செய்திகள்

2020 டிசம்பர் மாதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.15 லட்சம் கோடி

புதுடெல்லி, ஜன.2-–

2020 டிசம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருக்கிறது.

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை 2017–-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-–ந் தேதி அமலுக்கு வந்தது. அந்த நாள் முதல் இந்த அளவுக்கு அமோகமாக ஒரு மாதத்தில் ரூ.1.15 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலானது இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரி வசூல் நடைமுறைக்கு வந்ததில் இருந்து அதிகபட்ச வரி வசூல் என்பது கடந்த 2019–-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.13 லட்சம் கோடி கிடைத்தது தான். அதன்பின் இந்த அளவு வரிவசூலைத் எப்போதும் தொட்டதில்லை. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் இதுவரை இல்லாத வகையில் ரூ.1.15 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

பண்டிகைக்கால தேவை, விற்பனை, பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பிவருவது ஆகியவற்றின் பிரதிபலிப்பாக ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரித்துள்ளது.

2020 டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரிவருவாய் வசூல் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 174 கோடியாகும். கடந்த 2017–ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபின் கிடைத்த அதிகபட்ச வசூல் இதுவாகும்.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 21 மாதங்களாக கிடைத்த மாதாந்திர வருவாயில் இதுதான் மிக உயர்ந்த வளர்ச்சி ஆகும். இது கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பிந்தைய விரைவான பொருளாதார மீட்சி மற்றும் ஜி.எஸ்.டி. ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் போலி பில்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நாடு தழுவிய நடவடிக்கையின் விளைவு ஆகும்” என கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 31–-ந் தேதி வரையில், நவம்பர் மாத ஜி.எஸ்.டி.ஆர்.-3 பி கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 87 லட்சம் ஆகும். இந்த மாதத்தில் பொருட்கள் இறக்குமதியில் இருந்து 27 சதவீதம் அதிக வருவாய் கிடைத்துள்ளது. உள்நாட்டு பரிமாற்றத்தின் மூலம் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் கிடைத்ததை விட 8 சதவீதம் அதிகமாகவும் இருந்தது என மத்திய நிதி அமைச்சகம் கூறுகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பிந்தைய மீட்சி போக்குக்கு ஏற்ப, தொடர்ந்து 3-வது மாதமாக டிசம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

டிசம்பரில் மத்திய ஜி.எஸ்.டி. வசூல் ரூ.21 ஆயிரத்து 365 கோடி. மாநில ஜி.எஸ்.டி. வசூல் ரூ.27 ஆயிரத்து 804 கோடி. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.57 ஆயிரத்து 426 கோடி. கூடுதல் வரி (செஸ்) வசூல் ரூ.8,579 கோடி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *