செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் மழை – வெள்ளம் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம், இன்சூரன்ஸ் தொகை

திருவாரூர் மாவட்டத்தில் மழை – வெள்ளம் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம், இன்சூரன்ஸ் தொகை:

விவசாயிகளிடம் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன்,இரா.காமராஜ் நேரில் உறுதி

பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்; நிவாரண உதவி வழங்கினர்

திருவாரூர், டிச.6–

திருவாரூர் மாவட்டத்தில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் தொகை இரண்டும் வழங்க முதல்வர் உறுதி அளித்திருப்பதாக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், இரா.காமராஜ் தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை கண்டறிந்து உரிய மீட்பு படிகளையும் நிவாரண உதவிகளையும் மேற்கொள்வதற்காக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் ஆகிய இருவரையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார்.

இதனடிப்படையில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன் மற்றும் இரா.காமராஜ் ஆகிய இருவரும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இன்று காலை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் என்ற இடத்தில் மழை பாதிப்புகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அங்கிருந்த பொதுமக்களிடம் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பழையங்குடி, தண்டலச்சேரி, சாய்ராம் காலனி, அபிசேக கட்டளை, நுணாகாடு உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு போர்வை, பாய், பழம் மற்றும் ரொட்டி உள்ளிட்ட உதவிகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து பாமணி, எழிலூர், மருதாவனம், மாங்குடி, அம்மலூர், பாண்டி, விளாங்காடு ஆகிய இடங்களிலும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். மேலும் முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை, வடகாடு கோவிலூர், ஏத்தக்குடி உள்ளிட்ட இடங்களிலும் மழை பாதிப்புகளை அமைச்சர்கள் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

54,627 ஹெக்டேர் பயிர்கள் பாதிப்பு

பின்னர் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், இரா.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அடுத்தடுத்து உருவான இரண்டு புயல்களால் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு மீட்பு பணி மற்றும் நிவாரண உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இளம் பயிர்கள் தண்ணீரால் சூழப்பட்டும், நீரில் முற்றிலுமாக மூழ்கியும் உள்ளது. முதற்கட்டமாக இதுவரை 54 ஆயிரத்து 627 ஹெக்டேர் பரப்பில் சம்பா பயிர்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கணக்கெடுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதுபோல் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் குடியிருந்த பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டு 211 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் 14 ஆயிரத்து 118 குடும்பங்களைச் சேர்ந்த 42,000 பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளை உணவும் தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக எடுக்கப்பட்ட கணக்கின்படி முற்றிலுமாகவும், பகுதியாகவும் 1,606 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளும் கணக்கு எடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும். பயிர் இன்சூரன்ஸ் தொகையும் பெற்று வழங்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்கள். மேலும் வீடு மற்றும் கால்நடைகளை இழந்த பொது மக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் வழங்கப்படும்.

ஆறு, வாய்க்கால் தூர் வாரப்படும்

பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். மழைநீரால் பாதிப்புக்கு ஆளான அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி எஙங்களிடம் உறுதி அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டுதோறும் தொடர்ந்து தூர்வாரும் பணிகள் மற்றும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மிகப்பெரிய மழை பெய்தும் மக்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடிந்தது. இது போல் வரும் ஆண்டும் விடுபட்ட ஆறு மற்றும் வாய்க்கால்களும் தூர்வாரப்படும்.

இவ்வாறு அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், இரா.காமராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது மாவட்ட கலெக்டர் சந்தா, கூடுதல் ஆட்சியர் கமல்கிசோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, ஒன்றியக்குழுத் தலைவர் கனி அமுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டாட்சியர் ஜெகதீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *