சினிமா செய்திகள் முழு தகவல்

கண்களில் மட்டுமே காதலை காட்டி கண்ணியம் காத்தவர்

திரைப்பட உலகில் அழகை மட்டுமே ஆதாரமாக கொள்ளாமல் நடிப்பை நம்பிக்கையாக கொண்டு வலம்வந்தவர் ஜெமினிகணேசன்.

உணர்ச்சிகளுக்கு உயிர்கொடுத்து நடிக்கும் சிவாஜி ஒருபுறம், உச்ச நட்சத்திரம் எம்ஜிஆர் ஒருபுறம்.

இருபெரும் ஆளுமைகளுக்கு நடுவே தனக்கென ஒரு ராஜபாட்டையை அமைத்து அதில் ஓர் ராஜாங்கத்தை நடத்தியவர்.

சிவாஜியுடன் பாசமலர், பார்த்தால் பசி தீரும் என பல்வேறு படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தார்.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும்… ஜெமினியிடம் ஈகோ இருக்காது. அலட்டல் இல்லாத நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார். குறிப்பாக பெண்கள் மத்தியில்…

பன்முக கலைஞன் ஜெமினி கணேசனின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு மகள் கமலாசெல்வராஜ் அளித்த சிறப்பு பேட்டி இதோ:

‘‘அப்பாவின் நூறாவது பிறந்த நாள் விழாவுக்காக காமராஜர் அரங்கத்தினை ஏற்பாடு செய்திருந்தோம். ஊரடங்கு காரணமாக நிகழ்ச்சிகள் ஏதும் நடத்த முடியவில்லை.

ஆல் இண்டியோ ரேடியோவில் அப்பாவின் வரலாறு முழுவதும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது தவிர அப்பாவை பற்றிய வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறோம்.

அவரது வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைப்படுகிறேன். அதற்கு அவரை போல் ஓர் அழகான மனிதர் கிடைக்க வேண்டும்.


காதல் கடிதங்கள் அதிகம்

ரசிகர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். அவரே அழைத்து ஆட்டோகிராப் போட்டுக்கொடுப்பார். “ஆன்சர்”, “நாட் ஆன்சர்” என தனித்தனியாக ரசிகர்களின் கடிதங்களை பிரித்து பைல் செய்து வைத்திருப்பார். பின்பு தன் கைப்பட பதில் கடிதம் எழுதி தனது போட்டோவை சேர்த்து அனுப்பி வைப்பார். மூட்டை மூட்டையாக கடிதங்கள் வரும். அதில் நிறைய காதல் கடிதங்கள் இருக்கும். பெண் ரசிகைகள் சிலர் எங்கள் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவார்கள். அவர்களுக்கு புத்திமதி கூறி வீட்டில் கொண்டு போய் விட்டு வருவார்.

“காதல் மன்னன்” என்று அழைத்தாலும், லவ் சீன்களில் உதடுகளில் அசிங்கமாக எக்ஸ்பிரசன் காட்டியோ, வல்கராகவோ நடித்தது கிடையாது. காதலை உடலில் காட்டாமல் கண்களில் மட்டுமே காட்டி நடித்தவர். அப்பாவை பற்றி “நடிகையர் திலகம்” படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டது எங்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்பா யாருடன் நடித்தாலும் அவர்களுக்கு ஏற்றாற்போல் தனது நடிப்பை வெளிப்படுத்தி விடுவார். அப்பாவுக்கு பிடித்த படம் புன்னகை. பாபுஜி அம்மா மேல் அப்பா உயிரையே வைத்திருந்தார். ஒரு குழந்தை விளையாடிவிட்டு நிழலுக்காக வருவது போல் எங்கிருந்தாலும் பாபுஜி அம்மாவிடம் ஓடி வந்துவிடுவார்.


கண்களில் மட்டுமே காதல்

சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து விடுவார். கண்களிலேயே காதலை வெளிப்படுத்துவார். விரசமாக இல்லாமல், ஹீரோயின்களை பூ மாதிரி தொட்டு நடிப்பார்.

காலநேரங்களை விரயம் செய்வது அப்பாவுக்கு பிடிக்காது. நேர மேலாண்மையை எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். அதனால் தான் மூன்று மகள்கள் மருத்துவத்துறையிலும், ஒருவர் பத்திரிக்கை துறையிலும் பணியாற்றி வருகிறோம்.

ஏராளமானோருக்கு தான தர்மங்கள் செய்திருக்கிறார். மற்றவர்களிடமிருந்து பறித்து வாழ வேண்டும் என்று இல்லாமல், விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்திய கதாபாத்திரங்களில் தான் அப்பா அதிகம் நடித்து இருக்கிறார்.

என் அக்கா திருமணம் முடிந்து அமெரிக்கா செல்லும் போது ஒரு குழந்தையை போல் அழுதார். அவர் அழுததை பார்த்து அப்பாவுக்கு நம்மேல் இவ்வளவு அன்பா என ஆச்சரியமடைந்தேன்.

‘பீச்’ என்றால் முகம் மலரும்

துருதுருவென இருப்பார். ஞாயிற்றுக்கிழமை தோறும் கடற்கரையில் வாக்கிங் போவோம். வரும்போது ரவா தோசையும், பாதாம் கீரும் சாப்பிட்டு விட்டு வருவோம். கொஞ்சம் கொஞ்சமாக நடை தளர துவங்கியது. பின்பு பீச் போவது நின்று போனது. பீச் போகலாமா அப்பா என்றால் அவர் முகம் மலர்ந்துவிடும்.

அப்பாவுக்கு சமையல் செய்வதற்கு மிகவும் பிடிக்கும். சமையல் செய்வதற்கு உதவி செய்வார். மிக அழகாக படம் வரைவார். அவர் படித்த புத்தகங்கள் குறித்து பேசுவார்.

அரசியலுக்கு அழைத்த ராஜீவ்

அப்பாவை அரசியலில் ஈடுபடுமாறு ராஜீவ் காந்தி அழைத்தார். ஆனால் அப்பா அதனை மறுத்துவிட்டார். சினிமா துறை சார்ந்த விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார். சினிமா துறையில் அவரை போல் படித்த, பணிவான மனிதரை பார்ப்பது அரிது.

நாங்கள் நான்கு மகள்களும் நல்ல பெயருடன் வாழ்வதே அவருக்கு நாங்கள் சாற்றும் புகழ்மாலை என்றார் கமலா செல்வராஜ்.

எழுத்து, தொகுப்பு: ஷீலா பாலச்சந்திரன்

மேலும் படிக்க….

‘காதல் மன்னன்’: பிளாஸ்பேக்!

ஜெமினியோடு திரை பிரபலங்களின் சுவையான பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *