செய்திகள்

குண்ணவாக்கத்தில் பஸ் நிற்க செய்த அரசுக்கு நன்றி தெரிவித்த ஆர்.வி.ரஞ்சித்குமார்

கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று

குண்ணவாக்கத்தில் பஸ் நிற்க செய்த அரசுக்கு நன்றி தெரிவித்த ஆர்.வி.ரஞ்சித்குமார்

பயணிகளுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி

காஞ்சீபுரம், பிப்.18–-

காஞ்சீபுரம் அடுத்த வாரணவாசி அருகில் உள்ளது குண்ணவாக்கம் கிராமம். இங்கு சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. குண்ணவாக்கம், அதை சுற்றியுள்ள எலக்காய்மங்களம் கிராம மக்கள் பயணம் செய்ய கடந்த 20 ஆண்டுகளாக குண்ணவாக்கத்தில் பஸ் நிற்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் அதற்கு கைமேல் பலன் இல்லை.

காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமாரிடம் குண்ணவாக்கம் கிராம மக்கள் தங்கள் பகுதியில் பஸ் நிற்கவில்லை என்றும் இதனால் மிகவும் சிரமப்படுகிறோம் என்றும் கோரிக்கை மனு அளித்தனர். உடனடியாக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், பொது மேலாளர் ஆகியோரிடம் ஆர்.வி.ரஞ்சித்குமார் இக்கோரிக்கைக்கு தீர்வு காணுமாறு கோரினார்.

இதையடுத்து இன்று காலை முதல் காஞ்சீபுரத்திலிருந்து செல்லும் அனைத்து அரசு பஸ்களும் குண்ணவாக்கத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் ஒட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை கூறினார்கள். அதையொட்டி தற்போது குண்ணவாக்கத்தில் பஸ் நிறுத்தம் பலகை அமைக்கப்பட்டு அந்த இடத்தில் அரசு பஸ் நின்றது. கிராமத்து ஆண்களும், பெண்களும், மாணவ, மாணவிகளும் மிகுந்த உற்சாகத்துடன் அரசு பஸ்சில் ஏறி உற்சாகமடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆர்.வி.ரஞ்சித்குமார் கூறுகையில், தமிழக அரசை மிக திறமையாக வழிநடத்தும், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பொது மேலாளர் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். 20 ஆண்டுகளாக தீர்க்க முடியாத இந்த பிரச்சனையை தீர்த்து வைத்த அம்மாவின் அரசுக்கு கிராம மக்கள் சார்பாக என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் இதுகுறித்து சுமீத்ரா என்ற பெண் கூறுகையில், 20 ஆண்டுகளாக குண்ணவாக்கத்தில் பஸ் நிற்காமல் சென்றது. கிராம மக்களும், மாணவர்களும் மிகுந்த அவதிப்படுகிறோம் என்று ஆர்.வி.ரஞ்சித்குமாரிடம் முறையிட்டோம். அவர் உடனடியாக தமிழக அரசுக்கு எடுத்துக்கூறி பஸ் நின்று செல்வதற்கு வழிவகை செய்தது எங்களுக்கு மனதிருப்தியை அளிக்கிறது என்றார்.

பிறகு பஸ் பயணிகள் மற்றும் கிராம மக்களுக்கு முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் லட்டுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் டி.ராதாகிருஷ்ணன், சந்தியப்பன், ஸ்ரீதரன், எம்.ராமச்சந்திரன், எம்,சேகர், எ.ஜான்பீட்டர், பாலாஜி, ஆர்.பிரபா, ஜி.விஜயகுமார், எம்.ஜி.சசி உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *