செய்திகள்

அரியானா அரசு மருத்துவமனையில் 1,710 கொரோனா தடுப்பூசிகள் திருட்டு

சண்டிகர், ஏப்.22–

அரியானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,710 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் திருடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருத்துகள் மருத்துவமனைகளில் இருந்து திருடப்பட்டு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் அரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1,710 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதில் 1,270 கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் ஆகும். ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் இந்த மருத்துவமனையில் இருந்தே கொரோனா தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த மருத்துவமனைக்குள் இன்று அதிகாலை நுழைந்த மர்ம நபர்கள் குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 1,710 கொரோனா தடுப்பூசி டோஸ்களையும் திருடிச்சென்றுள்ளனர்.

இன்று காலை வழக்கமான பணிக்காக வந்த மருத்துவமனை பணியாளர் சேமிப்பு கிடங்கின் கதவுகள் திறக்கப்பட்டு தடுப்பூசிகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் உயர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தடுப்பூசிகளை திருடிச்சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசியை திருடியவர்கள் சேமிப்பு கிடங்கில் இருந்த மற்ற நோய்க்கு உபயோகிக்கப்படும் தடுப்பூசிகள் எதையும் எடுக்கவில்லை. அதேபோல் சேமிப்பு கிடங்கி அறையில் இருந்த லேப்டாப்பையும் திருடர்கள் எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் திருடப்பட்டதால் ஜிண்ட் மாவட்டத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *