சிறுகதை

ராஜேந்திரன் வீட்டு எலி!

ராஜேந்திரனுக்கு பிரச்சனை முதலில் சிறியதாகத்தான் ஆரம்பித்தது.

போகப்போக தான் அது பெரியதாகியது!

ராஜேந்திரன் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்.

ஓய்வு பெற்றாலும் அதே கம்பீரம். ஆனால் ராணுவ வீரர்கள் என்றாலே முகத்தில் ஒரு கடுமை இருக்குமே, அதை ராஜேந்திரன் முகத்தில் கொஞ்சமும் பார்க்க முடியாது. எப்போதும் சிரித்த முகம்!

ராணுவ வீரர்களுக்கே உரிய அதிக நாட்டுப்பற்று இவரிடமும் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருந்தது. அதைவிட ஆச்சரியமான விஷயம் அவரிடமிருந்த அதிக இரக்கக் குணம்.

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று ‘அப்பாடா’ என்று தனது கபிஸ்தலம் கிராமத்திற்கு வந்து, ஓய்வாக வீட்டில் பேரன் பேத்திகளுடன் இருந்த அவருக்கு ஒரு சிறு பிரச்சனை வந்தது.

வேறு ஒன்றுமில்லை; ஒரே ஒரு எலி. அதுவும் சுண்டெலி. அவரது ரூமுக்குள் எங்கேயிருந்தோ வந்து, குறிப்பாக அவர் வைத்திருந்த புத்தகங்களை கடிக்க ஆரம்பித்தது.

அவருக்கு ராணுவத்திலிருந்த காலத்திலிருந்தே புத்தகங்கள் படிக்கும் பழக்கமிருந்தது. பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து, சிவகாமியின் சபதம், யவனராணி, தில்லானா மோகனாம்பாள், துப்பறியும் சாம்பு, வாஷிங்டனில் திருமணம், உன்னைபோல் ஒருவன், நைலான் கயிறு என்று நிறைய புத்தகங்களை எங்கெங்கையோ பழைய புத்தகக் கடைகளில் தேடிப்பிடித்து வாங்கி சேர்த்து வைத்திருந்தார். எல்லாமே அந்த காலத்தில் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், குங்குமம், சாவிபோன்ற பத்திரிகைகளில் தொடர் கதையாக வந்தபோது வாரா வாரம் சேர்த்து பைண்டிங் செய்தது. பக்கத்திற்கு பக்கம் படங்கள்!

அந்தப் பாழாய் போகிற சுண்டெலி, அவரது புத்தகங்களாகப் பார்த்து கடிக்க ஆரம்பித்தது. என்னதான் பெரிய ராணுவ வீரராக இருந்தாலும் பெரிய பெரிய புலிப்போன்ற தீவிரவாதிகளுடன் போராடியவராக இருந்தாலும் அவருக்கு இந்த எலியை என்ன செய்வதேன்று தெரியவில்லை!

‘‘கரக்…. கரக்’’ என்று அது கடிக்கும் சத்தம் கேட்கும். அவர் எழுந்து ‘லைட்டைப் போட்டால் அடுத்த வினாடி சத்தம் நின்றுவிடும். எலி வாயைத் தானே பொத்திக்கொள்ளும். அத்துடன் எங்கேயோ மறைந்துவிடும். லைட்டை அணைத்துவிட்டு படுத்தால் கொஞ்ச நேரத்தில் மறுபடியும்

‘‘கரக்… கரக்’’’ தான்!

முதலில் இரவில் மட்டுமே வந்து தொந்தரவு செய்துக் கொண்டிருந்த எலி, இப்போது பகலிலும் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்தது.

இதில் என்ன பெரிய கொடுமையென்றால், அந்த எலி அவரது புத்தகத்தை மட்டுமே குறி வைத்து கடித்து நாசம் செய்து கொண்டிருந்தது தான்! அது வேறு எதையும் கடிப்பதில்லை; ஏற்கனவே பொன்னியின் செல்வனில் 3 பாகத்தை அது முடித்திருந்தது!

‘ஏங்க… எலி மருந்து வெச்சுப் பாக்கலாமுங்க’ என்றாள் அவரது மனைவி.

ஜன்னலுக்கு வலையடித்துக் கொண்டிருந்த அந்த வீராதி வீரரோ, ‘அதெல்லாம் வேண்டாம். எங்கேயாவது இரண்டு அடுக்குகளில் போய் செத்து நாறித் தொலையும்! அப்புறம் நான் ராணுவத்தில் தீவிரவாதிகளை தேடியது போல அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதோடு பக்கத்து பக்கத்து வீடுகளுக்குப் போய் எங்காவது செத்துத் தொலைந்தால், நம்மால் அவர்களுக்குக் கஷ்டம்’ என்றார். அந்த நிலையிலும் அவருக்கு பிறருடைய நலன் பெரிதாக தெரிந்தது.

நாளுக்கு நாள் எலியின் தொந்தரவு அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அது பொன்னியின் செல்வனை 3வது பாகத்தோடு விட்டு விட்டு, யவனராணி பக்கம் தனது கவனத்தை திருப்பியிருந்தது!

ஒரு நாள் பகலில் அந்த எலிக்கும் ராஜேந்திரனுக்கும் நேருக்கு நேர் சந்திக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இருவரும் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அடுத்த விநாடியை சுதாரித்துக்கொண்ட ராஜேந்திரன் பக்கத்திலிருந்த கம்பை எடுத்து, தனது ராணுவ பலத்தையும் குறி தவறாத பழக்கத்தையும் வைத்து, கோபத்துடன் ஒரே போடாகப் போட்டார்!

‘டமாரென்ற’ மேஜையிலிருந்து காந்தி பொம்மைதான் விழுந்து உடைந்தது. எலி எங்கேயோ போயே போய் விட்டது!

‘இனியும் அந்த எலியிடம் அகிம்சை கூடாது’ என்று ராஜேந்திரன் ஒரு முடிவுக்கு வந்தார்.

‘கும்பகோணம் போய்ட்டு வரும்போது, நல்ல எலிப்பொறியாக வாங்கி வாங்க! பட்டென்று அடிப்பட்டு எலி நசுங்கி, விடும்!’’ என்றார் அவரது மனைவி.

எலிப்பொறி வாங்கப்போன ராஜேந்திரனுக்கு, அடித்து எலியை நசுக்கிக் கொல்லும் அந்த எலிப்பொறியை ஏனோ பிடிக்கவில்லை. என்னதான் அவர் ராணுவ வீரராக இருந்தாலும் ஒரு எலியை அதுவும் ஒரு வாயில்லாத ஜீவனை, (ஐயோ, வாயில்லா ஜீவனா அது?) அப்படி சொல்வதில் அவருக்கு ஏனோ விருப்பமில்லை. உள்ளே கம்பியில் பட்சணங்களை வைத்தால் எலி உள்ளே போய் கடித்தால், ‘டப்’ பென்று கதவு மூடிக்கொள்ளுமே, அந்த ரக கூண்டு எலிப்பொறியை வாங்கி வந்தார். எலி உள்ளே வந்து மாட்டிக் கொண்டால், அதை எங்கையாவது தோப்புத் தொரவுகளில் கொண்டுப்போய் திறந்துவிட்டு விடலாமென்பது அவரது திட்டம்!

வரும்போதே, கும்பகோணத்தில் அவரது நண்பர் ஸ்வீட் ரவி கடையில் 8 அதிரசங்களை வாங்கிக் கொண்டார்.

எதற்கு 8 அதிரசங்கள் என்று கேட்கிறீர்களா? அவருக்கு, அவர் மனைவிக்கு, பிள்ளைக்கு, பேரன், பேத்திக்கு என்று 7ம் அந்த பொல்லாத எலிக்கு ஒன்றும்!

அதிரசத்தின் வாசனை மூக்கைத் தொலைத்தது. எலிக்கான அந்த அதிரசத்தையும் தானே சாப்பிட்டு விடலாமாயென்று அவரே நினைக்குமளவுக்கு வாசனை! ஆனாலும் ராணுவ கட்டுப்பாட்டுடன் அந்த எலிப்பொறியில் அதிரசத்தை வைத்தார்.

ஆனால் வழக்கம்போல அன்றும் வந்த அந்த பொல்லாத எலி, அதிரசம் பக்கம் தனது கவனத்தை திருப்பவே இல்லை. இந்த தடவை நம்ம எலியாரின் பார்வை தி.ஜானகிராமனின் செம்பருத்தி நாவல் பக்கம் திரும்பியிருந்தது!

அதிரசத்தை அடுத்து வடை, முறுக்கு என்று ஏதேதோ வைத்துப் பார்த்துவிட்டார். அது ஏதோ வித்யாசமாக உணர்ந்திருக்க வேண்டும். எலிப்பொறி பக்கம் திரும்பாமல், அது தனது ஒரே லட்சியம் புத்தகம் தான் என்றிருந்தது!

அன்று பகல் 3 மணியளவிலேயே ‘கரக்… கரக்…’ என்று எலியாரின் சத்தம். ராஜேந்திரன் துள்ளிக்குதித்து எழுந்தார். மனைவியை கூப்பிட்டு ‘காலையில் உடைத்ததில் ஒரு தேங்காய் மூடி இருந்ததே, அதை எடுத்து வா’’ என்றார். அதாவது தேங்காயை நெருப்பில் சுட்டு, வாசனையாக வைத்துப் பார்க்கலாமென்று அவருக்கு ஒரு நப்பாசை!

‘அதை மத்தியானம் கத்திரிக்காய் கறிக்குப் போட்டு விட்டேனே’ என்று மனைவி சொல்லவே, வேறு வழியில்லாமல் திறந்த எலிப்பொறியை உள்ளே கம்பியில் ஒன்றுமே வைக்காமல், அப்படி திறந்தபடியே வைத்துவிட்டு, ‘அப்பாடா’என்று அசந்து படுத்துவிட்டார்!

சிறிது நேரத்தில் ‘படா’ரென்று ஒரு சத்தம்! ஆம், உள்ளே தின்பதற்கு ஒன்றுமே இல்லா எலிப்பொறிக்குள் போய், ஏதோ கம்பியை தெரியாத்தனமாக இழுத்து மாட்டிக் கொண்டது அந்த பொல்லாத எலி! அதிரசத்துக்கு, வடைக்கு, முறுக்குக்கு மாட்டாத அந்த எலி, இப்போது சும்மாவே மாட்டிக் கொண்டது அதன் விதி தான் போலிருக்கு!

ஆச்சரியத்துடன் எழுந்து எலிப்பொறியையும் அதன் உள்ளேயிருந்த எலியையும் பார்த்த ராஜேந்திரனுக்கு மகிழ்ச்சி! அதற்குள் சத்தம் கேட்டு, ‘என்னங்க எலியா விழுந்திருச்சா?’ என்றபடி அவரது மனைவியும் வந்துவிட்டாள். அவரது மனைவி மட்டுமல்ல, பக்கத்து வீட்டு பூனையும் ராஜநடை போட்டு நடந்து கூடவே வந்தது!

பக்கத்து வீட்டு பூனை என்று தான் பெயர். அது அந்த தெருவுக்கே பொது! வீட்டுக்கு வீடு பாலும் பலகாரமும் சாப்பிட்டு அது நன்றாத கொழுத்திருந்தது!

பூனையை பார்த்ததும் நம்ம ராணுவ வீரருக்கு ஒரு ‘நல்ல’ யோசனைத் தோன்றியது. ‘எலிப்பொறியின் கதவை இப்போது திறந்தால் எலி துள்ளிக் குதித்து ஓடப் பாக்கும். அதற்குள் பூனையும் தாவி எலியை பிடித்துக் கொண்டு ஓடி விடும். அதற்கு சாப்பாட்டுக்கு சாப்பாடும் ஆச்சு! இதில் ஏதாவது கொஞ்சம் பாவம் இருந்தாலும் அது அந்த பூனையோடு போய்விடும்!

அடுத்த விநாடியே அவர் நினைத்தபடியே பூனைக்கு எதிரே எலிப்பொறியின் கதவைத் திறந்தார். திறந்த வேகத்தில் அந்த சுண்டெலி குபீரென்று துள்ளிக்குதித்து பாய்ந்து ஓடியது. வீட்டுக்கு வீடு நல்லா சாப்பிட்டு எலிபிடிக்கும் பழக்கத்தையே மறந்திருந்த அந்த பூனையோ, பயந்துபோய் ‘மியாவ்’ என்று அலறியபடி சுவர் ஓரத்திற்கு ஒடிப்போய் பதுங்கிக் கொண்டது!

பயத்தில் ‘ஐயோ எலிங்க!’’ என்று பாய்ந்து ராஜேந்திரனை அவரது மனைவி கட்டிக்கொண்டது தான் மிச்சம்!

போயே போய் விட்டது அந்த பொல்லாத எலி! இனி வராது என்று நினைத்த ராஜேந்திரனுக்கு அன்றிரவே வழக்கம்போல எலியின் ‘கரக்…கரக்… கென்று கொறிக்கும் சத்தம் கேட்டது. போச்சுடா மறுபடியும் அதே எலி வந்து விட்டது !

ராஜேந்திரனுக்கு சிப்பதா? அழுவதா? ஒன்றுமே புரிய வில்லை.

நீங்களாவது அந்த எலியை பிடிக்க அவருக்கு ஒரு நல்ல யோசனை ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *