நாடும் நடப்பும்

விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு எப்போது?

விவசாயிகளின் கொண்டாட்டமாக கருதப்படும் பொங்கல் திருவிழா நெருங்கிவிட்டது. வரும் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் சமர்ப்பிப்பும் சில வாரங்களில் வந்துவிடும்.

விவசாயிகளின் நலன் காக்கவே புதிய வேளாண் சட்டம் என்று மத்திய அரசு உறுதியாக நம்பினாலும் வட மாநில விவசாயிகள் அதை ஏற்றுக்கொள்ள தயாராகவே இல்லை! விரைவில் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக கூறி வருகிறார்கள்.

மேலும் குடியரசு தின நாளில் தலைநகர் டெல்லியில் டிராக்டர்களுடன் அணிவகுப்பு நடத்த இருப்பதாகவும் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளார்கள். அதற்கான ஒத்திகைகளையும் துவக்கி விட்டார்கள்.

உலகப் பொருளாதாரம் ஒரு பக்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் பொருளாதார குறியீடுகளும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பணவீக்கமும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

1990–ல் அப்போதைய நிதியமைச்சர் மது தண்டவதே சந்தித்த நெருக்கடியை நினைவுபடுத்துகிறது. உண்மையில் அப்போது தேசிய முன்னணி அரசால் நிலைமையை சீர் செய்ய முடியாது போக பல்வேறு காரணங்கள் உண்டு, அவரைத் தொடர்ந்து பதவியை பிடித்த நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்த மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக்கி மதுதண்டவதே மற்றும் வி.பி.சிங் மேற்கொண்ட வர்த்தக விரிவாக்க கொள்கைகளை விஸ்தாரமாக்கி பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் நுழைய ஏதுவாக கொள்கைத் தளர்வுகளை அறிவித்தனர்.

1993ல் துவங்கிய பொருளாதார சீர்த்திருத்தம் இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியதை கண்டோம்.

கல்வித்துறை மற்றும் பல்வேறு துறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களால் அடுத்த 5 ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை தொட்டது.

2000ம் ஆண்டில் நுழையும் முன்பே இளம் தலைமுறை புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு வெற்றிப் பாதையில் தலைநிமிர்ந்து நடைபோட மேடை அமைக்கப்பட்டது!

21ம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டில் நுழைந்து விட்ட நேரத்தில் 1970களில் இருந்த விவசாயிகள் பிரச்சனைகள் தீர மத்திய அரசு புதிய கொள்கைகளின் அவசியத்தை உணர்ந்தே புதிய மசோதாக்கள் கொண்டு வந்திருப்பது போல் தான் தெரிகிறது. ஆனால் சுதந்திரம் பெற்ற நாள் முதலே நமது விவசாயத்தை முழுமையாக வரி விலக்கும், இலவசங்களும் மானியங்களையும் தந்தே வாழ்வாதாரமாக மத்திய அரசு இருக்கிறது. இன்று திடீர் என்று எந்த பாதுகாப்பும் கிடையாது என்று கூறி விடுவார்களோ? என்ற அச்சக்கேள்வி சாமானிய விவசாயிகளுக்கு எழத்தானே செய்யும்!

இந்த கடுமையான காலக்கட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பட்ஜெட் நிர்மலா சீதாராமனுக்கு மிகப்பெரிய சவாலாகும். 2020–ல் 10 மாதங்களுக்கு முழுமையாக உற்பத்தியே இல்லாத நிலையை கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியது. அதனால் பாதிப்படைந்த முதலீட்டாளர்களுக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்புகளின்றி தவிக்கும் இளைஞர்களுக்கும் உதவிட ஏதுவான வளர்ச்சி திட்டங்களை வடிவமைத்து, அதற்கான முதலீடுகளுக்கும் ஏற்பாடு செய்து, நாட்டின் வளர்ச்சிகளை உறுதி செய்தாக வேண்டிய கட்டாயமும் எழுந்துள்ளது.

கிட்டத்தட்ட ‘ செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வர இருக்கும் பட்ஜெட் சமர்ப்பிப்பையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் வேகத்தை காட்டியாக வேண்டும்.

1990–களில் இருந்த பொருளாதார சிக்கலின் போது மத்திய அரசு நம் வசம் இருந்த தங்கத்தை கப்பலில் அனுப்பி கடன் வாங்கினோம். அதைக் கண்ட பலர் அப்போது நாட்டின் நிலையை கண்டு கண்ணீர் விட்டனர். அத்தோடு அரசை குறை கூறுவதை மட்டும் தொடராமல் தங்களால் என்ன செய்ய முடியும்? என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு நாட்டின் வளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இன்றும் மக்கள் நாட்டில் நிலவும் கடுமையான சூழ்நிலையை உணர்ந்து, அரசியல், ஜாதி, மத, இன உணர்வுகளை தாண்டி எல்லோரும் எல்லாமும் பெற முடிந்த உதவியை செய்ய முன் வர வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியை இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தான் செய்தாக வேண்டும். இந்தியாவை மீண்டும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல களப்பணியில் நம்மால் முடிந்த காரியங்களில் பொதுநல சிந்தனையுடன் செய்தாக வேண்டும்.

முன்பு சுதந்திரம் பெற புரட்சிகர முடிவுகளை எடுத்து சாதித்தோம்! விவசாயத்தில் தன்னிறைவு பெற புரட்சி செய்தோம்!

கணினித்துறையில் நமது புரட்சியை கண்டு உலகமே சிவப்பு கம்பள வரவேற்பு தந்தது!

மீண்டும் பொருளாதாரத்தை நிமிர்ந்து நிற்க வைத்து வளர்ச்சிகள் காண ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து விவசாயிகள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்போம், வர இருக்கும் பட்ஜெட்டையும் உற்று நோக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *