செய்திகள்

அக்டோபர் 18 ந்தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் 100 சதம் இயங்க அனுமதி

டெல்லி, அக். 14–

அக்டோபர் 18ஆம் தேதி முதல், உள்நாட்டு விமான சேவை உச்ச வரம்பு இன்றி, முழு அளவில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக நாடு போராடும் வேளையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் கொரோனா தொற்று பரவல் குறையத்தொடங்கி படிப்படியாக விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது விமானங்கள், கொரோனாவுக்கு முந்தைய சேவையில் 85 சதவிகித சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்போது கொரோனா தொற்று பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் விமானங்களில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். விமான சேவைக்கான தேவை அதிகரித்துள்ளது. உள்நாட்டு விமான சேவையை முழுத்திறனுடன் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

18 முதல் அனுமதி

இந்த நிலையில், அக்டோபர் 18 ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை உச்ச வரம்பு இன்றி, முழுத்திறனுடன் இயங்குவதற்கு அனுமதிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் விமானங்களை முழுமையாக இயக்குகிறபோது, கொரோனா கால கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும், பொருத்தமான விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் விமான நிறுவனங்களும், விமான நிலையங்களை இயக்குவோரும் உறுதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.

விமானங்கள் முழுத்திறனுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், பண்டிகைக் காலத்தில் கட்டணங்கள் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *