செய்திகள்

தென்னிந்தியாவுக்கான சீனத் தூதரகம் சென்னையில் தொடங்க வேண்டுகோள்

Spread the love

சென்னை, அக். 10–

மாமல்லபுரத்தில் நடைபெறும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான உச்சி மாநாட்டில், இரண்டு நாடுகளும் நெருங்கமாக செயல்படுவதற்கான வழிவகைகளை காண வேண்டும் என்று, பிரிக்ஸ் ஜெனரேசன் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மியாசி அகாடெமியின் அரங்கில், சீன அதிபர் ஜி ஜின்பிங்–பிரதமர் மோடி இடையிலான உச்சி மாநாட்டையொட்டி, ‘பிரிக்ஸ் ஜெனரேசன்’ சார்பில், நேற்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. “இந்திய–சீன உச்சி மாநாட்டின் எதிர்பார்ப்புகள்” என்ற தலைப்பிலான இந்த கருத்தரங்கில், பேராசிரியர் ராமநாதன் வரவேற்று பேசினார். மியாசி அகாடெமியின் இயக்குநர் பேராசிரியர் நிஷார் அகமது முன்னிலையில், கருத்தரங்கின் நோக்கம் குறித்து, ‘பிரிக்ஸ் ஜெனரேசன்’ அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆர்.முத்துக்குமார் எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலுள்ள பன்னாட்டு கல்வித் துறையின், துறைத் தலைவர் ஆர்த்தி சந்தானம், சீனாவுடன் இணங்கி செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

இணைந்து செயல்பட வேண்டும்

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ‘கேப்பெக்சில்’ அமைப்பின் தலைவர் ‘ஜெம்’ கிரானைட்ஸ் வீரமணி பேசியதாவது:–

இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் மிக பழைமையான நாகரிகம், பண்பாடு கொண்டவை. மக்கள் தொகை, பண்பாடு போன்றவற்றில் மட்டுமல்லாது, இரண்டு நாடுகளுக்குமிடையே பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிலும் சிறப்பான ஒற்றுமைகள் உள்ளது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத நாட்களிலேயே இரண்டு நாடுகளும் அறிவியல், பண்பாடு, நாகரிகத்தில் மேலோங்கி இருந்தது. தற்போதைய நிலையில், பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கான மனித ஆற்றலில் சீனா 30 விழுக்காடும், இந்தியா 25 விழுக்காடும் கொண்டுள்ளது. எனவே, இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படும்போது, மிகப்பெரிய வளர்ச்சி சாத்தியமாகும்.

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள், இந்தியாவின் பாடலிபுத்திரத்தில் இருந்தது. அங்கு, சீன பயணிகள் வருகை தந்து, கல்வி கற்றதுடன் அதுகுறித்து பல்வேறு குறிப்புகளையும் எழுதி வைத்தனர். அவையே நமக்கு பல்வேறு வரலாற்று தகவல்களை எடுத்துச்சொன்னது. நாம் கண்டுபிடித்த பூஜ்ஜியம் இல்லாமல், கணக்கு ஒருபோதும் முழுமை பெறாது. அந்த அளவுக்கு, நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் நாம் மட்டுமே. வானியல், மருத்துவம், புவியறிவு போன்றவற்றிலும் நாம் பெரும் அறிவு வளம் பெற்றிருந்தோம்.

சீனா, ஏற்றுமதிக்கான பெரும் வளங்களை பெற்றுள்ள இந்நிலையில், இரண்டு நாடுகளும் இணைந்து, நெருங்கி செயல்பட வேண்டிய தேவை உள்ளது. அதன்மூலம், இரண்டு நாடுகளும், உலகின் தலைசிறந்த பொருளாதார நாடுகளாக விளங்க முடியும் என்பதுடன், உலகின் தலைமை இடத்தையும் வகிக்க முடியும். ஐரோப்பியர்கள் எழுதிய வரலாறுகள் பலவும், பிழைபட எழுதப்பட்டுள்ளது. அவை அனைத்தும் திருத்தி எழுதப்பட வேண்டும். அலெக்சாண்டர் உலகையே வெற்றி கொண்டான் என்றுதான் நாம் இதுவரை படித்து வருகிறோம். ஆனால், செங்கிஸ்கான்தான் மங்கோலியாவில் இருந்து ஐரோப்பா வரையிலும் வென்றவன்.

எனவே, சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி சந்திக்கும் உச்சி மாநாட்டில், இரண்டு நாடுகளும் இணைந்து–நெருங்கி செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு உதவும் வகையில், சென்னையில் இருந்து சீனாவுக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும். அதேபோல், தென்னிந்தியாவுக்கான முழு அதிகாரங்கள் கொண்ட சீன தூதரகம் சென்னையில் ஏற்படுத்த வேண்டும். சீனாவுக்கான விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள், இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்கு பெரும் மைல்கல்லாக இருக்கும். சீனாவின் மான்டரின் மொழியை நாம் கற்றுக்கொள்ளவதன் மூலம், சீனாவுடன் இணைந்து வளர்ச்சி பெற உதவும். இரண்டு நாடுகளும் ஒன்றுபட்ட செயல்பட, இந்த உச்சி மாநாடு உதவ வேண்டும் என்று வாழ்த்தினார்.

ஏற்றுமதிக்கு உதவும் சீன கரன்சி

நிகழ்ச்சியில் மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துக்குமார் பேசியதாவது:–

தமிழகத்தின் தொன்மை நகரமான மாமல்லபுரத்தில், சீன–இந்திய உச்சி மாநாடு நடைபெற உள்ள நேரத்தில், இந்த முக்கியமான கருத்தரங்கை, பிரிக்ஸ் ஜெனரேசன் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்துள்ளோம். இரண்டு நாடுகளும் பொருளாதாரம், மனித ஆற்றலில் உலகில் தலைமை வகிக்கும் நாடுகள் என்பதுடன், அண்டை நாடுளாகவும் உள்ளோம். நமக்குள் பல்வேறு கலாச்சார ஒற்றுமைகள் உள்ளது. ஏற்றுமதி வர்த்தக நடவடிக்கைகளுக்கு நாம் அமெரக்க ‘டாலர்’, அடுத்து ஐரோப்பாவின் ‘யூரோ’ ஆகியவைகளையே பயன்படுத்தி வருகிறோம்.

சீனாவின் ‘யுவான் கரன்சி’ உலக நிதியத்தால் (ஐஎம்எப்) அங்கீகரிக்கப்பட்ட 3 வது பெரிய கரன்சியாக உள்ளது. இந்த நேரத்தில், நாம் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு சீனாவின் ‘யுவான்’ கரன்சியை பயன்படுத்தினால், அது இருநாடுகளின் வர்த்தக மேம்பாட்டுக்கு உதவிகரமாக இருக்கும். இதுபோன்ற பல்வேறு ஆக்கநிலையிலான சிந்தனைகள், மாமல்லபுரம் உச்சி மாநாட்டின் மூலம் நடைமுறைக்கு வரவேண்டும் என்று, ‘பிரிக்ஸ் ஜெனரேசன்’ அமைப்பு சார்பில் வாழ்த்துகிறோம் என்றார்.

கல்வி மையத்தில் சுற்றுலா கழகம்

பிரிக்ஸ் ஜெனரேசன் அமைப்பின் துணைத்தலைவர் உமா பாலு பேசும்போது, சீனா, இந்தியா இடையே உணவு, உடை, பண்பாட்டு ஒற்றுமைகள் ஏராளமாக உள்ளது. இந்நிலையில், நம் நாட்டின் ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் சுற்றுலாக் கழகங்கள் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம், நம் நாட்டின் பல்வேறு சுற்றுலா இடங்கள், உணவுப் பழக்கங்கள், பண்டிகைகள், ஆடைகள் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படும். உலக நாகரிகம், பண்பாட்டை தெரிந்து கொள்வதற்கு முன்னர், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் சுற்றுலா, உணவு, பண்பாட்டை தெரிந்து கொள்வது நமக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

முன்னதாக, கருத்தரங்கு வெற்றிபெற, ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி அனுப்பி இருந்த வாழ்த்து கடிதத்தை வி.வி.எஸ். மணியன் வாசித்தார். அதில், இந்தோ–சீன உச்சி மாநாடு நடைபெறும் வேளையில், ‘பிரிக்ஸ் ஜெனரேசன்’ சார்பில் “இந்திய–சீன உச்சி மாநாட்டின் எதிர்பார்ப்புகள்” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கு சிறப்பான ஒன்றாகும். இவ்வேளையில், உலகில் அமைதி ஏற்பட, சாதி, மத தடைகளை கடந்து, உலகளாவிய சகோதரத்துவத்தை நிலை நிறுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதற்கு மாமல்லபுரம் உச்சி மாநாடு வழிவகுக்க வாழ்த்துகிறேன் என்று கூறி இருந்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, சீர்காழி சிவசிதம்பரம் நன்றி கூறி பேசும்போது, உலகில் சீனர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடைய பண்பாட்டையும் சேர்த்தே எடுத்து செல்கிறார்கள். அவர்கள் வாழும் எந்த நாட்டிலும் ‘சீனா பஜார்’ இருக்கும். அதுபோல், தமிழர்களும், எங்கு வாழ்ந்தாலும், நமது மொழி பண்பாட்டை கைகொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *