமார்.

ஆனால் அவருக்கு யாராவது போன் செய்தால் ‘ஏன் இந்நேரம்? இந்த நேரம் ஏன் கால் பண்றீங்க? இது போன் பேசுவதற்கு சரியான நேரம் இல்லை. இது தவறு?’ என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார்.

ஆனால் அவரின் தேவைகளுக்காக அவர் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அதைக் குற்றம் சொல்ல மாட்டார்.

ஆனால் பெரிய விஷயமும் அவருக்குள் புதைந்து இருந்தது.

ஏதாவது தேவை என்று அவரது நம்பருக்கு போன் செய்தால் எடுக்க மாட்டார். போனைப் பார்த்துவிட்டு வைத்துக் கொள்வார்.

இல்லை என்றால் தான் இருக்கும் இடத்தை விட்டு வேறொரு இடத்தை பொய்யாக சொல்வார்.

அப்படித்தான் ஒரு முறை குமார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு ஒரு போன் கால் வந்தது. தன் சட்டைப்பையில் இருந்த போனை எடுத்துப் பார்த்தார் குமார். அது அவரின் நண்பர் ஜெய் பேசுகிறார் என்பது தெரிந்தது.

போனை எடுத்துப் பார்த்து மறுபடியும் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார் குமார். அவருக்குப் பதில் ஏதும் சொல்லவில்லை.

பிறகு மறுபடியும் ஜெய் அவருக்கு தொடர்பு கொண்டார்.

தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து ஸ்கிரீனில் வரும் பெயரைப் பார்த்தார் குமார்.

மறுபடியும் ஜெய் தான் போன் செய்கிறார் என்பது தெரிந்தது. பேசாமல் போனை வைத்துக் கொண்டார்.

ஜெய்யும் விடாமல் குமாருக்குப் போன் செய்தார்.

மறுபடியும் தொந்தரவு தாங்காது குமார் இப்போது செல்போனை ஆன் செய்து, ‘என்ன ஜெய்? உங்களுக்கு என்ன பிரச்சனை. நான் ஒரு முக்கியமான வேலையில் இருக்கேன். திரும்பத் திரும்ப போன் பண்றீங்களே?’ என்று சலிப்பாக பதில் சொன்னார்.

‘இல்ல சார் உங்கள நான் பாக்கணும். அதுதான் கால் பண்ணுனேன். நீங்க ஒரு டைம் சொன்னீங்கன்னா அதுக்கு தகுந்த மாதிரி வந்து பார்ப்பேன்’ என்று சொன்னார்.

‘இல்ல நான் முக்கியமான ஒரு மிமீட்டிங்ல உக்காந்து பேசிகிட்டு இருக்கேன். போன சைலன்ட்ல வைத்திருக்கிறேன். அதான் தொந்தரவு இல்லாமல் இருந்தது. நீங்க இத்தனை தடவை கால் பண்ணுனீங்க. போன எடுத்துட்டு வெளியே வந்து இருக்கேன். ஏன் இவ்வளவு தொந்தரவு பண்றீங்க? ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறேன். உங்களுக்கு தெரியாதா? என்ன?’ என்று கொஞ்சம் கடுகடுத்தார் குமார்.

‘இப்ப எங்க இருக்கீங்க… குமார் சார்?’ என்று ஜெய் கேட்டபோது,

‘மினிஸ்டர் கூட பேசிகிட்டு இருக்கேன். நானே உங்களுக்கு திரும்ப கால் பண்றேன்’ என்று சொன்னார் குமார்.

பேருந்து ஜன சந்தடியில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதே பேருந்தில் பின்னால் அமர்ந்திருந்த ஜெய் அப்படியே நடந்து வந்து முன்னால் அமர்ந்திருந்த குமாரின் தோளைத் தொட்டார்.

யார் நம் தோளைத் தொடுவது? என்று திரும்பிப் பார்த்த குமாருக்கு அதிர்ச்சியாக இருந்தது .

அங்கேயே ஜெய் நின்று கொண்டிருந்தார். விக்கித்துப் போனார் குமார்.

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

‘மந்திரி கிட்ட பேசிகிட்டு இருக்கீங்களா? இதுதான் உங்களுடைய லட்சணமா?’ என்று ஜெய் கேட்டபோது,

‘‘பபப …’’ என்று பதில் சொல்ல முடியாமல் உளறினார் குமார்.

‘எப்பவும் எங்கயும் உண்மையை சொல்றது தப்பு இல்ல. நான் பஸ்ல போயிட்டு இருக்கேன்; இப்ப பேச முடியாது. ஒரு மணி நேரம் கழிச்சு பேசுறேன். இல்ல நாளைக்கு பேசுறேன். கூட நீங்க உண்மையைச் சொல்லி இருக்கலாம். ஆனா, இவ்வளவு பொய் சொல்லணும்னு அவசியம் இல்ல. ஏன்னா நம்ம சொல்ற பொய்யே நமக்கு எதிராக திரும்பும் பாத்தீங்களா? இப்ப நான் இருக்கிற பஸ்ஸிலேயே நீங்கள் இருந்தீர்கள்; பஸ்ல இருக்கேன்னு சொல்லி இருந்தா உங்களுக்கு பிரச்சினை இருந்திருக்காது. அதுலயும் பொய் ஏன்? இந்த வாழ்க்கை ஏன்? யார் உங்கள இந்தப் பொய் சொல்லச் சொன்னது? உங்களை நீங்க மாத்திட்டீங்கன்னா அதுதான் நல்லது’ என்று குமாரிடம் முகத்துக்கு நேரே சொல்லி வரும் நிறுத்தத்தில் இறங்கினார் ஜெய்.

பேருந்து புறப்பட்டது.

பேயறைந்தது போல அதே இடத்தில் அமர்ந்து இருந்தார் குமார்.

Leave a Reply

Your email address will not be published.