சிறுகதை

விளையாட்டல்ல வாழ்க்கை (பாகம்–19) | டிக்ரோஸ்

ராமு கல்லூரி படிப்பு முடிந்த நாளில் பேட்மின்டன் விளையாட்டில் இருந்த ஆர்வம் சற்றும் குறையாததால் மேலும் கடும் பயிற்சியை மேற்கொள்ள முடிவெடுத்தான். தேசிய சாம்பியன் ஆவதே அவன் லட்சியம்!

அப்பா ஏற்றுமதி தொழில்; அம்மா ஆசிரியை; நண்பர்களால் ராமு என அழைக்கப்படும் ராமநாதன் அவர்களின் ஒரே வாரிசு! ‘மேலும் படி, அல்லது வேலைக்கு போ…’ என்று நெருக்கடி தராத பெற்றோராக அவர்கள் இருந்தனர்.

பள்ளி நாட்களில் அவனது வயது பிரிவில் மாநில அளவில் சிறந்த ஆட்டக்காரன் என்று பாராட்டப்பட்டவன்.

மாநிலக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படிக்க விண்ணப்பித்தபோது பரீட்சை மதிப்பெண் 70 சதவிகிதம் இருந்ததால் அனுமதி நிச்சயமாகவே இருந்தது. கூடவே தேசிய போட்டிகளில் விளையாடி சான்றிதழ்கள் பல இருந்ததால் கல்லூரி முதல்வரே இவனை அழைத்து வரவேற்று சேர்த்துக் கொண்டார்.

ஆண்கள் தனிப் பிரிவில் அரையிறுதி வரை தேசிய தரப்பட்டியல் ஆட்டத்தில் தோற்று விட்டாலும் தேசிய அணியில் இடம் பிடித்தான். அதைத் தொடர்ந்து தேசிய கோச்சிடம் பயிற்சியைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது.

பயிற்சியாளர் சஞ்சீவ் சச்தேவாவின் விசேஷ பயிற்சிகளால் சோர்ந்து விடாமல் பல மணி நேரம் ஆடும் திடம் பெற்றான்.

எப்படியும் இந்த ஆண்டில் தேசிய அணியில் இடம் பெற்றுவிட்டால் தனது முத்திரையைப் பதித்துவிட முடியும் என்பதற்காக பெற்றோரின் உத்தரவால் தனது குலதெய்வத்திடம் பிரார்த்திக்க பூர்வீக சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.

அங்கு இவனது சித்தி வீட்டில் தங்க ஏற்பாடு. சித்தப்பா மற்றும் தங்கை லதாவின் உபசரிப்பில் அன்று கடந்தது.

மறுநாள் மூவரும் ராமுவை வாடகைக் காரில் அமர்த்தி அருகாமை திருச்சுழி கிராமத்துக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த பூமிநாத சாமி கோயிலில் வழிபாடுகள் முடித்துவிட்டு அங்கிருந்த குலதெய்வமான துணைமாலை அம்மனுக்கு அபிஷேகமும் செய்தனர். அதை முடித்துவிட்டு அருகே இருந்த ரமண மகரிஷி பிறந்த வீட்டில் தியானம் செய்துவிட்டு மதிய சாப்பாட்டிற்கு வீடு திரும்பிக் கொண்டு இருந்தபோது தான் அந்த அதிர்ச்சி தரும் செய்தி வந்தது.

நாளை முதல் முழு ஊரடங்கு! இனி ரெயில்கள், பஸ்கள் எதுவும் ஒரு மாதத்திற்கு ஓடாது! காரணம் கொரோனா மகா தோற்று!

அன்றிரவு ராமு பயணிக்க இருந்த ரெயில் ரத்தானது. அப்பாவிடம் தனது பேட்மின்டன் பயிற்சிக்காக எப்படியும் சென்னை வந்தாக ஏற்பாடு செய்யக் கெஞ்சினான்.

*

மறுநாள் நாடே ஊரடங்கால் முழுமையாக இயங்காது இருப்பதை புரிந்து கொண்டான்.

இனி அடுத்த ஒரு மாதத்திற்கு என்ன செய்யலாம்? என யோசிக்க ஆரம்பித்தான்.

காலையில் எழுந்து வீட்டின் அருகே இருந்த நந்தவனத்திற்குள் சென்று நடைப்பயிற்சியில் ஈடுபட்டான். அங்கு சிலர் சிலம்பு சுற்றுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பவனை, ‘ வா தம்பி நீயும் எங்களோடு சிலம்பு சுழற்ற வா..’ என ஒரு பெரியவர் அழைக்க அதை மனதார ஏற்றுப் பயில ஆரம்பித்தான்.

பேட்மிட்டனுக்கு தேவை மணிக்கட்டின் பலமாகும். மேலும் கால்களை மடக்கி நாட்டியமாடும் சிலம்பு பயிற்சியால் கால்களும் முறுக்கேறுவதை உணர்ந்தான்.

ஒரு நாள், பஸ் முதலாளிகள் தங்களுக்கென கட்டியிருந்த பேட்மிட்டன் உள்அரங்கிற்கு சிலம்பு பயிற்சியாளரால் அழைத்து செல்லப்பட்டான்.

அன்று விளையாட வந்தவர்கள் எல்லோரும் முதலாளியின் நட்பு வட்டம். ஆகவே அன்றோ விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டதால் மறுநாள் காலை சித்தப்பாவின் சைக்கிளில் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் பயணித்து உள்ளரங்கைச் சென்றடைந்தான்.

முதலாளியும் வேறு சில வயதானவர்களும் அடுத்த 2 மணி நேரமும் சத்தம் போட்டு வசை பாடிக் கொண்டே பரப்பரப்பாக ஆடிக் கொண்டிருந்தனர்.

ராமுவோ விளையாட வழியில்லா நிலையில் தனக்கு தெரிந்த சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்தபடி பொழுதைப் போக்கி கொண்டிருந்தான்.

அப்போது தான் ‘விஜி என்ன இத்தனை சீக்கிரமா வந்து இருக்க’ என முதலாளி தனது மகளை வரவேற்பது ராமுவின் காதுகளில் விழ நுழைவாயில் பக்கமாக திரும்ப பேட்மிட்டன் ராக்கெட், டி–-ஷர்ட் மற்றும் விலையுயர்ந்த காலணிகளில் விஜி நுழைவதை பார்த்தான்.

தற்போது கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் விஜியின் முழு பெயர் விஜயா!

அந்தக் கால கே.ஆர்.விஜயாவின் புன்சிரிப்பை நினைவுபடுத்தும் அழகு சிரிப்புடன் நுழைந்த அவளை தனக்கு தெரியுமே! என்பது போல் பார்த்தான். காரணம் அவள் மாநில அளவில் திறமையான பிளேயர்!

முதலாளி, விஜி கொண்டு வந்த பானத்தை குடித்தபடி ராமுவை சுட்டிக்காட்டி அவனும் இன்று தான் முதல் முறையாக எங்களிடம் விளையாடி தோற்க வந்திருப்பதாக கூறி நீயும் அவனை தோற்கடித்தால் அவன் பாவம்..! என்று கூறினான்.

விஜி அதை எல்லாம் முழுமையாக காது கொடுத்து கேட்காமல் மீண்டும் விளையாட ஆர்வம் கொண்டு ‘warm up’ செய்தபடி களமிறங்கத் தயாரானாள்.

முதலாளி, ராமுவிடம் மெல்ல வந்து ‘தம்பி நாங்க பல ஆண்டுகளாக விளையாடுபவர்கள். என் மகளோ தமிழ்நாடு சாம்பியன். எங்களிடம் வெற்றி தோல்வியை விட நல்ல ஆட்டப் பயிற்சி கிடைக்கும் ‘ என்று அறிவுரை கூறியபடியே தனது ராக்கெட்டை கொடுத்தார்.

அருகே இருந்த அவரது நண்பர் – வங்கியாளர், ‘முதலாளி உங்க ராக்கெட் மிக விலை உயர்ந்தது. எனது ராக்கெட்டிலேயே இவன் விளையாடட்டும் ‘ என கூறியபடியே அவர் தனது ராக்கெட்டை தந்தார்.

*

அடுத்த சில நாட்களில் விஜி ராமுவின் மாணவியாகி கடுமையான மேன்மையான பயிற்சியைப் பெற ஆரம்பித்தாள். முதலாளியே மதுரையிலிருந்து மிக நவீன ராக்கெட்டை வரவழைத்து ராமுவிடம் பரிசாகவே தந்தும் விட்டார்.

‘சார் யாருக்கு இந்த விலை உயர்ந்த பேட்மிட்டன் ராக்கெட் என கேட்ட கடைக்காரரிடம் ராமுவுக்கு எனக் கூறிய சில மணி நேரத்தில் மதுரையில் இருந்த தமிழக பயிற்சியாளர் தனது சிறந்த பிளேயர்களுடன் வந்துவிட்டார்.

முதலாளிக்கோ தனது மகளுக்கு இப்படியாக விதவிதமான பயிற்சிகள் கிடைப்பதால் பூரிப்படைந்தார். ராமுவின் தேசிய கோச்சின் உத்தரவால் மிக நவீன, விலை உயர்ந்த இறகு பந்துகள் இலவசமாக வந்தும் சேர்ந்தது.

முன்னணி பிளேயர்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; ஆனால் தேசிய பயிற்சியாளரால் இதர முன்னணி வீரர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை.

ஆனால் ராமுவோ கைகளுக்கு பலம் தரும் சிலம்பம், கால்களுக்கு பயிற்சி தர சைக்கிள் ஓட்டுவது, விளையாட விதவிதமான ஆட்டக்காரர்கள், தனது பேட்மிட்டன் திறனை வளர்த்துக்கொள்ள விஜி உள்பட பலருக்கு சொல்லி தரும் வாய்ப்பு…. ராமுவின் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதை உணர்த்தியது.

*

கொரோனா தொற்றை அடக்க சமூக விலகலும் முக கவசம், ஊரடங்கு பிரகடனமும் ராமுவின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக இருந்ததால் அவனது பெற்றோருக்கு குலதெய்வ வழிபாட்டின் மீது புதிய அபிமானமும் பிடிப்பும் ஏற்பட்டதில் வாய்ப்பில்லை!

––––––––––––

-: decrose1963@gmail.com :-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *