செய்திகள்

திடீர் போராட்டத்தில் குதித்த பிரதமர் மோடியின் சகோதரர்

லக்னோ, பிப். 4–

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, திடீரென லக்னோ விமான நிலையத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, லக்னோ விமான நிலையத்துக்கு, இண்டிகோ விமானத்தில் மாலை 4 மணிக்கு வந்ததாக விமான நிலையத்தின் கூடுதல் பொது மேலாளர் சவுதரி சரண் சிங் கூறி உள்ளார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பிறகு அவர் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சுமார் 1.30 மணி நேரத்துக்கு பிறகு அவர் புறப்பட்டுவிட்டார்.

வழக்கு பதிய முயற்சி

விமான நிலையத்தில் பிரகலாத் மோடி செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் இங்கு வந்தபிறகு, என்னை வரவேற்க வந்த எனது ஆதரவாளர்கள் லக்னோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு வழக்கு பதிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின்படி அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்ததாகவும் பிரகலாத் மோடி கூறுகிறார். பிரதமர் அலுவலகத்தின் உத்தரவு நகலை காட்டாவிட்டால் உச்ச நீதிமன்றத்துக்கு போகப்போவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், பிரகலாத் மோடி சொல்வது போல எதுவும் நடக்கவில்லை என காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *