சிறுகதை

தாயும் தண்டனையும் | செருவை நாகராசன்

Spread the love

“அம்மா உங்க பிள்ளையைக் கண்டிச்சு வைக்க முடியுமா முடியாதா…? இங்கே வெளியில் வந்து பாருங்கம்மா. உங்க பிள்ளையினுடைய அட்டகாசத்தை…”

வாசலில் யாரோ சத்தம் போடுவது கேட்கவே உள் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்த காளியம்மாள் உடனே அங்கு விரைந்தாள்.

அங்கே காமாட்சியையும் மண்டயில் குருதி வழிய அவள் பக்கத்தில் நின்ற பையனையும் பார்த்ததும் அவள் உடல் நடுநடுங்கிப் போய்விட்டது.

“கேட்க யாருமில்லேன்னு உங்க பையன் இப்படி அடிக்கிறானா…? அவன் எத்தனை பையன்களைக் கல்லால் அடிச்சாலும் கண்டுக்கவே மாட்டேங்கிறீங்களே… உங்களுக்கே இது ஞாயமா…? என்றாள் கோபமான குரலில் காமாட்சி.

இந்த முறையீடு காளியம்மாவுக்கு ஒன்றும் புதிதல்ல. நாள்தோறும் அவளுடைய மகன் மணி தெருப் பயன்களை அடிப்பதும் பிறகு இந்த முறையீட்டை அவள் கேட்பதும் வழக்கமாகிவிட்டது.

இன்றும் அப்படித்தான். மணி அடுத்த வீட்டுப் பையனிடம் கொஞ்சம் அதிகமாகவே விளையாடிவிட்டான். இதோ அவன் தாயார் காமாட்சியும் காளியம்மாள் வீட்டுக்கு வந்துவிட்டாள்.

“அம்மா! உங்க பிள்ளையை வளர்ப்பதாயிருந்தால் வெளியில் விடாமல் வீட்டுக்குள்ளேயே வச்சு வளருங்க. இல்லே பிள்ளயின் கையை அடக்கிவைங்க. அப்பா இல்லாத பிள்ளைன்னு வளர்க்கிறீங்க… அதனோட தீமை இப்ப உங்களுக்கு தெரியாது… பின்னாடிதான் உணருவீங்க… என் பிள்ளை, உங்க பிள்ளைக்கிட்ட அடிவாங்கணும்கிறது ஒண்ணும் தலைவிதியில்லே…” என்று பட படவெனக் கூறிவிட்டுக் காமாட்சி தன் பையனை அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.

அதன் பிறகு காளியம்மாவிற்கு வேலையே ஓடவில்லை. ‘ஏன் இவனை நான் இப்படி வளர்த்தேன்? அவன் அப்பா உயிரோடு இருந்தால் இவனை இப்படி வளர்த்திருப்பாரா? இவன் திருந்தவே மாட்டானா? கவலையில் மூழ்கினாள் காளியம்மாள்.

அன்று இரவு ஏழு மணி இருக்கும். மெல்ல அடியெடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைந்தான் மணி. அவனை எதிர்பார்த்து நின்ற காளியம்மாள்வின் கண்களில் தீப்பொறி பறந்தது.

“வாடா இங்கே” என்றாள் குரலில் கோபத்துடன். தயங்கித் தயங்கி மெல்ல அருகில் வந்தான் மணி.

“அடுத்த வீட்டுப் பையனை நீ அடித்தாயா…?”

“அதும்மா வந்து…”

மணி சொல்லி முடிப்பதற்குள் அவன் தோளைப் பற்றிக் குலுக்கி, “நீ அவனை கல்லால் அடித்தாயா? இல்லையா? என்று கேட்பதற்கும் காலில் இரண்டு சொட்டு நீர் விழுவதற்கும் சரியாக இருந்தது. மணியின் கண்ணீர்த் துளிதான் அது!

“நீ திருந்தவே போறதில்லே… தண்டனையைத் தவிர வேறு வழியே எனக்குத் தெரியலே…” என்றவள், ஒரு தீர்மானத்துடன் அவன் கையைப் பற்றி தரதரவென இழுத்துக் கொண்டு அடுக்களை நோக்கிச் சென்றாள்.

அடுப்பில் நெருப்புத் துண்டங்கள் செந்நிறத்தில் ஜொலித்தன. அதில் மூழ்கிக் கிடந்தது ஒரு பித்தளைக் கரண்டி. அதன் அடிப்பாகம் சூடேறிய நிலையில் பழுத்துப் போய் இருந்தது.

அவள் உறுதியான மனத்துடன் கரண்டியைக் கையிலெடுத்தாள். செஞ்சூட்டு நிலையில் தீப்பிழம்பாய் மின்னிய அதன் முனையைக் கண்டதும் மணி வீறிட்டு அலறினான்.

“அம்மா வெண்டாம்மா… அம்மா வேண்டாம்மா… இனிமே தப்பே செய்ய மாட்டேன்மா…” என்று மணி கெஞ்சினான்.

“இப்படியே தான் தினம் நீ சொல்றே… அடுத்த வீட்டு பசங்களை அடிக்காமல் இருக்கியா என்ன…?

இனிமே அடிக்க மாட்டேம்மா… இனிமே அடிக்க மாட்டேம்மா…” வாய்விட்டு அலறினா மணி. தனது தாய் இப்படி ஒரு நாளும் தண்டனை தர முன் வந்ததில்லையே என்ற அதிர்ச்சி அவனுக்கு. பயத்தினால் அவன் உடலெங்கும் வியர்வை வெள்ளம்.

ஆனால்

அவனே எதிர்பாராத வகையில் துணிந்து சட்டென்று அந்தக் காரியத்தை செய்தாள் காளியம்மாள்.

கரண்டியின் சூடான முனை அவள் கைகள் இரண்டையும் பதம் பார்த்தது. இரண்டு இடங்களில் திப்புண் அவள் தோளைக் கருக்கியது.

சில வினாடிகளில் நடந்து முடிந்துவிட்ட கோரத்தினைக் கண்டு அதிர்ச்சியிம் நிலை குலைந்து போனான் மணி. “அம்மா! என்னம்மா இது. இப்படி ஒரு காரியம் பண்ணீட்டீங்க… நான் தப்பு செய்ய, தண்டனை உங்களுக்கா…? என்னை மன்னிச்சிடுங்கம்மா… இனிமே தப்புசெய்ய மாட்டேன். இனிமே ஒழுங்காகப் பள்ளிக்கூடம் போவேன்… நல்ல பையன்னு பேர் எடுப்பேன்… என்னை நம்புங்கம்மா” என்று தாயின் கால்களில் நெடுஞ்சான் கிடையாக விழுந்து கதறியழுதான் மணி.

தனது ஒரே மகனின் தோள்களைப் பற்றித் தூக்கித் தன் நெஞ்சோடு பாசத்துடன் இறுக அணைத்துக் கொண்டாள். “உன்னை அடிக்க எனக்கு மனசு வரலைடா ராஜா… நீ திருந்தனும்னு தான் தண்டனையை நான் ஏத்துக்கிட்டேன்… எனக்கு ஒடம்புல பட்ட சூட்டோட வலி தெரியலே… நீ திருந்திட்டதை நெனச்சுதான் ஆனந்தமா இருக்கு எனக்கு” என்றாள் நெஞ்சம் நிறைந்த பூரிப்புடன் காமாட்சி.

தாய் ஒரு தெய்வம் என்பதையும் தாய் தருகிற தண்டனை வித்தியாசமானதுதான் என்பதையும் அந்தச் சிறிய வயதிலேயே புரிந்துகொண்டான் மணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *