சிறுகதை

சொந்த வீடு | ராஜா செல்ல முத்து

Spread the love

கவிஞன் குருசாமி பாரதி.

எழுதி எழுதியே புத்தகங்களை குவித்தாலும் பணத்தைக் குவிக்காமல் இளைத்துப்போன ஏழை எழுத்தாளர் அவர்.

சென்னையில் குடியிருக்கச் சொந்த வீடில்லாமல் வாடகைப் பாக்கி அது இதுவென்று பணப் பிரச்சினையில் ஒவ்வொரு வீடாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது குருசாமி பாரதிக்கு.

எல்லாப் பக்கங்களிலும் வாடகை வீட்டில் குடியிருந்து குடியிருந்து இன்றும் இன்னொரு வீட்டிற்குப் பெட்டி படுக்கையுடன் பயணமானார் குருசாமி பாரதி. சாலை நெடுகிலும் வாகன நெசவு இடைவிடாமல் போகும் போக்கு வரத்து என்று போய்க்கொண்டிருக்கும் சாலையில் குருசாமி பாரதியின் வீட்டுப்பொருட்களும் ஒரு சின்ன மினிடோர் லாரியில் போய்க் கொண்டிருந்தது. அதன் பின்னே பாவமே உருவாய் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் குருசாமி பாரதியின் மனைவி எல்லம்மாளும் குழந்தைகளும்.

‘‘என்னய்யா.. இப்போ உனக்கு சந்தோசமா. பேனா, பேப்பர், எழுத்து, கதை, கவிதைன்னு எழுதி எழுதி என்னத்த கண்ட.. இப்பிடி ரோடு ரோடா.. வீடு தேடி அலைஞ்சதுதான் மிச்சம். ஏட்டுச்சுரக்கா.. கரிக்கு உதவாதுன்னு.. எவ்வளவோ சொல்லிப் பாத்தேன். இப்ப வரும், பெறகு வரும்னு சொல்லிச் சொல்லியே இதுவரைக்கும் எந்தப் பலனும் வந்த பாடில்லையே..! – பணம் சம்பாரிக்க அறிவு எதுக்குய்யா.. அறிவு இல்லாதவன் கூட இங்க பணம் சம்பாரிக்கலாம்.. – நீ.. என்னமோ பெரிய அறிவாளின்னு சொன்ன.. அப்பிடின்னா..! அந்த அறிவ வச்சு பணம் சம்பாரிச்சிருக்கலாமே.. -அது வேறய்யா -பணமிருந்தா முட்டாள் கூட இங்க அறிவாளி ஆகலாம் காசு இருக்கிறவன சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் கூடி நிக்கும் ஆனா..! நீ மட்டும் தனியா தானே நின்னுருக்க..எழுதுனா பணம் சம்பாரிக்கலாம்னு இப்பிடி ஒன்னையும் ஏமாத்தி எங்களையும் ஏமாத்திட்டயே..! என்று எல்லம்மாள் கண்ணீர் சிந்தினாள்.

“போதும் பேதைப் பெண்ணே.. -பெண்கள் குலத்துக் கண்ணீர் சிந்தினால் பூமி பொறுக்காது.. நிறுத்து உன் உக்கிரக் கண்ணீரை.. கொளுத்து ஏற்றத்தாழ்வுகளை..” என்று தார்ச்சாலையில் கவிதை பாடியவன் மீது இன்னமும் வசைபாட வேண்டும் போலிருந்தது எல்லம்மாளுக்கு

‘‘யோவ் நீ.. திருந்த மாட்டியா..? இயல்ப தொலச்சிட்டு இப்படி மாய ஒலகத்திலயே மன்றாடி.. மன்றாடி.. மண்ணா போயிட்டயே.. – அந்த பாரதிக்கு ஒரு செல்லம்மான்னா.. இந்த பாரதிக்கு ஒரு எல்லம்மாவா..? வேணாம் யா.. ஒன்னைய நம்பி மூணு உசுரு இருக்கோம் – இனிமே எழுதுறத விட்டுட்டுட்டு வேற எதாவது வேலைக்கு போய்யா.. இங்க பாத்தியா ரோட்டுல இவ்வளவு கார் வண்டி போகுதே – இதுல ஏதாவது ஒரு வண்டி நமக்கு இருக்கா? இவங்க எல்லாம் அறிவாளியா என்ன?’’ என்று குருசாமி பாரதியைக் குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டே கேள்வி கேட்க அந்த அக்னிப்பார்வை குருசாமி பாரதியைக் குடைந்தது.

‘‘இப்ப என்ன பண்ணனும்னு நினைக்கிற..?’’ என்று கவிதைத் தமிழை இறக்கி வைத்துவிட்டு இயல்புத் தமிழுக்கு இறங்கி வந்தார்.

‘‘இனிமே எழுத மாட்டேன்னு சொல்லு.. வேற ஏதாவது ஒரு வேலைக்கு போ.. காலம் ரொம்ப கொடுமையானது – இங்க இருக்கிற மனுசங்களும் கொடூரமானவங்க.. – நாம வாழப்போற இந்தச் சின்ன வாழ்க்கையில இவ்வளவு பெரிய போராட்டமா..? வேணாம்யா.. -எழுதுறத ஒனக்கு திருப்தி இருக்கலாம்..வீட்டுல இருக்கிற அடுப்புக்கு அரிசி வந்து சேராதுய்யா..’’ என்று சொன்னாள்.

‘‘ஆமாப்பா.. – அம்மா சொல்றது உண்மைதாம்பா.. அம்மாவும் நீயும் பசியா இருக்கலாம் .. நானும் தம்பியும் எவ்வளவு நாளைக்கு பசியா இருக்கிறதுப்பா-.. வேற வேலைக்குப்போப்பா..’’ – என்று குழந்தைகளும் அழும் குரலில் சொன்னார்கள்.

குருசாமி பாரதிக்குக் குமுறிக்கொண்டு வந்தது. வாய் விட்டே அழுதார்.

‘‘என்ன இது..காளியே.. சுடர்மிகும் அறிவோடு என்னைப்படைத்து விட்டு வீட்டுக்கு அரிசி இல்லாமல் ஆக்கிவிட்டாயோ.. உனையே நினைத்து நினைத்து எழுதிய எனக்கு இதுதான் தண்டனையா..? இனிமேல் நான் எழுதப் போவதில்லை – பணம் வரும் வேலைக்குப் போகப் போகிறேன் – என்னை நீ.. மன்னித்து விடு – ஆறுகளையும் மலைகளையும் பாடியிருக்கிறேன் – மனிதர்கள் செய்யும் மோசடிகளைச் சாடியிருக்கிறேன் – பூக்களில் பிறந்திருந்திருக்கிறேன் – வேர்களில் வாழ்ந்திருக்கிறேன் – என்னையே மறந்து எழுத்தாகவே இருந்திருக்கிறேன். இனி ஒருபோதும் நான் எழுதப் போவதில்லை காளி – இனி எழுதப்போவதில்லை..’’ என்று நடு ரோட்டில் அழுதார்.

‘‘பாவம்யா.. என்ன கஷ்டமோ..? இந்த ஆளுக்கு இப்பிடி அழுதிட்டு போயிட்டு இருக்காரு..’’ என்று சாலையில் போவோர் வருவோர் பேச அது எல்லம்மாளுக்கு என்னவோ போலானது.

‘‘பாத்தியா..? நீ கவிதைன்னு சொல்றது – மத்தவங்களுக்கு பைத்தியகாரத்தனமா இருக்குய்யா..இந்த மயக்கத்தில இருந்து வெளிய வந்தா தான் ஒன்னைய மனுசனா நினைப்பானுக.. – கவிதை எழுதுறவன விட அத புத்தகமா போட்டு விக்கிற வியாபாரிதான் நிறைய சம்பாதிக்கிறான் – புத்தகக்கடையாவது வையி பொழச்சுக்கலாம்.. – எழுதுனா இன்னும் ஏழையா தான் போவோம்..’’என்றாள் எல்லம்மா .

வாடகை வீடு தேடிப் போன ஒரு புதிய சின்ன வீட்டில் போய் நின்றது மினிடோர் லாரி. லாரிக்காரனுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு பின் சமாதானமானது – மினிடோர் லாரியிலிருந்து பொருட்களை விட புத்தகங்களே நிரம்பி வழிந்தது –

‘‘இங்க பாருங்க..நீங்க வீட்டுக்குள்ள வரும் போதே மினிடோர் லாரிக்காரன் கூட சண்ட போட்டிங்க.. – பொருள விட புத்தகங்க தான் நிறையா இருக்கு.. – எனக்கென்னமோ நீங்க சரியா வாடகை தர மாட்டிங்கன்னு நினைக்கிறேன் – அப்பிடி ஏதாவது பண்ணுனீங்கன்னா.. பெட்டி படுக்க புத்தகங்கள தூக்கி எறிஞ்சிருவேன்..’’ என்று வீட்டுக்காரன் உறுமினான்.

‘‘அப்பிடியெல்லாம் எதுவும் நடக்காதுங்க.. வாடகை குடுத்திருவோம்..’’ – என்று எல்லம்மாள் சொன்னாலும் அவமானம் அவளைப் பிடுங்கித் தின்றது.

‘‘பாத்தியா கவிஞரே.. – இது தான் உங்களோட மரியாதை.. உங்க எழுத்தோட மரியாதை..’’ – என்று எல்லம்மா சொல்ல – குருசாமி பாரதிக்கு கோபம் குமுறிக் கொண்டு வந்தது.-

“என்ன இது…மாயம் தான் உலகமா? பணம் தான் வாழ்க்கையா? பணத்தை உற்பத்தி செய்யாத இந்த எழுத்தை இனி நான் எழுதப் போவதில்லை – -காளியே – இனி எனை நீ கட்டாயப்படுத்தாதே. கவிதையால் வாழ முடியுமென்றால் என்னை எழுத வை..வார்த்தைகளால் அரிசி விளையும் என்றால் எனக்கு வார்த்தைகளைக் கொடு.. இந்த வெற்று வாழ்க்கையிலிருந்து எனக்கு விடுதலை கொடு..” என்று கண்ணீரோடு கவிதை பாடியபடியே எழுந்து வெளியே போனார் குருசாமி பாரதி. –

‘‘அப்பா.. மறுபடியும் கவிதை பாட ஆரம்பிச்சிட்டாரும்மா..’’ என்று குருசாமியின் குழந்தை சொல்ல – குருசாமி பாரதியை அடிக்க எல்லம்மா புதிய வாடகை வீட்டிற்குள்ளிருந்து வெளியே ஓடி வந்தாள்.

அப்போது அந்த இடத்திற்கு வந்து நின்ற காரில் இருந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கவிஞர் குருசாமி பாரதியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

வெளியே ஓடி வந்த தன் மனைவியைக் காட்டி ‘‘இவங்க என் மனைவி’’ என்றார் குருசாமி பாரதி .

எல்லம்மா கைகூப்பி நின்றாள்.

அவள் கைகளுக்குள் ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கட்டைத் திணித்த திரைப்பட தயாரிப்பாளர், ‘‘அம்மா உங்க வீட்டுக்காரர் எழுதிய ஒருகதையை திரைப்படமா எடுக்கப்போறேன் . அதுக்கு இது முன் பணம் . இன்னையிலேருந்து அவருக்கு என் கம்பனியிலே எழுத்தாளர் வேலை கொடுக்கிறேன். இப்பவே காரிலே கூட்டிட்டு போறேன்’’, என்றார்.

குருசாமி பாரதி காரில் ஏறினார். கார் புறப்பட்டுச் சென்றது.

கணவன் திறமையை நினைத்து பெருமைப்பட்ட எல்லம்மா மகிழ்ச்சியில் திகைத்து நின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *