செய்திகள்

சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்முனைவோருக்கான பயிலரங்கம்

சென்னை, ஜூலை 20–

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சுயத்தொழில் குறித்தும் வங்கிக் கடன் பெறுதல் குறித்தும் ஒரு நாள் பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது எனவும், ஆர்வம் உள்ளோர் பதிவ செய்யலாம் எனவும் சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் ஈடுபட பல்வேறு வகையான தொழில்வாய்ப்புகள் உள்ளன. அவை குறித்து தெரிந்து கொள்வதற்கும், அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நிபுணர்களால் வழங்கப்படும்.

இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் கிடையாது. ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொடர்பு தொலைபேசி எண் ஆகியவற்றுடன் வெள்ளைத்தாளில் சுயத்தொழிலுக்கான பயிலரங்கத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை சென்னை என்ற முகவரிக்கு 26–ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருப்ப கடிதம் அனுப்புவோர் பெயர் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிலரங்கம் நடைபெறும் நாள்குறித்த விவரத்துடன் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *