செய்திகள்

குளிர்கால பிப்ரவரியில் பனிப்பாறை உருகியது ஏன்? விஞ்ஞானிகள் அதிர்ச்சி

டேராடூன், பிப். 9–

பிப்ரவரி மாதத்தில் பனிப்பாறை உருகியது ஏன் என்பது தொடர்பாக விஞ்ஞானிகள் புதிய தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ஜோஷிமத் பகுதியில் நேற்று முன்தினம் பனிப்பாறை உடைந்து உருகியதில் தவுல்கங்கா, அலக்நந்தா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரேனி கிராமத்தில் அமைக்கப்பட்டு வந்த ரிஷி கங்கா தபோவன் நீர்மின் திட்ட கட்டுமானங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 160 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 16 பேரின் உடல்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் பனிப்பாறை உருகியது ஏன் என்பது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தராகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி மாதமானது கடும் குளிராக இருக்கும். பெரும்பாலான பனிமலைகள் இறுகி பாறையாகவே இருக்கும். ஆனால் இந்த மாதத்தில், பனிப்பாறைக்குள் வெடிப்பு ஏற்பட்டு உடைந்து உருகியுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த பனிப்பாறையானது வெடித்து உருகியுள்ளது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பனிப் பாறைகள்

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது,

‘வழக்கமாக குளிர்காலங்களில் பனிப்பாறைகள் இறுகி உறைந்து காணப்படும். பனிப்பாறைகளின் சுவர்கள் ஒன்றோடு ஒன்று இறுகி கடினமாக இருக்கும். பாறைகள் உருக வாய்ப்பே இல்லை. வழக்கமாக இந்த காலங்களில் பனிப்புயல் அல்லது நிலச்சரிவு காரணமாகத்தான் பனிப்பாறைகள் உடையும். ஆனால் இந்த பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டு உடைந்தது வித்தியாசமாக உள்ளது.

இந்து குஷ் இமயமலைப் பகுதியில் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும், புவி வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய வெப்பநிலையின் உயர்வு, இமயமலைப் பகுதியில் உயரத்தை சார்ந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது. பனிப்பாறை வெடிப்பு என்பது மிகவும் அரிதான சம்பவம் ஆகும்.

செயற்கைக்கோள் மற்றும் கூகுள் எர்த் படங்கள் இப்பகுதிக்கு அருகில் பனிப்பாறை ஏரிகள் இருப்பதைக் காட்டவில்லை. ஆனால் இப்பகுதியில் பனிப்பாறைகளுக்குள் ஏரிகள் இருப்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. அவற்றின் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம். இதனை உறுதிப்படுத்த, மேலும் வானிலை அறிக்கைகள் மற்றும் தகவல்கள் தேவை. புவி வெப்பமடைதலால் இப்பகுதி வெப்பமடைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *