சிறுகதை

சுகம் எது ? | செருவை நாகராஜன்

Spread the love

பட்டுக்கோட்டையில் ரெயில் நின்றது. வண்டியில் ஏறுவோர், இறங்குவோர் எழுப்பிய கூச்சலும் உணவுப் பண்டங்களை விற்கும் சிறுவர்களின் கூச்சலும் சேர்ந்து அங்கு நிலவிய அமைதியைக் கெடுத்துக்கொண்டிருந்தது.

நானிருந்த பெட்டியிலிருந்து அனைவரும் இறங்கிவிட்டனர்.

வண்டி புறப்படுவதற்கு அறிகுறியாக விசிலும் ஊதப்பட்டு விட்டது.

ஒரு பாதிரியார் வேகமாக வந்து நானிருந்த பெட்டியில் ஏறிக்கொண்டார்.

அவரது முகத்தை உற்று நோக்கிய அடுத்த வினாடியே

‘‘ஆ, நீங்களா? ’’ என்றேன்.

என் கண்கள் வியப்பால் அகல விரிந்தன. நாடித்துடிப்பு சில வினாடிகளுக்கு நின்றுவிட்டது .

இதயத்திலே இனம் புரியாத ஒரு உணர்ச்சி பரவியது. நான் என்னையே மறந்தேன்.

கடந்த காலம் என் கண்முன் வந்து நின்றது.

*

அன்றொரு நாள்

மாலை மணி 4 15. கல்லூரி மணி ஒரு முறை அலறி ஓய்ந்தது. வகுப்பறையிலிருந்து வௌியே வந்ததும் பல்கலைக் கழகத் தேர்வுக்குப் பணம் கட்டுவதற்காக கல்லூரி அலுவலக அறையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தேன். அன்றுதான் பணம் கட்டுவதற்கான கடைசி நாள்.

பணத்தை எடுக்க பாக்கெட்டுக்குள் கையை விட்ட மறு வினாடியே தீயை மிதித்தவள் போல் திடுக்கிட்டேன். பணமிருந்த பர்ஸைக் காணவில்லை. வரும்போது இடையில் எங்கேயோ விழுந்து விட்டிருக்க வேண்டும். என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருந்தேன். நீர்த்திவளைகள் விழிகளின் ஓரங்களில் ஒதுங்கியது.

கமலி! என்ற குரல் வந்த திசையை நோக்கினேன். எனது வகுப்பு மாணவர் சுந்தர் நின்று கொண்டிருந்தார். அவருடைய கையில் என் பர்ஸ் இருந்தது. எனதிரு கண்களாலேயே நன்றியை அவருக்கு உணர்த்திவிட்டு அன்று அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

அன்று முதல் நானும் அவரும் அடிக்கடி சந்தித்து பேசினோம். அவருடைய பேச்சிலிருந்த பண்பும் நல்ல பழக்க வழக்கங்களும் என்னை அவர்பால் ஈர்த்தது. பழகிய ஆரம்பத்தில் தினம் அவருடன் ஒருசில நிமிடங்களே பேசி வந்த நான் போகப்போக அவருடன் பேசும்போது நான் என்னையே மறைந்திருக்க நேரம் சென்றுகொண்டிருக்கும்.

தேர்வு நாள் நெருங்கிவந்து கொண்டிருந்தது. தேர்வு நெருங்க நெருங்க நானும் அவரும் எதிர்காலத்தை பற்றி என்னவெல்லாமோ பேசினோம். எதிர்கால வாழ்வை நினைத்து எங்களையே மறைந்திருந்தோம்.

தேர்வும் வந்தது. அன்று தேர்வின் இறுதிநாள். வெற்றிகரமாகத் தேர்வை எழுதி முடித்துவிட்டு வீட்டு வாசலை மிதித்த எனக்கு அம்மா தெரிவித்த செய்தி தலையை சுக்கு நூறாகப் பிளந்தது. எனக்குத் தெரியாமல் வரனை நிச்சயித்து முகூர்த்த நாளையும் அம்மா குறித்துவிட்டார்.

நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் கிடக்கும் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற என்னை நானே படுகுழியிலே தள்ளிக் கொண்டேன். அடுத்த இரண்டு நாளிலேயே அம்மா இறந்து விடுவார்கள் என்று தெரிந்திருந்தால் நான் சுந்தரிடம் இதைத் தெரிவித்திருக்கமாட்டேன்.

எப்படியோ! அடுத்த நாள் நான் ஒரு நடைபிணமாக சுந்தரைக் காணச் சென்றேன். நானிருந்த நிலையைக் கண்டு பதறிய நிலையை இன்று நினைத்தாலும் அதை வார்த்தைகளில் வடிக்க முடியாது. அவருடைய முகத்தை நிமிர்ந்து நோக்கக்கூட மனமின்றி அந்தக் கடிதத்தை அவரிடம் கொடுத்தேன். என் நிலையையும் திருமணத்தைப் பற்றியும் எழுதி என்னை மறந்துவிடுமாறு அதில் எழுதியிருந்தேன். கடிதத்தை வேகமாக என்னிடமிருந்து வாங்கிப் படித்தார். படிக்கப் படிக்க அவருடைய கண்களிலிருந்து நீர் ஊற்று பெருக்கெடுத்து கடிதத்தை மெல்லமெல்ல நனைந்து கொண்டிருந்தது.

அதற்குமேல் அங்கு நிற்க எனக்கு மனமில்லை. விடுவிடுவென்று வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன்.

தலையணையில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதேன்.

பின்னர் அம்மா இறந்தது போனார். திருமணமும் தடைப்பட்டுவிட்டது. நான் தனிக்கட்டையானேன் அப்போது சுந்தருக்குப் பலமுறை கடிதம் எழுதினேன். பலனில்லை. நானே நேரில் சென்றேன். அங்கு அவரை நான் காண முடியவில்லை. பல இடங்களில் அவரைப் பற்றிய தகவல் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.

பின்பு நான் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு என் வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்தேன்.

எல்லாம் ஒரு வினாடிதான். மீண்டும் சுயநிலைக்குத் திரும்பினேன்.

கமலி! அந்த சுந்தர் தான் நான்

அவருடைய பேச்சில் முன்பிருந்த துடிப்பு இல்லை. முன்பு என்னுடன் பேசும்போது அவருடைய கண்களில் மின்னும் ஆர்வம் இப்போது இல்லை.

மீண்டும் என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்றே எனக்குப் புரியவில்லை. என் நிலையைப் புரிந்துகொண்டோ என்னவோ அவரே மீண்டும் பேச ஆரம்பித்தார்.

கமலி! என்று நீ என்னைப் பிரிந்தாயோ அன்றே எனக்கென்று இருந்த ஒரு வாழ்ககை மடிந்துவிட்டது. மன அமைதியற்றுத் திரிந்தேன். பின்பு கிறித்தவ மதத்தில் சேர்ந்து பாதிரியாரானேன். புனிதமான இத்தொழிலை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது அவர் இதைச் சொல்லிக்கொண்டு வரும்போதே என் கண்கள் குளமாயின. குண்களைத் துடைத்துக் கொண்டு அவரது முகத்தை ஓருமுறை நோக்கினேன்.

முகத்திலே சாந்தம் தவழ்ந்தது. பேச்சில் அமைதி தெரிந்தது. கண்களிலே கருணை. உடையிலே எளிமை. ஏன்னுடைய சுந்தரோ இப்படி மாறிவிட்டார். நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

என்னைக் கண்டதும் அவர் என்னை அப்படியே கட்டித் தழுவி மறுவாழ்வு கொடுப்பார் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது அவர் ஒரு பாதிரியார்.

‘எனக்கு இன்னும் மணமாகவில்லை சுந்தர்’ என்று இதை அவரிடம் நான் சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. காரணம் அந்தத் தௌிந்த உள்ளத்தை மீண்டும் களங்கப்படுத்த விரும்பவில்லை.

நான் திருமணம் செய்து கொண்டேன்.குடியும் குடித்தனமுமாக இருப்பேன் என்ற அவருடைய எண்ணத்தையும் கெடுக்க நான் விரும்பவில்லை.

மன அமைதியை நாடிப் அவர் பாதிரியாரானார்.

நான் ஆசிரியையானேன்.

ஆண்டவன் சன்னிதானத்தில் அவரொரு தொண்டர் ; நான் குழந்தைகள் உருவில் இறைவனை காண்கிறேன்.

மழலைகள் பேசும் மொழிகளை விட மிகையான சுகம் இவ்வுலகில் வேறு என்ன இருக்கிறது?

*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *