செய்திகள்

தங்கத்தட்டில் பரிமாறப்படும் பிரியாணி விலை ரூ. 20 ஆயிரம்

துபாய், பிப். 23–

உலகின் மிக அதிக விலையுள்ள பிரியாணி ரூ. 20 ஆயிரத்துக்கு தங்கத் தட்டில் பரிமாறப்படுகிறது.

பிரியாணி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சுவை மற்றும் மனம் மட்டுமல்ல அந்த ஊரின் அடையாளமாகவும் இருக்கிறது. உலகிலேயே மிக விலை உயர்ந்த பிரியாணி, துபாயில் உள்ள ‘பாம்பே பரோ’ எனும் நட்சத்திர சொகுசு விடுதியில் தான் விற்கப்படுகிறது. இதன் விலை, 1000 திராம் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 19,700 ரூபாய்.

துபாய் சர்வதேச நிதி மையத்தில் (Dubai International Financial Centre – DIFC) உள்ள ஆங்கிலேயர் காலத்து பங்களாவில் அமைந்திருக்கும் இந்த ஓட்டலில் கிடைக்கும் இந்த பிரியாணிக்கு, ராயல் கோல்ட் பிரியாணி என்று பெயர். இந்த ராயல் கோல்ட் பிரியாணி, ஆர்டர் செய்து 45 நிமிடம் கழித்துதான் நம் சாப்பிடும் மேசைக்கு வரும்.

என்னென்ன உள்ளது?

தங்கத்தாம்பாளத்தில் மூன்று கிலோ அளவுக்கு கொண்டுவரப்படும் இந்த ராயல் கோல்ட் பிரியாணியில், சிக்கன் பிரியாணி, கைமா பிரியாணி, குங்குமப்பூ பிரியாணி என்று மூன்று வகையான குஸ்காவுடன், மலாய் சிக்கன், சிக்கன் மீட் பால்ஸ், ராஜ்புட் கோழி கறி தவிர, மட்டன் சாப்ஸ், மட்டன் ஷீக் கபாப் என்ற மாமிச வகைகளும், அவித்த முட்டை மற்றும் வித விதமான பச்சடி, இனிப்பு வகைகளும் பரிமாறப்படுகிறது.

இந்த ராயல் கோல்டு பிரியாணியில் 20000 ரூபாய்க்கு அப்படி என்ன உள்ளது என்று கேட்பவர்களுக்கு, ‘கோல்டு’ என்பது இந்த பிரியாணியின் பெயரில் மட்டுமல்ல. இந்த பிரியாணியிலும் தங்கம் கலந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு, உணவாக சாப்பிடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட 23 கேரட்டினாலான ‘தங்க காகிதம்’, இதன் மீது தூவினார் போல் போர்த்தப்பட்டு பரிமாறப்படுவது இந்த பிரியாணியின் சுவையை மட்டுமல்ல அதன் மதிப்பையும் கூட்டுகிறது என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *