செய்திகள்

வீடுகளில் நாளை இரவு 8 மணிக்கு 10 நிமிடம் விளக்கு அணைத்து போராட்டம்: எஸ்.ஆர்.எம்.யூ என். கண்ணையா அறிவிப்பு

ரெயில்வே தனியார் மயமாக்குவதை எதிர்த்து

வீடுகளில் நாளை இரவு 8 மணிக்கு 10 நிமிடம் விளக்கு அணைத்து போராட்டம்:

எஸ்.ஆர்.எம்.யூ என். கண்ணையா அறிவிப்பு

சென்னை, செப். 18–

இந்திய ரெயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை முறியடிக்க பொது மக்கள் நாளை (19ந் தேதி) இரவு 8 மணி முதல் 8.10 மணி வரை அனைவரது இல்லங்களிலும் மின் விளக்குகளை அணைத்து ஆதரவு தாரீர் என தென் ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொது செயலாளர் என்.கண்ணையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லாபமாக செயல்படும் இந்திய ரெயில்வேயில் பதினான்கு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இது தவிர தற்காலிக, காண்ட்ராக்ட் ஊழிர்களாக சுமார் நான்கு லட்சம் பேரும் ரெயில்வே துறையை நம்பி ரெயில்வே நிலையங்கள், பணி மனைகளை சுற்றிலும் சிறு தொழிற்சாலைகள், கடைகள் என ஏறத்தாழ, 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களும்… இப்படி சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரமாக இந்தய ரெயில்வே செயல்படுகிறது என என்.கண்ணையா தெரிவித்தார்.

இந்திய ரெயில்வேயில் ஒவ்வொரு நாளும் சுமார் 2.3 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். அவர்களில் சுமார் 1.3 கோடிக்கும் மேற்பட்டோர் சென்னை, மும்பை, கொல்கத்தா, செகந்திராபாத் போன்ற மாநகரங்களில் புறநகர் மின்சார ரெயில்களில் வெகு மலிவான கட்டணத்தில் பயணித்து வருகின்றனர்.

சாதாரண ரெயில்களாகட்டும், நீண்ட தூர விரைவு ரெயில்களாகட்டும், இந்திய ரெயில்வே தனது டிக்கெட் கட்டணத்தில் 53% மானியமாக கொடுத்து அதாவது ரூ.100 டிக்கெட்டுக்கு வெறும் ரூ.47 வசூலித்து வருகிறது. அதிலும் கூட, மாணவர்களுக்கு 50 % சலுகை, மூத்த குடிமக்களுக்கு 30% பார்வை இழந்தோர், புற்று நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், ஜனாதிபதி பதக்கம் பெற்றவர்களுக்கு கட்டண சலுகைகளை ரெயில்வே வழங்குகிறது. இந்த சலுகைகள் முழுவதும் ரத்தாக வாய்ப்புள்ளது.

எனவே பொது மக்கள் நாளை வீடுகளில் இரவு 8 மணிக்கு 10 நிமிடம் விளக்குகளை அணைத்து நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று என்.கண்ணையா கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *