செய்திகள்

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டப் போட்டிகள்: அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் துவக்கினர்

Spread the love

திருவள்ளூர், ஜன. 15

வில்லிவாக்கம் ஒன்றியத்தில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டப் போட்டிகளை அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் துவக்கினர்.

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், வானகரம் ஊராட்சி, வெங்கடேஷ்வரா நகர் பகுதியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக, அம்மா இளைஞர் விளையாட்டு திட்டப் போட்டிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ்ஆட்சிமொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அமைச்சர் பா.பென்ஜமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அம்மாவின் அரசு, முதலமைச்சரின் ஆணைப்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் வானகரம் ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தினை கலெக்டர் தலைமையில் துவக்கி வைக்கப்படுகிறது. 13 ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டம் கிளாய் கிராமத்தில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளிலும், அதேபோன்று 528 பேரூராட்சிகளிலும் இன்றைக்கு முதலமைச்சர் கடந்த 2019 விதி எண். 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை இன்றைக்கு செயல்படுத்தப்படுகிறது.

இளைஞர்களின் ஆரோக்கியத்தி ற்கும், மன அழுத்தத்தையும், ஒரு கூட்டு மனப்பான்மையை உருவாக்கு வதற்காகவும் இன்று இத்திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலமாக ரூ. 76 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, இன்றைய தமிழகத்தில் இருக்கக்கூடிய 12,524 ஊராட்சிகளிலும், 528 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய 526 ஊராட்சிகளிலும், 10 பேரூராட்சி பகுதிகளில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் இன்றைக்கு கபடி, வாலிபால் மற்றும் கிரிக்கெட் அல்லது கால்பந்து போட்டியை பயிற்றுனர்களுக்காக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஒரு திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக புரட்சித் தலைவி அம்மாவின் அரசு, முதலமைசசர் உருவாக்கி தந்துள்ளார். இந்த அம்மா விளையாட்டு இளைஞர் திட்டம் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அமைச்சர் க.பாண்டியராஜன்

நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியதாவது:

அம்மாவின் வழியில் முதலமைச்சரால் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய முயற்சியாக இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக முதன்முறையாக தமிழ்நாடு அரசு அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிபெற வாய்ப்பு உள்ள மாணவர்களுக்கு ரூ. 25 லட்சம் ஒரு வருடத்திற்கு வழங்குவதற்கு ஆணையிடப்பட்டது. இன்றளவு 12 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

வடசென்னையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த பவானிதேவி ஒலிம்பிக் போட்டியில் வால்வித்தை போட்டியில் தங்கம் வெல்வதற்கு இதுவரை ரூ.3 கோடியை தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளது. உலகளவில் முதலிடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சி.டி.எஸ். (சாம்பியன்ஷிப் டெவலப்மண்ட ஸ்கீம்) திட்டத்தில் நன்றாக விளையாடக் கூடிய மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இதுபோல தமிழ்நாட்டில் 800 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியில் நன்றாக படிக்கும் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் தேசிய கீதத்தை பாடக் கூடிய அளவில் உள்ள மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ. 50 லட்சம் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் இத்தாலி நாட்டிலிருந்து வால் வித்தை போட்டிகளில் பயிற்சி அளிப்பதற்கான, இந்திய அரசு அழைத்து அவர்களுக்கான முழு செலவுகளையும் ஏற்றுக்கொண்டு, அமெரிக்கா நாட்டில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களில் ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு விளையாட்டு மைதானம், 500 பேருராட்சிகளில் ஒரு பேரூராட்சிக்கு ஒரு விளையாட்டு மைதானத்தில் ஒரு பக்கம் கால் பந்து, கபடி, மறுபக்கம் உடற்பயிற்சி கூடம் அவற்றிற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு, அவை இளைஞர்களாலேயே மேலாண்மை செய்யப்படும்.

அம்மா உருவாக்கிய அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் சிறப்பாக செயலாற்றி விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு 4 சதவிகிதம் முன்னுரிமை அளித்து இதுவரை ஒன்றறை லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நன்றாக விளையாடக் கூடிய மாணவர்களுக்கு 100 நபர்களில் 4 நபர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விளையாட்டினை விளையாட்டாக பார்க்காமல் அதை வாழ்க்கை பணியாகவும் இருக்கும். இந்தோ னேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது கொல்கத்தாவைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய ஸவ்ப்னா பர்மன் என்ற வீராங்கனை ஹெப்டத்லனான் போட்டியில் வெறுங்காலில் ஓடி முதலிடம் பெற்று இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை பெற்றுத் தந்தார். இதற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு ரூ.2.50 கோடி வழங்கியது.

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் உங்களால் சாதிக்க முடியும். இவ்விளையாட்டுப் போட்டிகள் மூலமாக பணம் சம்பாதிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. தமிழரின் ரத்தத்தில் ஊறிய சிலம்பாட்டம் உள்ளிட்டவைகளேயாகும். டேக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டில் 24 வீரர்கள் உட்பட 100 நபர்கள் அடங்கிய குழு செல்லவுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர் ஊராட்சியில் விளையாட்டு பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தது புரட்சித்தலைவி அம்மாவே ஆகும். மேலும், தற்போது 7-ம் இடத்திலிருந்து 3-ம் இடத்திற்கு முன்னேறி உள்ள தமிழகம், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தப் படியாக உள்ளது. இதை நாம் அனைவரும் சேர்ந்து தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு வந்து பல பதக்கங்களை பெற்றிட வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மாவட்ட கலெக்டர் கூறியதாவது:

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்திற்கு ரூ. 76 கோடியே 23 லட்சம் தமிழகம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் இணையதளம், தொலைக்காட்சி, தொலைபேசி சாதனம் உள்ளிட்டவைகளில் விளையாடிக் கொண்டிருக்காமல் வெளியே சென்று விளையாட்டு மைதானங்களுக்கு சென்று விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

விளையாட்டுகள் மூலமாக ஒற்றுமை மனப்பான்மையையும், தோல்வியை தாங்கும் பக்குவத்தையும் அளிக்கும், கடந்த 25 வருடங்களுக்கு முன்பு தொழில்நுட்ப வளர்ச்சியடையாத காலக் கட்டங்களில் நாம் அனைவரும் வெளியே சென்று விளையாடும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்பொழுது குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி விளையாட வைக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு விளையாட்டுத் திடல்களை அமைத்து இளைஞர்களை ஒருங்கிணைத்து நல்ல பயிற்சியாளர்கள் மூலமாக தனித்துவம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இவற்றில் தனித்துவம் வாய்ந்த திறன்களை கண்டறிந்து ஓட்டப்பந்தயம், தடகளம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. குழுவுடன் விளையாடும் பொழுது ஒருவர் நல்ல தலைமை அமையும். அவர்கள் மூலம் நல்ல தலைவர் அமைய வாய்ப்பு உள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு முதலமைச்சர் ஒவ்வொரு ஊராட்சியிலும், அம்மா இளைஞர் விளையாட்டு மையத்தினை ஏற்படுத்தி 526 மாவட்டத்தில், 526 ஊராட்சி, 10 பேரூராட்சி உள்ளிட்டவற்றில் இத்திட்டம் சிறப்பாக செயல்படவுள்ளது. இத்திட்டத்தில் கபடி, கிரிக்கெட் அல்லது பூப்பந்து, வாலிபால் ஆகிய மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளது. பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை விளையாடுவதற்கு ஊக்கவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் சமூகத்தை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். எனவே ஆரோக்கியத்தையும் குழு மனப்பான்மையும் ஊக்கப்படுத்தும் இத்திட்டத்தை அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி.பலராமன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா, திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *