செய்திகள்

திட்டமிட்டப்படி மே 3–ந்தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும்

* கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை

* பள்ளி தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை

திட்டமிட்டப்படி மே 3–ந்தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும்

தேர்வுத்துறை தகவல்

சென்னை, மார்ச் 4–

தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறுகிறது. இதனால் மே 3–ந்தேதி 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ம் தேதி தொடங்கும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

அதன் பின்னர், கொரோனா தொற்று குறைய துவங்கியவுடன் கடந்த ஜனவரி மாதம் 19ந் தேதி பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 8ந்தேதி 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கின. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ–மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. கடந்த 17–ந்தேதி அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ்–2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் பிளஸ்–2 பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. அதே மாதம் 21ந்தேதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெறுகிறது. இதனால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3–ந்தேதி தேதி தொடங்குமாக என கேள்விகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3–ந்தேதி தொடங்கும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பள்ளிகளில் தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை. வாக்கு எண்ணிக்கை பணியில் ஆசிரியர்கள் பங்கும் பெரிய அளவில் இல்லை. பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களிலும் பிரச்சினை இல்லை. இதனால் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3–ந்தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்–2 பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்.

ஏற்கனவே கல்வித்துறை தெரிவித்து இருந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. பொதுத்தேர்வு நடைபெறும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *