செய்திகள்

ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.5500 கோடியாக உயர்வு

Spread the love

சென்னை, பிப்.14–

ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.5500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–

‘ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்’ மாநிலத்தின் சாலை உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் ஆகும். இந்த அரசு 3,256 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல் பணிக்கும், 3,597 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளின் ஓடுதளப்பாதை தரத்தினை மேம்படுத்துதுல் பணிக்கும்,

56 பாலங்கள் மற்றும் சிறுபாலங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கும் 1,718 இதர பணிகளை மேற்கொள்வதற்கும், 2019–20 ஆம் ஆண்டில் 4,521.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ‘ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 5,500 கோடி ரூபாயாக கணிசமாக உயர்த்தப்படுகின்றது.

பராமரிப்பு ஒப்பந்தங்கள்

பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர் மற்றும் பழனி ஆகிய கோட்டங்களில் இதுவரை செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பாண்டில் தஞ்சாவூர் கோட்டத்திலும் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோபிசெட்டிப்பாளையம் கோட்டமும் செயல்பாடு அடிப்படையிலான ஒப்பந்த முறையின் கீழ் 2020–21 ஆம் ஆண்டில் கொண்டுவரப்படும்.

ஊராட்சி சாலைகள் தரம் உயர்த்தப்படும்

கிராமப்புற ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்டச் சாலைகளின் தரத்திற்கு உயர்த்தப்படும் பணியின் நான்காவது கட்டம், 2020–21 ஆம் ஆண்டில் தொடங்கப்படும். இதுவரை, 4,861.70 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை 2,772.48 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நிறைவுற்றுள்ளன. 2020–21 ஆம் ஆண்டில் 1,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தும் பணி 1,050 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இதற்கென, 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 1,050 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தடம்

உலக வங்கிக் கடன் உதவியுடன் இந்த அரசு செயல்படுத்தி வரும் ‘தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்’ இரண்டாவது கட்ட திட்டப் பணிகளுக்கு 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 615.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை –கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 655 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் 6,448 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் புறவழிச் சாலைகளை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக, 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு?செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சுற்றுவட்ட சாலை திட்டம்

சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டம் 12,301 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். அதில், முதல் கட்டமாக எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரையிலான பகுதிக்கான நில எடுப்புப் பணிகள் 951 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு, தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் முதல் பிரிவிற்கான பணிகள் 2,673 கோடி ரூபாய் செலவில் ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் கடனுதவியுடன் மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை சுற்றுவட்டச் சாலையின் மேலும் மூன்று பிரிவுகளுக்கான நில எடுப்புப் பணிகளை 2,603.32 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின், பகுதி 2 மற்றும் 3ன் கீழ், தச்சூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான பணிகளுக்கு, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் சர்வதேச வளர்ச்சி நிதியம் ஆகியவற்றின் 3,346.49 கோடி ரூபாய் கடன் உதவியும் பெறப்பட உள்ளது. 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் திட்டம்

பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், வாகன ஓட்டிகளின் நேரத்தை சேமிப்பதற்காகவும், வாகனங்களின் இயக்கச் செலவினைக் குறைப்பதற்காகவும், ‘சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டம்’ 4,257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, புதிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி கோரி அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 1,122 கோடி ரூபாய் செலவில் நிலம் கையகப்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. 1,620 கோடி ரூபாய் செலவில், கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து உப்பிலிபாளையம் வரையில் உள்ள அவினாசி சாலை நெடுகிலும் 10.1 கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்த்தப்பட்ட சாலைகள் அமைப்பதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, 2020–21 ஆம் ஆண்டிற்கான, வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *