உடல் வெப்பநிலை, இருதயத் துடிப்பை கண்காணிக்கும் புதிய செல்போன்:
ஐடெல் நிறுவனம் அறிமுகம்
* 22 ஆயிரம் பேரின் எண்களை பதிவேற்றம் செய்யலாம்
* ஒரு தடவை சார்ஜ் செய்தால் 4 நாட்களுக்கு வரும்
சென்னை, டிசம்பர்.11
தொற்று பரவும் இந்த காலகட்டத்தில் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து கொள்ளும் வசதியுடன் ஐடெல் நிறுவனம் புதிய செல்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.1049 ஆகும்.
உடல் வெப்பநிலையை எந்த நேரத்திலும் எங்கேயும் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும் முதலாவது மொபைல்போன் இதுவாகும். உலக அளவில் உடல் வெப்பநிலை கண்காணிப்பு என்பது இயல்பானதாக உள்ள இந்த சூழலில் தயாரிப்புகளை வாங்க விரும்பும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் சிறந்ததாக இருக்கும்.
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்நிறுவனம் ஐடெல் பிட் மாடல் போன்களை அறிமுகம் செய்தது. அதன் அடுத்தகட்டமாக தற்போது ஐடெல்–ஐடி2192டி தெர்மோ எடிஷன் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. இது சிறு நகரங்களில் உள்ள மக்களுக்கும் சுகாதார கண்காணிப்பு நன்மைகளை வழங்கும். அங்கு உள்ளவர்கள் சுகாதாரம் தொடர்பான கூடுதல் மருத்துவ சாதனங்களை வாங்குவது என்பது சாத்தியமில்லை. இதை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் போன்களில் மற்றொரு பிரத்தியோக தயாரிப்பான ‘ஐடி2192 ஹார்ட் ரேட் எடிஷன்’ வாடிக்கையாளர்களின் இருதயத் துடிப்பை கண்காணிக்க உதவுகிறது.
புதிய அறிமுகம் குறித்து பேசிய டிரான்சிஷன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரிஜீத்தலபத்ரா கூறுகையில்
தனித்துவமான மதிப்புமிக்க விஷயங்களை சேர்ப்பதன் மூலம் நுகர்வோருக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையில் ஐடெல் எப்போதும் ஈடுபட்டு வருகிறது. மேலும் தற்போதைய புதிய வரவானது தொற்று நோய்களின் போது எங்களின் நுகர்வோர் மிகவும் பாதுகாப்பாக இருக்க நாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் முக்கிய சான்றாகும். ஐடெல் -பிட் மாடல் போன்கள் சிறு நகரங்களில் வசிக்கும் மக்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த விலையில் அவர்களுக்கான அடிப்படை சுகாதார கண்காணிப்பு நன்மைகளையும் வழங்குகிறது என்றார்.
வாடிக்கையாளர்கள் கேமராவுக்கு கீழே பொருத்தப்பட்டுள்ள தெர்மோ சென்சாரில் மணிக்கட்டை வைக்கும்போது, அது செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அளவில் உடல் வெப்ப நிலையை காண்பிக்கிறது. மேலும் இது பெரிய போன் புக் வசதியை கொண்டுள்ளது. இதில் புகைப்படம் மற்றும் லோகோவுடன் 2 ஆயிரம் பேரின் மொபைல் எண்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பல மொழிகள் பேசும் இந்திய மக்கள் வசதிக்காக இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை 8 பிராந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும். இது 1000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. ஒரு முறை போனை சார்ஜ் செய்தால் 4 நாட்கள் வரை இந்த போனை பயன்படுத்தலாம்.