போஸ்டர் செய்தி

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகிறது

Spread the love

சென்னை, பிப்.13–

தமிழக அரசின் 2020–21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி தொடங்கியது. அன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஜனவரி 9ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடந்தது. இந்நிலையில், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. தமிழக அரசின் 2020–21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில் 2011–ம் ஆண்டில் இருந்து இதுவரை 9 முறை பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். 2017ம் ஆண்டு மட்டும் பட்ஜெட்டை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

15வது சட்டசபையில் அண்ணா தி.மு.க அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் அதன்மீது கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய திட்டங்கள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு 2021 மார்ச்சில் வெளியிடப்படலாம் என்பதால், பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே இந்த அரசால் அளிக்க முடியும்.வரும் ஏப்ரல் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற தேர்தல் அடுத்தடுத்து வருவதால் மக்களைக் கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019–20 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 117 கோடியே 11 லட்சத்துக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 400 கோடியாக இருக்கும் என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.14,314 கோடியே 76 லட்சமாகவும், நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியே 36 லட்சமாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 438 கோடியே 51 லட்சத்துக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கடந்த பட்ஜெட்டில் கணிக்கப்பட்டிருந்தது. இதை ஒட்டியே இந்த ஆண்டு பட்ஜெட் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

அனைத்து தரப்பினரையும்…

நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால் விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், அரசு ஊழியர்களை கவரும் வகையில் சலுகைகள், அறிவிப்புகள் இடம் பெறக் கூடும். காவிரி டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டசபை விதி 110ன் கீழ் புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என தெரிகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குடிமராமத்து பணிக்கு வரவேற்பு உள்ளதால் இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நிகராக தேர்வாய் கண்டிகையில் புதிய நீர்ப்பிடிப்பு ஏரி உருவாக்கப்பட்டு வருவதற்கு இந்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகளில் காலை உணவு திட்டம்

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், மேலும் ஒரு நடவடிக்கையாக அரசு பள்ளி மாணவ–-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள சுமார் 320 பள்ளிகளில் பயிலும் 85 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற உணவு வகைகள் காலை உணவாக தினமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் மீதான விவாதத்தில் குரூப்-4 தேர்வு முறைகேடு, குடியுரிமை திருத்த சட்ட பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக காணப்படும்.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் மொத்தம் 4 அல்லது 5 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இதன்பிறகு, துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அவை நிறைவேற்றப்படும்.

சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, நாளை நண்பகலில் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இந்தக் கூட்டத்தில் கூட்டத் தொடரின் தேதிகள் இறுதி செய்யப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் ப.தனபால் வெளியிடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *