நாடும் நடப்பும்

ஏழைகள் வளர்ச்சியில் ‘பாச மகன்’ பழனிசாமி

ஏழை குடும்பங்கள் உயர அவர்கள் வாழ்வில் வசந்தம் என்றும் வீச, காமராஜர் எடுத்த ஆயுதம் கல்வித் துறையாகும். அதன் சிறப்பை உணர்த்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடத்திய புரட்சிகள் உலகமே பாராட்டுபவையாகும்!

அந்த வழியில் தற்போது தமிழகம் மருத்துவ படிப்பில் முன்மாதிரியாக இருக்கிறது. அதை மேலும் வலுவாக்கி ஏழை மாணவர்களும், பின்தங்கிய கிராமங்களும் பயன் பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து அதை அறிவுபூர்வமாக அரசாணையாக அறிவித்தும் அதை கால விரயம் செய்து தள்ளிப் போடாமல் அரசியல் நெருக்கடிகளை எல்லாம் படு லாவகமாக சமாளித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% விசேஷ உள் ஒதுக்கீடு பெற்று தந்ததால் மக்கள் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்கிறார் என்பதை நிரூபித்து விட்டார்.

பழனிசாமியின் லட்சியம் கிராம விவசாயிகள் நலன், ஏழை வீட்டு பிள்ளைகள் ஆற்றல் மிகு வல்லவர்களாக உயர்த்துவது என்பதை நாட்டிற்கே தெரியப்படுத்தி விட்டார்! நேற்யை மருத்துவ படிப்பு ரேங்க் பட்டியல் வெளியீடு வரலாற்று சிறப்பு மிக்கது. அதன் சிற்பி எடப்பாடி பழனிசாமியை பாராட்டியே ஆக வேண்டும்.

காரணம், ‘பாச மகன்’ பழனிசாமியின் ஆட்சியிலே ஏழைகளுக்கு இது புது விடியல்…

காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்த கல்வி புரட்சி

தமிழகத்தின் தலைசிறந்த தலைவராக தேசமே அங்கீகரித்த தலைவர் காமராஜர் அப்படி ஒரு சிறப்பை பெறக் காரணம் என்ன? அவரது ஆட்சித் திறன், ஏழை சாமானியன் உயர, அவர் வகுத்த திட்டங்கள் என்பதை அறிவோம். மக்கள் நலனே அவரது உயிர் மூச்சு, தேச நலனே அவரது இதயத் துடிப்பு.

காமராஜர் ஏற்படுத்திய கல்வி அடித்தளம் இன்றும் என்றும் தமிழகத்தின் பலமாகும். அவர் வழியில் தொடர்ந்து வந்த தலைவர்கள் பல்வேறு சாதனைகளை செய்து தமிழகத்திற்கு சிறப்பு சேர்த்தாலும் என்றும் பாராட்டப்படுவது எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவுத் திட்டமாகும். பள்ளிக்கு மாணவர்கள் வந்து படிக்க வசதியில்லாத பின்தங்கிய கிராமங்கள் அதிகமாக இருந்த தமிழகத்தில் பெற்றோருக்கு உதவியாக தினக்கூலி வேலைக்குச் சென்றால் வயிறார சாப்பிட முடியும் என்ற அதிமுக்கிய காரணத்தால் பிள்ளைகள் படிக்க வருவதில்லை என்பதை தெரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். உடனே இலவச மதிய உணவுத் திட்டத்தை விரிவாக்கினார்.

பல்வேறு நிதி சிக்கல்களால் தவித்துக் கொண்டிருந்த மதிய உணவு திட்டத்தை தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக அறிவித்து அதை கட்டாய திட்டமாக மாற்றினார்.

எம்.ஜி.ஆரின் அந்த சீரிய திட்டத்தால் பள்ளிக்குச் சென்றால் ஒரு வேளை உணவு உறுதி என்பதால் பிஞ்சு கைகள் கல் உடைக்கவோ, செங்கல் அடுக்கவோ, களை எடுக்கவோ வேண்டாம், பள்ளிக்குச் சென்று புத்தகத்தைக் கையில் எடுத்தால் அறிவு வளரும் சமுதாயம் மலரும் என்பதை புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். கூடவே நல்ல சத்தான உணவு என்பதால் தங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்க உறுதி தருவதால் எம்.ஜி.ஆரை தங்களது இதயக் கோவிலில் தெய்வமாக வைத்து கும்பிட்டனர்.

அவர் வழியில் அரசியல் பாதையில் பின் தொடர்ந்த ஜெயலலிதா இலவச மதிய உணவை சத்தானதாக உயர்த்தினார். அதில் ஒரு முட்டை, கீரை, சத்தான காய்கறிகள் இருக்கும்படி கட்டாயமாக்கினார். அது மட்டுமா? எல்லோரும் தங்கள் பிள்ளைகள், ஆடம்பரமான பள்ளிகளில் சீருடை அணிந்து, பளபளக்கும் பள்ளி உபகரணங்களுடன் கண்டதால் தங்கள் பிள்ளைகளுக்கு அப்படி அனுப்பி பார்க்க முடியாத நிலையில் தவித்தபோது தாய் உள்ளத்துடன் புரட்சிகரமாக ஜெயலலிதா எல்லா பெண் மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கினார்.

அரசு பள்ளிகளில் படிக்கும் பால வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக சீருடைகள், காலணிகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், பளபளக்கும் ஸ்கூல் பேக், புதிதாக அச்சடித்து தரப்பட்ட பாடப்புத்தகங்கள், நோட்டு, பேனா என அனைத்தையும் பட்டியல் போட்டு இலவசமாகவே வழங்கினார்.

மேல்நிலை வகுப்புக்கு வந்து விட்ட நாளில் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினியும் தந்து உலகில் யாரும் செய்யாத புரட்சியை செய்தார்.

ஆக காமராஜர் பள்ளிகள் உருவாக்கினார், எம்.ஜி.ஆர். படிக்க வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். ஜெயலலிதாவோ அந்த மாணவச் செல்வங்களை ஆக்கப்பூர்வ அறிவு ஜீவிகளாக உயர்த்த வழி கண்டார்.

இந்தக் கல்விப் புரட்சிகள் தமிழகத்தின் விசேஷ சிறப்புகளாகும்! அவை யாவும் தமிழர்களுக்கு மதிப்பூட்டலுமாகும்.

அவர்கள் கொண்டு வந்த சாதனைகளின் பரிசாக தமிழகம் இன்று சாப்ட்வேர் துறையிலும் வாகனத் துறையிலும் ரசாயன துறையிலும் தோல் பதனிடுதல் மற்றும் பொருட்கள் செய்வதிலும் உலகமே பாராட்டும் வகையில் முன்மாதிரி மாநிலமாக பார்க்கப்படுகிறது.

பொறியியல் படிப்பில் தமிழகம் செய்து வரும் சாதனைகள் அபரீதமானவை, உலகப் புகழ் நிறுவனங்களில் எல்லா முடிவுகளையும் எடுக்கும் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் பெருவாரியானவர்கள் தமிழகத்தில் கல்வி பெற்றவர்கள் என்பது உலகறிந்த உண்மையாகும்!

இந்த வரிசையில் தமிழகம் மருத்துவத் துறையிலும் சாதித்துக் கொண்டு தான் இருக்கிறது. சென்னை நவீன மருத்துவத்தை மிக மலிவான செலவில் பெற தலைசிறந்த நகரம் என்று உலகெங்கும் இருந்து இங்கு வந்து மருத்துவ சிகிச்சைகள் பெற்று மகிழ்ச்சியோடு ஆரோக்கியமாக நாடு திரும்புபவர்கள் பாராட்டுவது அதிகரித்து வருகிறது.

ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மருத்துவ படிப்புக்கு பல்வேறு அளவுகோல்கள், வரையறைகள் இருப்பதால் தமிழக மாணவர்கள், தவிப்பதும் ஏக்கத்துடன் தங்களால் உயர் மருத்துவ படிப்பை பெற முடியாதா? என வருந்திய நிலையில் தற்போதைய அண்ணா தி.மு.க. அரசு எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் மீண்டும் ஓர் கல்விப் புரட்சியை செய்துள்ளது.

இம்முறை அப்புரட்சியை வடிவமைத்த சிற்பி தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகும்.

அண்ணா தி.மு.க. அரசின் சாதனை: தமிழகத்திற்கு புதிய பெருமை

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டணி பல நல்ல திட்டங்களை அறிவித்து சிறப்பாக ஆட்சி செய்து வருவதைப் பார்க்கிறோம்.

அவர்களது ஆட்சித் திறன் மீது ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாத பலர் இன்று வியந்து பாராட்டும் அளவிற்கு ஆட்சி செய்து வருகிறார்கள், பல தேசிய அமைப்புகள் பாராட்டி நற்சான்றிதழ்கள் தந்து வருவது நல்ல அங்கீகாரமாகும்.

நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ படிப்புக்கான ரேங்க் பட்டியலில் சாதாரண அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேருக்கும் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைத்திருப்பது எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த புரட்சியாகும். தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மூலம், 313 அரசு பள்ளி மாணவர்களுக்கு 313 சீட் கிடைத்திருக்கிறது.

மருத்துவ படிப்பு கவுன்சிலிங் நாளை 18–ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும்.

நீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 3 ஆயிரத்து 650 மருத்துவ இடங்களுக்கு 34 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது.

7.5 % இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடம் கிடைக்கும்.

அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் விவரம் (மதிப்பெண்கள் மற்றும் பள்ளிகளுடன்) வருமாறு:–

1. ஸ்ரீஜன் – 710 (இந்தியன் பப்ளிக் பள்ளி, ஈரோடு)

2.மோகன பிரபாகர் ரவிச்சந்திரன் –705 (பப்ளிக் பள்ளி, நாமக்கல்)

3.ஸ்வேதா –701 (சென்னை வேலம்மாள் வித்யாலயா, அயனம்பக்கம்)

எடப்பாடியின் புரட்சி திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு படிக்க 7.5% உள்ஒதுக்கீடு என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டம், வரலாற்று சிறப்பு மிக்க திட்டம். இந்த உள் ஒதுக்கீடு என்பது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதது. கிராமப்புற மாணவர்கள் சென்னையில் உள்ள புகழ் பெற்ற மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை முதலமைச்சர் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் தேனியைச் சேர்ந்த அரசு மாதிரிப் பள்ளி மாணவர் ஜீவித் குமார், நீட் தேர்வில் 664 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். கள்ளக்குறிச்சி அரசு உயர் நிலையப் பள்ளி மாணவர் அன்பரசன் 646 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி 620 மதிப்பெண்களுடன் மூன்றாடம் இடத்திலும் உள்ளனர். வேலூரைச் சேர்ந்த மாணவர் குணசேகரன் 562 மதிப்பெண் பெற்று நான்காம் இடத்திலும் ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த பூபதி 559 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். மொத்தம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 24,712. ஏற்றுக்கொள்ளப்பட்டது 23,707. இதில் மாணவர்கள் 8,765, மாணவிகள் 14,942. மாநில அரசுக் கல்வித் திட்டத்தின் மூலம் படித்த மாணவர்கள் 15,885. சிபிஎஸ்இ பாடதிட்டம் மூலம் படித்த மாணவர்கள் 7,366. ஐசிஎஸ்இ பாடத்திட்டம் மூலம் படித்தவர்கள் 285 மற்ற பாடதிட்டம் மூலம் படித்தவர்கள் 171 பேர். விண்ணப்பித்தவர்களில் நடப்பாண்டு மாணவர்கள் 9,596 பேர். கடந்த ஆண்டு மாணவர்கள் 14,111 பேர்.அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் அடிப்படையில் 972 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில் 951 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டை பொறுத்தவரை 14 ஆயிரத்து 511 விண்ணப்பம் பெறப்பட்டு 14 ஆயிரத்து 276 மனுக்கள் ஏற்கப்பட்டன. மொத்தம் எம்.பி.பி.எஸ். சீட்கள் 3 ஆயிரத்து 650 ஆகும். இதில் மாநில அரசின் கோட்டா 3,032 ஆகும். 7.5 % உள்ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 227 சீட் கிடைக்கும்.

சுயநிதி கல்லூரிகளில் மொத்த எம்.பி.பி.எஸ். சீட்கள் 2 ஆயிரத்து 100 ஆகும். இதில் மாநில அரசுக்கு ஒதுக்கீடு 1147 ஆகும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு அடிப்படையில் 86 இடங்கள் கிடைக்கும். பிடி.எஸ். படிப்பை பொறுத்தவரை அரசு மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 194. இதில் மாநில அரசுக்கு ஒதுக்கீடு 165 ஆகும். 7.5 % ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு 12 சீட் கிடைக்கும்.

தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் மொத்த இடம் 1760 ஆகும். 7.5 % உள்ஒதுக்கீட்டில் 80 சீட் கிடைக்கும்.

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 313 பேருக்கும், பி.டி.எஸ். படிப்புக்கு 92 பேருக்கும் என மொத்தம் 405 சீட்கள் கிடைக்கும்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனும் இந்த பட்டியலையும் ஒரு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையையும் அறிவித்தபோது தமிழக மக்கள் கண்ணீர் பெருக ஆனந்தத்துடன் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அவர்களது வாரிசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் எல்லா அமைச்சர்களும் இணைந்து செயல்படும் அரசு ஆட்சி முறையையும் வியந்து பாராட்டுகின்றனர்.

பள்ளிக் கல்வியில் சாதனை, பொறியியல் படிப்பிலும் சாதனை, இன்று மருத்துவ படிப்பிலும் சாதனை அதன் சிற்பி எடப்பாடி பழனிசாமி.

இந்த சாதனையால் பின்தங்கிய கிராமம் மாணவர்களும் மருத்துவ உலகம் வளர்ச்சிகளில் தங்களது கைவண்ணத்தை காட்ட வாய்ப்பை பெற்று விட்டனர்.

சபாஷ்! எடப்பாடி என நாடே போற்றுகிறது,

‘ மக்கள் குரலும் ‘ அவரது சாதனையை கைத்தட்டி பாராட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *