தேனி, டிச.4-
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தேனி அருகே தப்புக்குண்டு பகுதியில், அரசு கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை துணை முதலமைச்சரும், அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-
கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறி இருக்கிறார். அதுகுறித்த உங்கள் கருத்து என்ன?
பதில்:- சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். அவருடைய வரவு நல்வரவு ஆகும்.
கேள்வி:- ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியுடன் அண்ணா தி.மு.க. கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்:- எதிர்வரும் காலங்களில் அரசியலில் எதுவும் நிகழலாம். வாய்ப்பு இருந்தால் கூட்டணி அமையும்.
கேள்வி:- ரஜினிகாந்த் வருகையால் அண்ணா தி.மு.க.வின் வாக்கு வங்கி குறைய வாய்ப்பு உள்ளதா?
பதில்:- எந்த விதத்திலும் பாதிப்பு வராது.
கேள்வி:- ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்று ரஜினிகாந்த் கூறி இருக்கிறாரே?
பதில்:- நீங்கள் காணுகின்ற கனவுகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.