யுனைட்டெட் எகனாமிக் அமைப்பு ஏற்பாட்டில்
டிசம்பர் 4–ந் தேதி முதல் 3 நாள் உலகத் தொழில் மாநாடு :
முதல்வர் எடப்பாடி துவக்குகிறார்
கொரோனா எதிரொலி: ஆன்லைனில் நடக்கிறது
ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
சென்னை, நவ. 30
யுனைட்டெட் எகனாமிக் என்னும் வர்த்தகசபை அமைப்பு (யுஇஎப்) அடுத்த மாதம் (டிசம்பர்) 4–ந் தேதி முதல் 3 நாள் உலக ஆன்லைன் மாநாட்டை நடத்துகிறது. இதில் 30 நாடுகளின் 80 சிறப்புப் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கிவைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, நிதி நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். மாநாட்டு தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீப், தலைவர் அகமது ஏ.ஆர்.புகாரி ஆகியோர் இத்தகவலை தெரிவித்தனர்.
‘புதிய எதிர்காலத்தை கற்பனை செய்வோம், மனிதகுலத்துக்கு பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவோம், உலகின் ஒட்டு மொத்த கவனத்தை ஈர்ப்போம்’ என்று மூன்று இலக்கோடு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆன்லைன் மாநாடு என்றாலும் தொழில்துறை நிபுணர்களால் சீரிய முயற்சியில் திட்டமிடப்பட்டுள்ளது. நேரில் பார்க்கும் அதே உணர்வை ஏற்படுத்தும்விதத்தில் வர்த்தக கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுதொழில் ஆரம்பித்து அடுத்தடுத்து வளர்ச்சி காண்பது எப்படி,
தமிழ்நாடு பல்வேறு வாய்ப்புகளுக்கு அரிய மாநிலம். ரெஸ்டாரெண்ட் தொழில் இக்கால நடைமுறை நெறி முறைகளுக்கேற்ப சிந்தித்து செயல்படுத்துதல் டிஜிட்டல் (கணினி மையம்) நுகர்வோர் காலம் உதயமாகி வருவதன் வளர்ச்சி ‘உயிர்க்கொல்லி’ கொரோனா தொற்றும்– சுற்றுலாத் தொழிலும் மீட்பு நடவடிக்கைகள், விவசாய வளர்ச்சி சிறந்த உணவு முறைகள் தவிர பொருளாதார மேம்பாடு குறித்த விஷயங்கள்– இப்படி பல்வேறு தலைப்புகளில் பொருளாதார நிபுணர்களும், பன்னாட்டு பிரதிநிதிகளும் வரிவாக விவாதிக்கிறார்கள்.
சிறு தொழில் முனைவர்கள், நிறுவனங்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தக – தொழில் நிறுவனங்கள் ஆகியோருக்கு அவரவர்கள் தத்தம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு மேடையாக இந்த மாநாடு அமையும்.
4வது ஆண்டாக நடைபெறும் மாநாடு இது. கொரோனா வைரஸ் காரணமாக இப்போது ஆன்லைனில் நடைபெறுகிறது.
மாநாட்டு தலைவர் அகமது ஏ.ஆர்.புகாரி நிருபர்களிடம் பேசுகையில், இந்த மாநாட்டின் அங்கமாக திகழும் நிறுவனங்கள், பங்கேற்பாளர்கள், பிரதிநிதிகளுக்கு தொழில் மேம்பட, சுய தொழில் துவங்க, நிதி முதலீடு ஆலோசனை வழங்கப்படும். சர்வதேச அளவில் பிரதிநிதிகள் கலந்து கொள்வதால் அனைவருக்கும் பலனாக இருக்கும் என்றார்.
இந்த மாநாட்டுக்கு நுழைவுக்கு கட்டணம் இல்லை. இதில் பங்கேற்க www.uef2020.com வலைதளத்தைப் பார்க்கலாம்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு தொழில் வழிகாட்டும் மைய நிர்வாக இயக்குனர் நீரஜ் மிட்டல், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிதி பிரிவு செயலாளர் எஸ்.கிருஷ்ணன், ‘பிக்கி’ தலைவியும், அப்பல்லோ சங்கீதா ரெட்டி இந்திய நடிகர் எழுத்தாளர், தயாரிப்பாளர் ஆர்.மாதவன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
யு.ஈ.எப். அமைப்பின் முதுநிலை மேலாளர் கலீமுல்லா ஷெரீப் தலையில் ஒரு குழு இந்த உலகத் தொழில் மாநாடு வெற்றிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகி இருக்கிறார்கள்.