நாடும் நடப்பும்

நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்!

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் சமர்பிக்கப்படும் முன்பு கவர்னர் உரை சம்பிரதாயமான ஒன்று. அதில் ஆட்சியாளர்களின் சாதனைகளையும் சீரிய முயற்சிகளையும் வரிசைப்படுத்தி பாராட்டுவதும் வாடிக்கை தான். ஆனால் இம்முறை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் உரை கடந்த ஐந்து ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு நற்சான்றிதழ் தருவதுடன் அதற்கான அறிக்கை அட்டையை முழு பரீட்சையை முடித்த மாணவனுக்கு தருவது போல இருக்கிறது.முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் தேசிய அளவில் தமிழகம் விருதுகளை பெற்று வெற்றிநடை போடுவதாகவும் கவர்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திறன்மிகு தலைமையின்கீழ் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக்கும் இலக்கினை அடைவதில் இந்த அரசு வெற்றிநடை போடுகிறது.

தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமைக்கான விருதை பெற்றுள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தை காட்டுகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், அடுத்ததாக முன்களப் பணியாளர்கள், தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் உரிய நேரத்தில் படிப்படியாக அரசு வழங்கும்.

மேலும் ‘முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை திட்டம்’ செயல்படுத்தப்படும். இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தே முதல்வரின் உதவி மையத்தை 1100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு அரசின் சேவைகளை விரைவில் பெற முடியும்.

தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதுவரை நிறுவன கடன் பெறாத குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் ரூ.1000 கோடியை அடுத்த 3 ஆண்டுகளில் முதலீடு செய்யும்.

தமிழகத்தில் இந்தாண்டு நவம்பர் 30–-ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பு, தமிழ்நெட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு கட்டமைப்புடன், பாரத் நெட்டை இணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த மின்னணு சேவை விநியோகத் தளமான, ஒருங்கிணைந்த மின்னணு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூ.1,620 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. ஊரகப்பகுதியில் வீடற்ற ஏழை குடும்பத்துக்கு கான்கிரீட் கூரையுடன் கூடிய ஒரு வீடும், நகர்ப்புறத்தில் வீடற்ற ஏழை குடும்பத்துக்கு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடும் கட்டித்தரப்படும்.மொத்தத்தில் தமிழகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்ற நிமிடம் முதல் பல துறைகளில் வெற்றி சரித்திரம் கண்டது. அதை உறுதி செய்து இருக்கிறார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவருடன் துணை நிற்கும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் என்பதை மக்களுக்கு புரிய வைத்து இருக்கிறது கவர்னரின் உரை.

வெற்றி சரித்திரம் படைத்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அஇஅதிமுகவையும் வாழ்த்தி வரவேற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *