செய்திகள்

45 எம்.எல்.ஏ.க்கள், 23 அமைச்சர்களுக்கு மீண்டும் ‘சீட்’

* 14 பேர் பெண்கள்

* முஸ்லீம்களுக்கு 2 சீட்

* 2 ராஜ்யசபை எம்.பி.க்கள் போட்டியிடுகிறார்கள்

45 எம்.எல்.ஏ.க்கள், 23 அமைச்சர்களுக்கு மீண்டும் ‘சீட்’

சென்னை, மார்ச் 11–

அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில் 23 அமைச்சர்களுக்கு மீண்டும் ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

இதையொட்டி பிரதான கட்சியான அண்ணா தி.மு.க. தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 5ந்தேதி வெளியிட்டது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்), அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் (ராயபுரம்), சி.வி.சண்முகம் (விழுப்புரம்), எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. (ஸ்ரீவைகுண்டம்), எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை–தனி) ஆகிய 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றன.

அண்ணா தி.மு.க.வின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை அண்ணா தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் 171 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுக்கு, அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் தற்போதைய அமைச்சர்கள் 3 பேருக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை. அந்த வகையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் (வாணியம்பாடி), கதர் மற்றும் கிராம தொழில் வாரிய அமைச்சர் ஜி.பாஸ்கரன் (சிவகங்கை), பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி (ஸ்ரீரங்கம்) ஆகியோருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

23 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 41 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஒரே ஒரு அமைச்சர் மட்டும் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அதன்படி பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்தமுறை சிவகாசியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.

2 எம்.பி.களுக்கு சீட்

2 எம்.பி.க்களுக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது. அதாவது அண்ணா தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்திருக்கிறது. அதன்படி கே.பி.முனுசாமி வேப்பனப்பள்ளி தொகுதியிலும், ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவரும் தற்போது நாடாளுமன்ற மேல்சபை எம்.பி.க்களாக உள்ளனர். தற்போதைய அமைச்சர்கள் 27 பேருக்கும், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, பா.வளர்மதி, டி.கே.எம்.சின்னையா உள்பட முன்னாள் அமைச்சர்கள் 17 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கு.ப.கிருஷ்ணனுக்கு, தற்போது போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர் வளர்மதியின் ஸ்ரீரங்கம் தொகுதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு போளூர் தொகுதியும், பா.வளர்மதிக்கு ஆலந்தூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு பல்லடம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சைதை துரைசாமி

இதேபோல பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு, சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கும் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக அண்ணா தி.மு.க.வின் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ஆதிராஜாராம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

14 பேர் பெண்கள்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 177 வேட்பாளர்களில் 14 பேர் பெண்கள் ஆவார்கள். அதேபோல 2 வேட்பாளர்கள் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் இந்த வேட்பாளர் பட்டியலில் 82 பட்டதாரிகள், 17 வக்கீல்கள், 12 என்ஜினீயர்கள், 3 டாக்டர்கள், ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *