சிறுகதை

ஒரே மகன் | ராஜா செல்லமுத்து

திருமண வயதைத்தொட்டு நிற்கிறவன் நாகராஜ் .

அம்மா அம்புஜத்திற்கு இவன் ஒத்த குழந்தை தான்.

எப்போது அவன் வெளியில் சென்றாலும் அவனுடன் அடிக்கடி பேசிப்பேசியே தொந்தரவு செய்வாள் அம்புஜம்.

அன்றும் அதே வேலையையே செய்தாள்.

‘‘அம்மா.. நான் ஒன்பது மணிக்கெல்லாம் வந்திருவேன்மா.. ஏன்..? இத்தனை தடவை போன் போட்டு என்னைத் தொந்தரவு பண்ற.. நானென்ன சின்னப்புள்ளையா என்ன..? வந்திருவேன்மா.. இனி மறுபடியும் எனக்கு போன் பண்ணாதே..! என்று அம்புஜத்தை கொஞ்சமாக எச்சரித்தான் நாகராஜ்.

‘‘டேய்.. எனக்கு நீ.. எப்பவுமே குழந்தை தான்.. ராத்திரி ஒன்பது மணிங்கிறதெல்லாம் அதிகம்டா.. ஒரு எட்டு எட்டரைக்கே வரப்பாரு..’’ என்று மறுபடியும் அம்புஜம் சொன்னாள்.

‘‘இப்பத்தானே ..சொன்னேன் திரும்புவம் ஆரம்பிச்சிட்டியா..?’’

‘‘கண்டிப்பா.. நான் ஒன்பது மணிக்கெல்லாம் வந்திருவேன்மா..’’ என்று நாகராஜ் சொன்னதை மறுத்தே பேசினாள் அம்புஜம்.

‘‘சரிம்மா.. போனை வையி..’’ என்று கொஞ்சம் சலிப்பாய் நாகராஜ் பேச அவன் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த நண்பர்கள்

‘‘ஏண்டா.. நாகராஜ் ஒனக்கு மாதிரி அம்மா.. எங்களுக்கு இல்லடா.. நாங்ககெல்லாம் எங்க போனாலும்.. எப்பிடி ஆனாலும் யாரும் கேக்குறதில்ல.. ஆனா.. நாகராஜோட அம்மா அப்பிடியில்ல.. அவன அவ்வளவு கவனமா பாத்துக்கிருவாங்க.. இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்..’’ என்று பிரபு சொன்னான்.

‘‘ம்ம்.. பிரபு.. ஒங்க வீட்டுல நீ.. எத்தனையாவது பையன்..’’

‘‘மூணாவது..’’

‘‘சங்கர்.. நீ.. எத்தனையாவது புள்ள உங்க வீட்டுல..?’’ என்று கமலேஷ் கேட்டான்.

‘‘நாலாவது..’’ என்று அங்கிருந்த நண்பர்கள் ஒருவருக்கொருவர் சொல்ல இது அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்தான் நாகராஜ்.

கடைசியாக நாகராஜிடம் வந்தான் கமலேஷ்.

‘‘நாகராஜ் நீ.. ஒங்க வீட்டுல எத்தனையாவது புள்ள..’’ என்று கமலேஷ் கேட்டான்.

‘‘நான் ஒருத்தன் தான் பையன் ..’’ என்று நாகராஜ் சொன்னான்.

‘‘நீ.. ஒருத்தன் மட்டும் தானா ..?’’

‘‘ஆமா..’’ என்று தலையாட்டினான் நாகராஜ்.

‘‘பாத்தீங்களா..?’’

‘‘நாமெல்லாம் நம்ம வீட்டுல.. மூணாவது.. நாலாவது.. பிள்ளைங்க.. நமக்கு அண்ணன் தம்பிகள்ன்னு நிறைய பேரு இருக்காங்க.. ஆனா..! நாகராஜ் வீட்டுல பொம்பளைங்க இருந்தாலும் அவன் ஒருத்தன் தான் ஆம்பளைப்பய.. அவன் ஒருத்தன் மட்டும் தான் வாரிசு.. அதனால் தான் அவங்க அம்மா.. அவன் மேல இவ்வளவு பாசமா ..ஒரு பொஸஸிவ்னஸ்ஸோட.. இருக்காங்க.. ஒரு புள்ள இருக்கிற எல்லா வீட்டுலயும் இப்படித்தாண்டா..’’ என்று கமலேஷ் சொன்னான்.

‘‘டேய்.. நீ ஒத்தப்பயலாடா..’’ என்று பிரபு கேட்க

‘‘ஆமா..’’ என்று தலையாட்டினான் நாகராஜ்.

நண்பர்களின் கூட்டம் முடித்து வீடு திரும்பினான் நாகராஜ்.

அதுவரையில் வாசலிலேயே நின்றிருந்தாள் அவன் அம்மா அம்புஜம்.

அவன் வீட்டிற்குள் வரும் காலடிச்சத்தம் கேட்டதும் நாகராஜை நோக்கி ஓடிவந்தாள் அம்புஜம்

‘‘ஐயா.. வந்திட்டயா..? வா.. ராசா வா.. சாப்பிடு ..’’ என்று பறந்தாள் அம்புஜம்.

‘‘இல்லம்மா.. நான் பிரண்ட்ஸ் கூட சாப்பிட்டேன் ..’’

‘‘எப்ப..?’’ அம்புஜத்தின் கேள்வி நீண்டது.

‘‘இப்பத்தான்மா.. ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி சாப்பிட்டேன்..’’ என்று நாகராஜ் சொன்னான்.

‘‘ரெண்டு மணி நேரமாச்சே பசிக்காதா..? ஒனக்காகவே இறா புட்டு , மத்தி மீனு பெறட்டுனாப்ல குழம்பு வச்சுருக்கேன்.. நீ தான் மீன் நல்லா சாப்பிடிவியே.. சாப்பிடுய்யா..’’ என்றாள் அம்புஜம்.

‘‘இல்லம்மா.. வேணாம் என்னால இப்ப சாப்பிட முடியாது . வேணாம்..’’ என்று நாகராஜ் எவ்வளவு சொல்லியும் அம்புஜம் கேட்கவே இல்லை

‘‘கொஞ்சம்பா.. மீனு உனக்கு தான் ரொம்ப பிடிக்குமே..’’ என்று மறுபடியும் அம்புஜம் நச்சரிக்க ஆரம்பித்தாள்.

‘‘யம்மோ.. நீ.. சும்மாவே இருக்கமாட்டியா..? அதான் நான் சாப்பிட்டுட்டேன்னு சொல்லிட்டேனே. அத விட்டுட்டு எப்பப்பாத்தாலும் என்னைய ஏன்..? இப்பிடி தொந்தரவு பண்ற..?’’ என்று நாகராஜ் சொன்னான்.

‘‘நீ.. ஒத்தப்புள்ளைய்யா.. ஒன்னைய விட்டா எங்களுக்கு யார்.. இருக்கா நீ.. தானே எங்களோட சாமி..’’ என்று அம்புஜம் சொல்ல

‘‘அதுக்காக என்னோட விருப்பத்துக்கு எதிர்ப்பா பண்ணக்கூடாதும்மா.. நான் தான் ஒன்னோட புள்ள. உங்களோட வாரிசு.. இதுல எந்த மாற்றமும் இல்ல.. நான் தான் உங்க கூடவே இருக்கேனே.. அப்புறம் எதுக்கு என்னைய இவ்வளவு டார்ச்சர் பண்ணனும். நான் உங்களுக்கு ஒரு புள்ளை தான். அதுக்காக ரொம்ப அன்பு செலுத்தி என்னைய கொன்னுராதீங்க..’’என்று நாகராஜ் சொல்ல அத்தனைக்கும் தலையாட்டினாள் அம்புஜம்.

‘‘ போய்த் தூங்கிறேன் ..’’ என்று அம்புஜத்திடம் சொல்லிவிட்டு தூங்கப் போனான் நாகராஜ் . அதற்குள் நாகராஜின் அப்பாவும் வந்துவிட்டார்.

‘‘என்ன பையன் சாப்பிட்டானா..?’’ என்று அப்பா கேட்டார்.

‘‘இல்ல.. சாப்பிடல..?’’ என்றாள் அம்புஜம் .

‘‘ஏன்..?’’ என்று அப்பாவும் கேள்வி கேட்க அம்மா ,அப்பா இருவரும் நாகராஜ் சாப்பிடாததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டனர்.

*மறுநாள்..

காலை மீன் குழம்பு மீனை அத்தனையும் அள்ளிக்கீழே போட்டுவிட்டு நாகராஜின் அம்மா மறுபடியும் மகன் சாப்பிடவில்லை என்று எண்ணி திரும்பவும் மீன் வாங்கி அன்றும் சமைத்தாள் .

‘‘நாகராஜ் நேத்து நீ.. மீன் சாப்பிடல.. அதனால இன்னைக்கு நேத்த விட நல்லா சமைச்சிருக்கேன் சாப்பிடுடா..’’ என்று அம்புஜம் சொன்னாள்.

அப்போது அப்பா அங்கு வந்தார்.

‘‘ஆமா.. சாப்பிடு நீ.. நேத்து நீ மீனு சாப்பிடலயாமே.. இப்ப சாப்பிடு..’’ என்ற அப்பாவும் சொன்னார்.

‘ஏண்டா நாம ஒரு ஆண்மகனா பிறந்தோம். இவங்களோட பெரிய டார்ச்சரா போச்சே..’ என்று நாகராஜ் நினைக்க

அம்மாவும் அப்பாவும் நாகராஜூக்கு சாப்பாடும் மீனும் அள்ளி அள்ளி தட்டில் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *