செய்திகள்

கச்சத்தீவு அருகே துப்பாக்கி சூடு நடத்தி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை ராணுவம்

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று பட எதிர்ப்பு எதிரொலி

கச்சத்தீவு அருகே துப்பாக்கி சூடு நடத்தி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை ராணுவம்

ராமநாதபுரம், அக்.18–

கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை ராணுவம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி திருப்பி அனுப்பியதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

நேற்று 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியது. மேலும் வானை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மீன்பிடிக்காமல் மீனவர்கள் கரைக்குத் திரும்பிவிட்டனர். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படை இத்தகைய அத்துமீறல்களை அண்மைக்காலமாக நிறுத்தி இருந்தது. இப்போது திடீரென மீண்டும் அட்டூழியத்தில் இலங்கை கடற்படை இறங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதனால்தான் இலங்கை ராணுவம் மீண்டும் அத்துமீறலை காட்டத் தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தால் இதேபோல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை குறிவைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தோற்றால் கூட தமிழக மீனவர்களை தாக்கி ஆத்திரத்தை காட்டுவதும் இலங்கை கடற்படையின் வாடிக்கை. இதனால்தான் முத்தையா முரளிதரன் பட விவகாரத்தால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மிரட்டியிருக்கலாம் என்கின்றனர் மீனவர்கள்.

ராமதாஸ் கண்டனம்

இலங்கை ராணுவத்தின் இந்த அடாவடித்தனத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: வங்க கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி விரட்டியடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலால் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான சிங்கள கடற்படையினர் அத்துமீறல் சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. தமிழக மீனவர்கள் வங்கக் கடலில் நிம்மதியாக மீன் பிடிப்பதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *