நாடும் நடப்பும்

கடல் விமான சுற்றுலா வசதி

இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் துவக்கி வைத்து அதில் பயணமும் செய்து மகிழ்ந்தார்.

குஜராத்தில் ஒற்றுமை சிலை அமைந்துள்ள கெவாடியாவில் இருந்து சபர்மதி நதிக்கரை வரையிலான கடல் விமான சேவையை தான் மோடி அப்போது துவக்கி வைத்து நாட்டிற்கு புதிய சுற்றுலா வசதியையும் இதன் மூலமாக உருவாக்கினார்.

இந்த விமானம் நீரில் இருந்து புறப்பட்டு நீரில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல் விமான சேவை இந்த பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்க உதவும் என பிரதமர் மோடி அப்போது கூறியிருந்தார்.

தனியார் விமான நிறுவனம் ஒன்று தான் இந்த கடல் விமான சேவையை ஏற்றுக்கொண்டுள்ளது. நபர் ஒருவருக்கு சுமார் ரூ.4,800 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நம் நாட்டில் கிட்டதட்ட இரண்டு லட்சம் நீர்நிலைகள் உண்டு., அதில் 25 ஆயிரமாவது பயணிகளை கவரும் குழ்நிலையில் இயற்கையாக பெற்றும் இருக்கிறது.

அதன் சிறப்பை உணர்ந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தற்போது தொடங்கியுள்ளது.

கடல் விமான சேவைகளுக்காக பல்வேறு வழித்தடங்கள் பரிசீலனையில் உள்ளன. அந்தமான் மற்றும் நிக்கோபர், லட்சத்தீவுகள், கவுகாத்தி நதிக்கரை, அசாமில் உள்ள உம்ரான்சோ நீர்த்தேக்கம், யமுனா நதிக்கரை, டெல்லியிலிருந்து அயோத்தி வரை, தெஹ்ரி, ஸ்ரீநகர் (உத்தரகாண்ட்), சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கடல் விமான சேவைகள் திட்டமிடப்படுகின்றன.

சாதாரண சிறிய ரக நிலையான இறக்கைகளைக் கொண்ட நீர்நிலைகளில் தரையிறங்கக் கூடியதும் நீர் நிலைகளிலிருந்து மேலெழக்கூடியதுமான விமானங்களே கடல்விமானங்கள் என்று அழைக்கப் படுகினறன. கடல் விமானங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று மிதவை விமானங்கள், மற்றொன்று பறக்கும் படகுகள்.

இரண்டும் ஒரே விதமான பயன்பாட்டில் இருந்தாலும் உடலைப்பில் வேறுபடுகின்றன.

மிதவை விமானங்கள் : இவை ஆகாய விமானங்களின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள சக்கரங்களுக்கும் பதிலாக மிதவைகளைக் கொண்டுள்ளன. இவை கடலிலும், கரையிலும் இறங்கக் கூடிய ஈரூடக வான்கலங்கள் அமைப்பினைக் கொண்டவை.

பறக்கும் விமானங்கள்: இவை ஒரு படகின் அமைப்பையும் விமானத்தின் அமைப்பையும் கொண்டவை. விமானத்தின் அடிப்பகுதி தண்ணீரில் மிதப்பதற்கு ஏற்ப படகின் அடிப்பகுதியைக் கொண்டும் வானத்தில் பறப்பதற்கு ஏற்ப சாதாரண விமானங்களைப் போன்ற இரண்டு இறக்கைகளைக் கொண்டும் வடிவைமக்கப்பட்டிருக்கும்.

டெல்லி, ‌ஷீரடி உள்பட மேலும் சில இடங்களுக்கு கடல் விமான சேவை இயக்க மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியின் யமுனை நதிக்கரையில் இருந்து அயோத்தி, மும்பையில் இருந்து ‌ஷீரடி, ஸ்ரீநகரில் இருந்து பத்ரிநாத் அல்லது கேதர்நாத், சூரத்தில் இருந்து துவாரகா உள்ளிட்ட வழித்தடங்களிலும் கடல்விமானத்தை இயக்க மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த போக்குவரத்தில் ஈடுபட ஆர்வமுள்ள நிறுவனங்கள், சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வலியுறுத்தியும் இருக்கிறது. எனவே விரைவில் கூடுதல் கடல்விமான சேவைகள் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அற்புதமான கடற்கரை நகரங்களுடன் உள்ள துபாயில் கடல் விமானம் சுற்றுலா மிக பிரபலமானதாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தரைக்கு மேலே 1500 அடிக்கு சென்று ஐக்கிய அரபு அமீரகதில் பல்வேறு அற்புத காட்சிகளை கண்டு ரசிக்கலாம். ஆனால் அவர்கள் நாட்டில் யாரும் எந்த தப்பும் செய்யமாட்டார்கள். காரணம் கடுமையான தண்டனைகள். நம் நாட்டில் இது சரிபட்டு வருமா? தனிநபர் ஒழுக்கம் உயர்ந்தால் நிச்சயம் சாத்தியமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *