செய்திகள் வாழ்வியல்

ராஜபாளையம் ஐயனார் கோவில்

ராஜபாளையம் நகரம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. இது மதுரையில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவிலும் சிவகாசியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள நகரமாக விளங்குகிறது. இந்த நகரத்தில் முக்கிய பிரமுகர்களாக தெலுங்கு பேசும் ராஜூக்கள் உள்ளனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என வரலாறு கூறுகிறது. இதனாலேயே இந்த நகரத்தின் பெயரும் ராஜபாளையம் என அழைக்கப்படுகிறது.

ராஜபாளையம் அருகில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் உள்ளது. இதை சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்றும் கூறுகின்றனர்.

வெள்ளை நிற அணில்கள் நிறைந்த இந்த மலையின் அடிவாரத்தில் செண்பக தோப்பு என்ற பகுதி உள்ளது. அங்கு வெள்ளை நிற அணில்கள் அதிகம் உள்ளதால் அரசாங்கம் அந்த அதிசய பிராணி வகைகளை பாதுகாக்க சரணாலயமாக இந்த பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் தான் நீர்காத்த அய்யனார் என்ற கோவிலும் இருக்கிறது.இதைப் பெருமையாக இந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர்.

இந்த மலையின் அடிவாரத்தில் பாலாறு மற்றும் நீராறு என்ற இரண்டு ஆறுகளும் சேரும் இடத்தில் காவல் தெய்வமாக இப்பகுதி மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள நீர்காத்த அய்யனார் அவரது துணைவியர்கள் பூர்ணா மற்றும் புஷ்கலா ஆகியோர் சகிதம் அருள்பாலிக்கிறார்.

இவரை வந்து வழிபட குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீரும் என்பதும் சுபிட்சம் பெருகும் என்பது ஐதீகம். மேலும் இந்த பகுதி மக்களின் காவல் தெய்வமாக கருதி இங்கு வந்து மனதார அனைவருக்கும் செழிப்படையவும் மன நிம்மதி பெறவும் தொழில் பெருகவும் பிரார்த்தனை செய்து பலன் பெறுகின்றனர்.

இந்தத் தலத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொடிமரம் செய்ய மரத்தை தேடி இங்கு வந்தனர். சின்ன ஓட்டக்காரன், பெரிய ஓட்டக்காரன் என்ற இருவர். அவர்கள் இந்த வனப்பகுதியில் உள்ள மரத்தை கண்டு அதை வெட்டி எடுக்க தீர்மானித்து அவர்களது துணையாக ஆட்களை வரவழைத்து மரத்தை வெட்டினர். வெட்டின இடத்திலிருந்து ரத்தமாக வந்தது. பதறியடித்து ஓடினர். இதை அறிந்த அய்யனார் இவர்களைப் பிடித்து வைத்தார். அவர்கள் இருவரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொடிமரத்திற்காகவே இந்த மரத்தை வெட்டினோம் என்று சொல்லித் தங்களை மன்னித்தருள வேண்டினார்.

அய்யனார் இருவரிடமும் தாங்கள் செய்த இந்த குற்றத்திற்காக கொடி மரத்தை மீனாட்சி அம்மன் கோவிலில் நாட்டிய பின்னர் இங்கு வந்து, தனக்குக் காவல் தெய்வங்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மதுரைக்கு அனுப்பினார்.

கொடிமரம் நட்டிய பிறகு, இருவரும் திரும்ப வேண்டும் என்று கூறியதற்கு மீனாட்சி போக அனுமதிக்காததால் கோபம் கொண்ட அய்யனார் மதுரை மக்கள் அனைவருக்கும் ஒரு சேர நோய் வரும்படி செய்து விட்டார்.

மீனாட்சி அம்மன் வேறு வழியின்றி இருவரையும் அய்யனாரிடம் அனுப்பி அவருக்கு காவல் தெய்வமாகவே இருங்கள் என்று ஆணையிட்டார். மேலும் நான்கு வருடம் ஒரு முறை மாலையுடன் வந்து வழிபட்டு வருவேன் என்றாராம். இன்றும் இந்த இருவரும் அய்யனாருக்கு காவல் தெய்வங்களாக இருக்கின்றனர்.

ஒருமுறை கேரள பந்தள தேசத்து அரசன் இந்தப் பகுதியை ஆக்கிரமித்து அப்பொழுது இந்த பகுதியை ஆண்டு வந்த பராக்கிரம பாண்டியனுக்கு சவால் விடுத்தான். எனவே பராக்கிரம பாண்டியன் தன் படைகளைத் திரட்டி இங்கு வந்து அய்யனாரை வணங்கிப் போரிட்டு கேரள மன்னனை விரட்டியடித்தான். திரும்பும் வழியில் திடீரென ஆற்றில் வெள்ளம் வந்து பெருக்கெடுத்தது. பாண்டியன், அய்யனாரை வேண்டியவுடன் ஒரு பெரிய மரத்தை விழச் செய்து அதை ஒரு பாலமாக்கி அந்த கரையில் இருந்த பாண்டிய மன்னன் படைகள், மரத்தை பாலம் போன்று ஏறி நடந்து வந்தனர். இந்த அருளினை செய்ததால் அய்யனார் நீர்காத்த அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு இந்தத் தலத்தில் அய்யனாருடன் வனலிங்கப் பெருமான் லட்சுமி, வனபேச்சியம்மன், சப்த கன்னியர், கருப்பசாமி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும் கோவில் திறந்து பூஜைகள் நடைபெறுகின்றன. பிரார்த்தனை செய்து பலன் பெற்றவர், அபிஷேகம் செய்து அன்னதானம் செய்கின்றனர்.

அருள்மிகு நீர்காத்த அய்யனார் திருக்கோவில், ராஜபாளையம் 626 117 விருதுநகர் மாவட்டம்

ஓம் அருள்தரும் ஆலயம் காத்திடும்

நீர்காத்த அய்யனார் அடி போற்றி

வேரோடு வினைகளை அகற்றி

வெற்றியே தந்திடுவாய் அய்யனாரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *