செய்திகள்

எனது குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்: அமைச்சர் பி.தங்கமணி உறுதி

நாமக்கல், டிச.22

எனது குடும்பத்தில் இருந்து என்னை தவிர இனி யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என அமைச்சர் பி.தங்கமணி உறுதிபட கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலம்பாளையத்தில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்பபிரிவு மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

பொதுமக்களின் தேவைகளை அறிந்து அண்ணா தி.மு.க. அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சியாக, சாமானியர் ஆளும் ஆட்சியாக இருப்பதால் இளைஞர்களும், பொதுமக்களும் இந்த கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

2021-ல் மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமையும் என்பதற்கு இதுவே உதாரணம். நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் வருகிற மே மாதம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். கல்லூரி கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல்லில் சட்டக்கல்லூரியும், குமாரபாளையத்தில் அரசு பொறியியல் கல்லூரியும் அமைய உள்ளது.

அண்ணா தி.மு.க. தலைமை அறிவித்தால் குமாரபாளையம் தொகுதியில் அண்ணா தி.மு.க. சார்பில் நான் போட்டியிடுவேன். ஆனால் ஒரு சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். எனது மகனை இந்த தொகுதிக்கும், நான் பரமத்திவேலூரிலும் போட்டியிடுவதாகவும் தகவல் வெளியானது. என்னுடைய குடும்பத்தில் இருந்து யாரும் இனிமேல் அரசியலுக்கு வரமாட்டார்கள் என அறுதியிட்டு கூறுகிறேன்.

எந்த நேரத்திலும் என்னை பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள். நான் தொண்டர்களையும், கட்சியையும் நம்பித்தான் செயல்பட்டு வருகிறேன். இளைஞர்களை கட்சியில் சேர்ப்பதற்காக தான் எனது மகன் பணியாற்றி வருகிறார். அரசியல் பதவி, கட்சி பதவிக்கு எனது மகன் வரமாட்டார். எனது குடும்பத்தில் இருந்து என்னை தவிர இனி யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என உறுதி பட கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *