சிறுகதை

மழைச்சாலை | ராஜா செல்லமுத்து

Spread the love

இரவு எட்டுமணிக்கு முன்பதிவென்று ஓட்டமும் நடையுமாய்க் கிளம்பினான் சதீஷ். அவன் வரும் வரை அமைதியாக இருந்த வானம் அவன் தார்ச்சாலையில் இறங்கியதும் கொஞ்சம் சதிராட்டம் ஆடியது.

‘‘டம்.. டம்..’’ என மோதிக்கொண்டன பனிமலை மேகங்கள்.

‘‘பளிச்..பளிச்.. என வெட்டின மின்னல் கீற்றுகள்

‘‘உஷ்.. உஷ்.. என்று உரக்க வீசியது புயல்காற்று. சாலையோர மரங்கள் தன் தலையைத் தரையில் தொடுமளவிற்கு கீழே சாய்த்து பின் மேலே எழுந்தது. சாலை வாசிகள் உயிரைக் கையில் பிடித்தபடியே வேகு வேகுவென ஓடினர்.

சீக்கிரம் பரபரப்பானது சாலைகளில் இறக்கை கட்டிப்பறந்தன வாகனங்கள். சதீஷின் சட்டையில் விழுந்த மழைத்துளி பட்டன அவனின் உடல் சில்லிட்டது.

‘‘ஐயோ.. இன்னும் கொஞ்ச நேரத்தில மழை பின்னி எடுக்குமோ..? நினைப்பிலே மழை கொட்ட ஆரம்பித்தது ஓடினான் ஒடினான் நீர்ச்சாலையாக மாறிக்கொண்டிருக்கும் தார்ச்சாலையில் தடம்பதித்து ஓடினான். அருகிலிருந்த பேருந்து நிழற்குடையில் ஏற்கனைவே ஆட்கள் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தனர்.

‘‘ஆகா.. என்ன.. இது இங்கயும் இவ்வளவு கூட்டமா இருக்கே. ஓடிப்போய் ஓர் ஓரம் ஒதுங்கினான். அவன் அப்படி ஒதுங்கும் போதே கொஞ்சம் தள்ளிப்போங்க. அவன் பின்னாலயே சிலர் பிரசங்கம் செய்தபடியே வந்து கொண்டிருந்தனர்.

‘‘ஏங்க.. எடமிருந்தா போகமாட்டனா..? எவ்வளவு கூட்டமா இருக்காங்கன்னு பாருங்க..’’ என்ற சதீஷ் ஒரு பெண்ணின் ஓரம் நிற்க அவள் அவனை முறைத்துப்பார்த்தாள்.

‘‘நான் என்னங்க பண்ணுவேன். என்னைய நெருக்கிட்டு வாராங்க’’ என்று அவன் பாவமாய்ச் சொன்னபோது அதுக்காக என்னைய உரசிட்டு தான் நிக்கணுமா..? போயா தள்ளி அவளின் பேச்சு அவன்மேல் தீயை அள்ளிக்கொட்டியது.

சோ..வெனப் பெய்தபடி இரண்டு பக்கமும் படபடவெனத் தாக்கிக் கொண்டிருந்தது கடும் மழை. நின்றிருந்த ஆட்கள் ஒரே பக்கம் நெருங்கி வந்ததால் கூட்டம் திமிறியது. அதற்குள் அவன் செல்ல வேண்டிய பேருந்தும் வந்து சேர்ந்தது இறங்க வேண்டிய இடத்தில் கடும் மழை பெய்ததால் இறங்கலாமா..? வேண்டாமா..? என்ற பட்டிமன்றத்தில் சிலர் தடுமாறிபடியே இறங்கினர்.

நனைந்து கொண்டே நிற்பவர்கள் சீக்கிரமே பஸ் ஏற வேண்டமென நினைத்து நின்றிருந்தவர்களை ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே ரொம்பவே சாதாரணமாக இறங்கினர்.

‘‘யோவ் சீக்கிரம் இறங்குங்கய்யா.. நனைஞ்சிட்டு நிக்கிறோம். சீக்கிரமா எறங்காம இப்பிடி நின்னு நிதானிச்சு எறங்கிட்டு இருக்கீங்க..’’ என்று சதீஷ் எகிற

‘‘நீ.. நனைஞ்சிட்டு இருக்கங்கிறதுக்காக நாங்களும் நனையணுமா..? என்று ஒருவர் சொல்ல அப்பிடின்னா மழ விடுறவரைக்கும் பஸ்ஸ விட்டே எறங்காதே டிக்கட் எடுத்திட்டு சுத்திட்டே இரு’’ என்று ஒருவர் சொல்ல

தலையில் துப்பட்டா துணியைப் போட்டுக்கிட்டு சிலர் இறங்கினர் , சிலர் இறங்கி ஓடினர். மழை சதிராட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

சதீஷ் சத சதவென நனைந்தபடியே பேருந்தின் ஓரம்போய் ஏறி நின்றான்.

8 மணி முன்பதிவு அவன் கண்ணை உறுத்த கடிகாரம் பார்த்தான் ‘‘இப்ப ஆறு மணிதானே ஆகுது. இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு. அரைமணிநேரத்தில வீட்டுக்கு போயிரலாம். போய் நல்லா குளிச்சிட்டு மறுபடியும் கிளம்பலாம்’’ என்ற எண்ணத்தில் ஓர் ஓரம் நின்றிருந்தவனின் மனதின் ஓரம் ஏதோ உறுத்தியது.

‘‘என்ன ஒரு வண்டி கூட நகரலயே’’ தூரம் பார்த்தவனின் கண்ணில் நெசவு நெய்தது போல நின்றிருந்தன வாகனங்கள் கூடவே விடாத கன மழைவேறு.

‘‘ஆகா என்ன இது! ஒரு வண்டி கூட நகரலியே சிக்னல் பார்த்தான். அது ஒரு நிறம் கூட காட்டாத நிலையில் இருந்தது. இதைச்சாதகமாகப் பயன்படுத்திய வாகன ஓட்டிகள் அவரவர்களின் இஷ்டத்திற்கு நுழைந்து தார்ச்சாலையை நிறைத்து நின்றனர்.

‘‘ஒழுங்கா சிக்னல் இருந்தாலே இவனுக சரியா..போக மாட்டானுக இப்ப இப்பிடி வேறயா..? என்ன செய்யப்போறானுகளோ..? என்ற யோசனையில் நின்ற போது

‘‘டுர்..டுர்.. என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்த சதீஷ் ஏறிய பஸ் இப்போது ‘‘புஷ்’’ எனச் சுருங்க அப்படியே நின்றது .

‘‘சல்..சல்.. என மழை பெய்து கொண்டிருந்ததால் இரண்டு பக்க ஜன்னல்களையெல்லாம் ‘‘பட்..பட்..டென ஆட்கள் அடைத்தபோது பெருந்து முழுவதும் புழுக்கம் குடிகொண்டது. ஈர ஆடையில் ஒரு விதமான துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. எல்லாரும் மூக்கைப் பிடித்துக்கொண்டு மூச்சை பிடித்தனர்.

‘‘பஸ் ஓடுனா கூட இந்த வீச்சம் தெரியாத இப்பிடியே நின்னுட்டு இருந்தா அவ்வளவு தான் மூக்குல கெட்ட நாத்தம் ஏறி சாக வேண்டியது தான்’’ சிலர் இப்படி முணுமுணுக்க ஏய்யா போவீங்களா மாட்டீங்களா..? இப்பிடியே பேசாம நின்னுட்டு இருந்தா எப்பிடி..? ஹாரன் அடிச்சிட்டு போக வேண்டியது தானே உங்களுக்கு வேற வேலை இல்லன்னா எங்களுக்கு வேற வேலை இருக்குய்யா..’’ என்று பேருந்தில் இருந்த சிலர் முணுக்க

‘‘யோவ் கார் பைக் எல்லாம் சைடு வாங்க போயிட்டு இருக்கு. நீங்க ஹாரன் அடிச்சிட்டு போக வேண்டியது தானே. இவருக்கு பஸ் ஓட்டத்தெரியுமா? தெரியாதா? ஹலோ ஹாரன் அடிச்சிட்டு ஒதுங்கிப்போங்க’’ பேருந்திலிருந்த பயணிகளின் கூச்சல் மேலிட இது எதையும் சட்டை செய்யாமல் உட்கார்ந்திருந்தான் கண்டக்டர் . ‘‘இவரு பாருங்க நடக்கிறத என்ன ஏதுன்னு கூட கேக்காம தூங்கிட்டு இருக்கிறார்’’ என்று ஒருவர் சொல்ல அதற்கும் அவன் பதில் சொல்லவே இல்லை.

‘‘ஏய்யா.. இந்த ஊர்ல இருக்கிற ஆளுகளுக்கு வெக்கம், மானம் ,சூடு, சொரனை எதுவுமே இருக்காதா..? கண்டக்டரையும் டிரைவரையும் இந்த கிழி கிழிச்சிட்டு இருக்காங்க. ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கிறானுக’’ என்று சதீஷ் சொல்லிக்கொண்டே தன் கடிகாரம் பார்த்தான்.

மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.

‘‘என்ன இது ஏழு மணியா..? இங்கயே எட்டு மணியாக்கிப்புடுவானுக போல’’ என்ற சதீஷ் தார்ச்சாலையைப் பார்த்தான். அது அத்தனையும் நீர்ச்சாலையாய் மாறியிருந்தது. நடத்துனரும் ஓட்டுநனரும் பஸ்ஸை நிறுத்திவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனர். சிக்னல் இல்லாததால் வண்டிகள் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருந்தன.

சில இடங்களில் அப்படியே ஜாம் ஆகியிருந்தது.

ஏழு.. ஏழரை.. எட்டு .. என்று நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது சதீஷ் ஏறிய பேருந்து. நின்ற இடத்தைவிட்டு நகரவே இல்லை.

‘‘இதே எங்க ஊரா இருந்தா! கண்டக்டர் எறங்கி போயி ரூட்ட கிளியர் பண்ணுவாரு. இங்க என்னடான்னா எனக்கென்னான்னு தூங்குறாரு பாரு’’ என்று ஒருவர் சொல்ல அதையும் லேசாக் கண்களைத் திறந்து பார்த்து விட்டு எதுவும் பேசாமல் மறுபடியும் கண்களை மூடினார் கண்டக்டர்.

இதைக்கேட்டு ‘‘கொள்’’ எனச் சிரித்தது பேருந்து.

சதீஷ் எட்டுமணி முன்பதிவு பேருந்திலேயே கரைந்தது அதுவரையில் நங்கூரம் அடித்தது போல நின்றிருந்த பேருந்து மேல்ல மேல்ல நகர ஆரம்பித்தது.

நீரால் நிறைந்திருந்த தார்ச்சாலையை உற்று நோக்கினான் சதீஷ்.

நகரும் பேருந்து அவனுக்கு கடலில் போகும் கப்பலாகத்தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *