செய்திகள்

மு.க.ஸ்டாலின் அறிவித்தது மத்திய அரசின் திட்டங்கள்

சென்னை, மார்ச் 9–

மத்திய அரசின் திட்டங்களையே தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைநோக்கு திட்டங்களாக அறிவித்துள்ளார் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு திட்டங்களை வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக பாரதீய ஜனதா தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசு ஏற்கனவே ஜல் ஜீவன் மிஷன், அனைவருக்கு வீடு கட்டும் திட்டம், பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் இலவச இணைய வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை தான் மு.க.ஸ்டாலின் 7 தொலைநோக்கு திட்டங்களாக அறிவித்துள்ளார்.

எழில்மிகு மாநகரங்களை உருவாக்குவோம் என்றார். ஏற்கனவே சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை என பல நகரங்களை எழில்மிகு மாநகரங்களாக உருவாக்கி உள்ளோம்.

விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு செய்யப்படும் என்று ஸ்டாலின் கூறினார். விவசாயிகள் நலனுக்கான திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. தான் போராட்டம் நடத்தியது. இன்று போலியாக விவசாயிகளுக்கு இரட்டை லாபம் வருமாறு செய்வோம் என்று கூறுகிறார். ஏமாற்றுவதற்கு தி.மு.க.விடம் தான் கற்க வேண்டும்.

ஸ்டாலின் வெளியிட்ட தொலைநோக்கு திட்டங்கள் மக்கள் ஏமாற்றுவதற்கான அறிவிப்புகளாகத் தான் இருக்கிறது.

இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *