சாதாரண மனிதர்கள் மட்டுமே தடைகளை இடர்களாக கருதுவார்கள். சாதனை மனிதர்கள் எப்போதும் தடைகளையே படிகளாக்கி முன்னேறுவார்கள் என்பது காலம் காலமாக நிரூபிக்கப்பட்ட பேருண்மை.அந்த வகையில் 2020 ஆம் ஆண்டின் கோவிட்-19 தடை காலங்களில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், தொழிலதிபரும் விஜிபி குழும தலைவருமான வி.ஜி. சந்தோசம் 50 இலக்கிய கூட்டங்களை இணையம் வழியாக நடத்தி தமிழ் இலக்கியத்தை செழுமை படுத்தி இருக்கிறார் என்று கூறலாம்.
2020 ஆம் ஆண்டு தொடங்கிய போதே, கோவிட்-19 பெருந்தொற்று குறித்த அச்சம் பல நாடுகளில் இருந்து வந்த வண்ணம் இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர் மூலமாக பிப்ரவரி மாதம்தான் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மார்ச் 24 முதல் கொரோனா ஊரடங்கு முழுமையாக நடைமுறை படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்களும் அடுத்து 14 நாட்கள் என முழுமையான ஊரடங்காக இருந்தது.
வாரத்தில் 3 இலக்கிய கூட்டங்கள்
இந்த சூழலில் வணிக நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட எதுவும் செயல்படாத நிலையில் , வீட்டிலேயே முடிங்கிக்கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. என்ன செய்வதென்று பலரும் செய்வதறியாது திகைத்து செயலற்று இருக்கிறார்கள். ஒரு வாயில் மூடப்படும் போது, 9 வாயில்கள் நமக்காக திறக்கும் என்பது பட்டறிவுமொழி. அந்த வகையில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், இலக்கிய கூட்டங்களை இணையம் வழியாக வலைக்காட்சியின் (யூ டியூப்) நேரலை மூலமாக வி.ஜி. சந்தோசம் தொடங்கினார். முதல் கூட்டம் மே மாதம் 29 ந்தேதியன்று நடத்தப்பட்டது.
திருவள்ளுவரும் உலகத் தமிழ்ச் சங்கமும் என்ற தலைப்பில் பேராசிரியர் மல்லை சத்யா கலந்து கொண்டு, வி.ஜி.பி. தமிழ்ச் சங்கத்தின் தமிழ் பணிகள் குறித்தும், உலகம் எங்கும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி, உலகத் தமிழ் மறை திருக்குறளை, உலக மக்களிடம் நிறைந்திருக்க செய்யும் முயற்சிகள் குறித்தெல்லாம் எடுத்துக்கூறினார். அதற்கடுத்த கூட்டமாக மே 31 ந்தேதி பேராசிரியர் உலக நாயகி பழநி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூட்டம் நடத்தப்பட்டது. இப்படியாக, தொடக்கத்தில் திங்கள், புதன், சனி என்று வாரத்தில் 3 நாட்கள் இலக்கிய கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர் முழு அடைப்பில் தளர்வுகள் ஏற்பட்ட பிறகு, புதன், சனிக் கிழமைகளில் தொடர்ந்து இலக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டது.
50 வது இலக்கிய கூட்டம்
இப்படியாக, இதுவரையில் 50 இலக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 50 வது இலக்கிய கூட்டம் மட்டுமே நிவர் புயல் காரணமாக திட்டமிட்ட நாளில் (நவம்பர் 21) நடத்த முடியாமல், நவம்பர் 29 ந்தேதி நடத்தப்பட்டது. இதில் பேராசிரியை முனைவர் பிரேமா கண்ணதாசனின் காவியப் பாடல்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஒவ்வொரு கூட்டத்திலும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோசம் தலைமை தாங்குவார். நிறைவாக, விஜிபி ராஜாதாஸ் நன்றி உரை நிகழ்த்துவார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, தமிழத்தின் ஆகப் பெரும் இலக்கிய ஆளுமைகள் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என்று உலகின் பல நாட்டு தமிழ் இலக்கிய ஆளுமைகளும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, திராவிடர் கழக தலைவரும் பெரியார் மணியம்மை கல்வி நிறுவனத்தின் துணை வேந்தருமான விடுதலை நாளிதழ் ஆசிரியர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், இல. கணேசன், நாஞ்சில் சம்பத், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், இலக்கிய பேச்சாளர் நந்தலாலா, பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ஞானசம்பந்தம் , திருக்குறளை அரபி மொழியில் மொழிபெயர்த்த பேராசிரியர் ஜாகீர் உசேன், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பர், நெல்லை கவிதாசன், உயர்அதிகாரி நந்தகுமார் ஐஆர்எஸ் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் உள்ள இலக்கிய பேச்சாளர்களும் கலந்து கொண்ட இலக்கிய கூட்டங்களை விஜிபி உலக தமிழ்ச் சங்கம் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
ரஜினிகாந்த்-வசந்தகுமார்
இந்த 50 தமிழ் இலக்கிய கூட்டங்கள் தவிர, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு நிகழ்ச்சியாக, கொரோனா பட்டிமன்றம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற வி.ஜி. சந்தோசம் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி உள்ளிட்ட 10 சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் பெருங்கவிக்கோ வ.மு. சேதுராமன், பாடலாசிரியர் விவேகா , தொலைக்காட்சி கவியரங்கங்கள், பட்டிமன்றங்களில் பங்கேற்ற புகழ்பெற்ற இளந்தலைமுறையினர் கலந்து கொண்டு இலக்கியத்தை செழுமைபடுத்தி உள்ளனர்.
இதில் குறிப்பிடத்தகுந்த சிறப்பு என்றால், வசந்த் அன் கோ நிறுவனரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் கொரோனா தொற்றில் இறப்பதற்கு முன்னர் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிதான். என்னை வளர்த்த விஜிபி என்ற தலைப்பில், வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று தனது இளமைக்காலம், தான் வளர்வதற்கு காரணமான விஜிபி குழுமம் குறித்தெல்லாம் நினைவு கூர்ந்து நன்றிப் பெருக்கோடு சிறப்பாக பேசியதும் குறிப்பிடத்தக்கது.
அதிகளவு 1 லட்சத்து 85 ஆயிரம் பேர்
இந்த இலக்கிய நிகழ்ச்சிகளை, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்ற வலைக்காட்சி (யூடியூப்)சேனல் நேரடியாக ஒலிபரப்பியது. அதனை, வணக்கம் மலேசியா, தமேரிக்கா டிவி, அமெரிக்க தமிழ் சேனல், ஹூஸ்டன் தமிழ் இருக்கை, அமெரி்ககாவின் எஸிதா மீடியா ஆகிய 5 சேனல்களும் இணைந்து ஒளி-ஒலிபரப்பு செய்தன. இந்த இலக்கிய கூட்டங்களில் அதிகபடியான பார்வையாளர்கள் கலந்து கொண்டது நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் பங்கேற்ற கூட்டம்தான். அதில் 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் நேரலையில் கண்டு களித்தனர். மற்ற கூட்டங்களும் குறைந்த அளவு 10 ஆயிரம் பேரை வரையில் பார்த்துள்ளனர்.
இது குறித்து வி.ஜி. சந்தோசம் கூறும்போது, கொரோனா ஊரடங்கின் போது, என்ன செய்யலாம் என திட்டமிட்டோம். அப்போது, இணைய வழி கூட்டங்கள் உலகெங்கும் புகழ்பெற தொடங்கி இருந்தது. எனவே, தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்ய இது சரியான நேரம் என உணர்ந்து தொடக்க புள்ளி வைத்தோம். அது 50 கூட்டங்கள் வரை சென்றது. இப்போது ஒரு சிறு இடைவெளி விட்டுள்ளோம். மீண்டும் 2021 ஆம் ஆண்டில் இலக்கிய கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் ஆற்றிய பங்களிப்பின் பெருமிதத்துடன் கூறினார்.
-மா.இளஞ்செழியன்.