செய்திகள்

தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கொரோனா: 9 மாதங்களுக்கு பிறகு சென்னையில் உயிரிழப்பு இல்லை

சென்னை, ஜன. 25–

தமிழகத்தில் இன்று புதியதாக 569 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

‘தமிழகத்தில் நேற்று ஆண்கள் 341, பெண்கள் 228 என 569 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 168 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 740 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 417 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 17 ஆயிரத்து 520 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 225 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 642 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 ஆயிரத்து 904 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதியவர்கள் உட்பட 7 பேர் உயிரிந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 316 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 085 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 195, கோவையில் 54 ஆயிரத்து 021, செங்கல்பட்டில் 51 ஆயிரத்து 257, திருவள்ளூரில் 43 ஆயிரத்து 399 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது. 253 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 56 லட்சத்து 40 ஆயிரத்து 385 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 62 அயிரத்து 619 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

9 மாதங்களுக்கு பிறகு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் தினமும் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தொற்றின் பாதிப்பு, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. தினமும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிந்தனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தும், உயிரிழப்பு 30க்கும் அதிகமாகவும் பதிவானது.

ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் படிப்படியாக குநைந்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் 153 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 586 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னை, திருநெல்வேலியில் தலா ஒருவர் மட்டுமே உயிரிழந்தனர். நேற்று சென்னையில் 168 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 569 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கோவையில் 2 பேர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திருப்பூரில் தலா ஒருவர் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் யாரும் உயிரிழக்கவில்லை. 9 மாதங்களுக்கு பின்னர் நேற்று சென்னையில் இறப்பு பதிவாகவில்லை.

மேலும் 5 பேருக்கு புதிய கொரோனா

இதற்கிடையில், பிரிட்டனில் இருந்து வந்த 26 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பு இருந்த 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களது சளி மாதிரிகளை புனே, பெங்களூர் ஆய்வகங்களுக்கு அனுப்பு பரிசோதனை செய்ததில், 4 பேருக்கு புதிய தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், மேலும் 5 பேருக்கு புதிய தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *