நாடும் நடப்பும்

தடுப்பூசி பெற பிரதமர் மோடி அழைப்பு

நாடெங்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பெரும் தொற்றுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று காலையே பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பிரபல ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் தடுப்பூசியை போட்டுக் கொண்டு விட்டார். அதன் 2–வது முறையாக தரப்படவேண்டிய தடுப்பு மருந்தை அடுத்த 28 நாட்களுக்குப் பிறகே போட்டுக் கொள்வார்.

அவருக்கு ஊசியை செலுத்தியது பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த நிவேதா சிஸ்டர் என்பவர் ஆவார்.

காலையில் மருத்துவமனைக்கு வந்து பிறகு தான் எல்லோரும் பிரதமர் மோடியின் வருகைக்கு காத்திருப்பது புரிந்தது.

சில நிமிடங்களில் அங்கு வந்த பிரதமர் மோடி மிக மகிழ்ச்சியுடன் தன்னோடு பேசிக் கொண்டிருந்ததாகவும், தன்னைப் பற்றிய தகவல்களை கேட்டுக்கொண்டே ஊசியை போட்டுக் கொண்டார் என்றும் விவரித்தார்.

ஊசியை போட்டுக் கொண்டபோது ‘முடிந்து விட்டது’ என்று கூறியவுடன் ‘அதுக்குள்ள குத்தி முடித்து விட்டீர்களா அவ்வளவு தானா? என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம்!

இப்படி சர்வ சாதாரணமாக தன்னுடன் உரையாடியதில் மெய் மறந்து நிவேதாவும் உங்களின் திறமைகள் எங்களுக்கு ஆச்சரியத்தை தருகிறது என்று பாராட்டியதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் நாட்டு மக்கள் புதிய வேகத்துடன் தடுப்பூசியை போட்டுக் கொள்ள தயாராகி விட்டனர்.

நேற்று முதல் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள மத்திய அரசின் Cowin அல்லது ஆரோக்கிய சேது வலைதளங்களில் சுயமாக பதிவு செய்து கொள்ளலாம்.

இப்படி பதிவு செய்து கொண்டால் சில நாட்களில் எங்கும் போட்டுக்கொள்ளலாம்!

தமிழகத்தில் ஜனவரி 17 முதலே மருத்துவர்கள் மற்றும் களப்பணிகளில் ஈடுபட்டவர்கள் அதாவது, கோவிட் நோயாளிகளின் அருகாமையில் பணியாற்றியவர்கள் தடுப்பூசியை பெற்றனர்.

அடுத்தக் கட்டத்தில் அரசு அதிகாரிகள் பெற்றனர்.

இம்மாத துவக்கத்திலிருந்தே 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி பெறலாம் என்றும் மூத்த குடிமக்கள் மற்றும் 45 முதல் 59 வயது வரையுள்ளோர்களால் ரத்த அழுத்த நோயும், சர்க்கரை நோயும் இணை நோயாக கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும்போது 27 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

இம்முறை தடுப்பூசியை பெற Cowin அல்லது ஆரோக்கிய சேது செயலி வழியாக பதிவு செய்து கொண்டு தடுப்பூசியை பெற முடியும். இது இலவசமாகும்!

ஆனால் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக பெற ரூ.250 செலுத்தியும் பெற முடியும்.

இலவசமாக போட்டுக் கொள்ள பதிவு செய்பவர்கள் ஒரு குடும்பத்தில் நால்வருக்கு மட்டுமே இலவசமாகும்.

வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பவர்கள் போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுவது சரிதான்.

வெளிநாடுகளில் பயணிக்க தடுப்பூசியை போட்டுக் கொண்ட பிறகு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டாவது முறையாக போட்டுக் கொள்ள 28 நாட்கள் அவகாசம் இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட ஒரு மாத சிகிச்சை நாட்களுக்குப் பிறகே பயணிக்க முடியும்!

இணையத்தில் பதிவு செய்பவர்கள் உரிய தகவல்களை பதிவு செய்துவிட்ட பிறகு ஆதார் அட்டை, பான்கார்டு, வாக்காளர் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையையும் பயன்படுத்தியாக வேண்டும்.

முதல் முறையாக போட்டுக் கொண்டவர்கள் விண்ணப்பிக்குபோதே இரண்டாவது முறையாக போட்டுக் கொள்ள வசதி இருக்கிறது. ஆகவே மீண்டும் பதிய தேவையில்லை.

28 நாட்கள் முதல் 42 நாட்களில் இரண்டாவது முறை கட்டாயம் போட்டுக் கொண்டே ஆக வேண்டும்.

கொரோனா நோயால் பாதிப்படைந்தவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ள வேண்டியது தேவையற்றது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆக தேவையின் அடிப்படையில் பின்னர் போட்டுக் கொள்ளலாம். ஆனால் போட்டுக் கொள்வது கட்டாயம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

எந்த இணை நோய் இருப்பவர்கள் தடுப்பூசி பெறலாம் என்று 20 நோய்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் இதய நோய் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு, இதய நோய்கள் உள்ளவர்கள் ஆகியன உள்ளவர்கள் இணை நோய்கள் உடையவர்களாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ரத்தப் புற்று நோய் உள்ளவர்கள், நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் உள்ளவர்கள், ஜூலை 1, 2020-க்கு பிறகு உடலில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவர்கள், தற்போது புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள், ஹெச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள், பெருந் தலசச்சோகை, எலும்பு மச்சை பாதிப்பு உள்ளவர்கள் உள்ளிட்ட இணை நோய்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.

தசை வலுவிழப்பு, அதீத உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் உள்ளவர்கள், மூச்சு விடுவதில் சிக்கல் உள்ள ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரும் இணை நோய் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *