கொரோனா தடுப்பூசி இம்மாதமே அதிகாரப்பூர்வமாக வழங்க சில பன்னாட்டு நிறுவனங்கள் தயாராகிவிட்ட நிலையில் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களுக்கும் சென்றடைய என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விக்கு விடை தேடும் நேரம் நெருங்கிவிட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரஷியா, சீனா, அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது நமது ஜனத்தொகைக்கு தேவையான அளவு பெற பல்வேறு ஏற்பாடுகள் செய்து இருப்பது புரிகிறது. அதைக் கடந்த வார இறுதியில் பிரதமர் மோடி நடத்திய அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் சுட்டிக் காட்டியும் உள்ளார்.
உலக அளவில் 161 தடுப்பூசிகள் ஆய்வின் பல்வேறு கட்டங்களில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் கூறியுள்ளது. அதில் 55 தடுப்பூசிகள் மனித சோதனைக்கு உட்பட்டு ஓரளவு சாதகமான மருந்தாக இருக்கலாம் என்ற கட்டத்தை நெருங்கி விட்டது. அதில் இரண்டு இந்திய நிறுவனங்களின் ஆய்வு கூட்டத்தில் வடிவமைக்கப்பட்டது என்பது நமக்கெல்லாம் பெருமை தருகிறது.
பிரதமர் மோடியும் இந்நிறுவனங்களின் வெற்றியைத் துரிதப்படுத்த சென்ற வாரம் நேரில் சென்று அதிகாரப்பூர்வ அரசு முறை ஆய்வுகளையும் நடத்தியுள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளிடம் பேசிய நமது தரப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளிடம் நாம் நமது பிரஜைகளின் நலன் காக்க கூட்டாக முயற்சி செய்வோம்; ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வோம் என்று கேட்டுள்ளனர்.
சர்வதேச அரங்கில் உலக சுகாதார நிறுவனம் ஒரு மருந்தை சரியானது என ஒப்புதல் தர முடியும். ஆனால் கட்டுபடியாகும் மலிவு விலையில் தான் விற்க வேண்டும் என்ற உத்தரவிட முடியாது!
உலக வங்கியிடம் பின் தங்கிய பொருளாதார நாடுகளுக்கு தங்களது நிதி உதவியை தர கேட்டுக் கொள்ளலாம். இந்த கட்டத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் தடுப்பூசிகள் கட்டுபடியாகும் விலையில் கிடைக்குமா? என்ற பெரும் கேள்வி அரசுகளுக்கு அச்சம் தரும் வகையில் பூதாகரமாக முன் நிற்கிறது.
கொரோனா கிருமி பாதிப்பை கண்டறிய மிகக் குறைந்த விலையே ரூ. 3000 என்று இருந்ததை சாமானிய தினக்கூலி தொழிலாளியால் சமாளிக்க முடியாது திணறியதை கண்டோம்.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில்

தமிழக அரசு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோரது முழு கவனத்துடன் நடைபெற்ற பல்வேறு திட்டங்கள், அதை படுலாவகமாக செயல்படுத்திய முறையால் தமிழகம் பாதுகாப்பாகவே இருந்தது. பெருவாரியான ஏழை எளியோருக்கு இலவசமாகவே வீடு சென்றும் சோதிக்கப்பட்டார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழக மக்களின் நலன் காக்க கேடயமாகவே இருந்தனர். ஆரோக்கியமாக வாழ பல்வேறு திட்டங்களை மேற்கொண்டனர்.
குறிப்பாக ஜெயலலிதா கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டம், போஷாக்கான குழந்தை திட்டம், சத்துணவு திட்டம், கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் நலன் காக்க இலவசமாக பரிசோதனைகள், சத்து மாத்திரைகள் தந்து, ஊட்டச் சத்து குறைவுகளின்றி சுகப்பிரசவம் உறுதி செய்தார்.
அவர் வழியில் இன்றும் அண்ணா தி.மு.க. அரசு கொரோனா தொற்றை மிக சிறப்பாகவே கையாண்டு மக்களின் நலன் காத்தனர்; கொரோனா தொற்றின் பிடியில் இருந்து தமிழகத்தை காப்பாற்றினார்கள் என்பதை நாடே அறியும்.
பைசர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கொரோனா தடுப்பு ஊசியை இங்கிலாந்து அரசு அடுத்த 10 நாட்களில் மக்களுக்கு தர அனுமதி தந்து விட்டது. இது அந்நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் நற்செய்தியாகும்!
அதே மருந்தை இந்தியாவில் கொண்டு வரும் நாளில் விலை என்னவாக இருக்கும்? இந்த அச்சத்தை தமிழகமும் எதிர்நோக்கியே இருக்கிறது.

கட்டுப்படியாகும் விலையிலும் இலவசமாகவும் விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தருவார் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு இருக்கிறது, பொங்கல் பரிசாக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக வர இருக்கும் பொங்கல் இனிய பொங்கலாக மகிழ்ச்சி பொங்க கொண்டாட அண்ணா தி.மு.க. அரசு உறுதி செய்யும் என்று தமிழகம் எதிர்பார்ப்பது தற்போதைய அரசு மீது இருக்கும் முழு நம்பிக்கை இருப்பதால் தான்.
மக்கள் நலன் காக்கும் அண்ணா தி.மு.க. அரசு தர இருக்கும் பொங்கல் பரிசு மக்களை மகிழ்விக்கும் .
அந்த இனிய நாளுக்காகக் காத்திருப்போம்.